Published : 15 May 2016 01:28 PM
Last Updated : 15 May 2016 01:28 PM
இளம் வயதிலேயே பெண்களுக்கு மணம் முடிப்பது குறித்தும், நாற்பது வயதுக்குள் ஒரு பெண்ணுக்கு எல்லாமே முடிந்துவிட வேண்டும் என்ற இந்தச் சமூகத்தின் பொதுவான கருத்து குறித்தும் கடந்த மே 8-ம் தேதி வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் எழுதியிருந்தார் தருமபுரியைச் சேர்ந்த மாணவி தாரணி தேவி. ‘நாற்பதுக்குப் பிறகு வாழ்க்கை இல்லையா?’ என்ற அவரது கேள்விக்கு நம் வாசகர்கள் பலரும் தங்கள் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்கள் உங்கள் பார்வைக்கு...
படிப்பதும், வேலைக்குச் செல்வதும் பெண்களின் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும். குடும்ப அமைப்பில் மனித உறவுகள் குறித்த சிந்தனையோடு பொருளாதாரத் தன்னிறைவு பெற்ற பிறகு மணம் முடித்தால் வயது ஒரு தடையே இல்லை.
- வி. மோகனராணி, ஈரோடு.
பெண்களின் மேன்மை தெரியாதவர்கள்தான் பெண்ணுக்கு நாற்பதுக்கு மேல் எதுவும் இல்லை என்று சொல்வார்கள். காலம் மாறிக்கொண்டேவருகிறது. எதையும் சாதிக்க வயது ஒரு தடையே இல்லை. அதற்கு அவள் குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை.
- தாரா ரமேஷ், புதுச்சேரி.
குறிப்பிட்ட வயதுக்கு மேல் குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்படும் என்பதால்தான் ‘பருவத்தே பயிர் செய்’ என்றார்கள். அப்படியென்றால் பிள்ளை பெறுவது மட்டும்தான் பெண்களின் லட்சியமா என்று கேட்கலாம். இல்லை, அது மட்டுமல்ல அவளுடைய லட்சியம். குடும்பம், குழந்தை வளர்ப்பு இவற்றைத் தாண்டி ஒரு பெண் சாதிக்க எத்தனையோ உண்டு. பெரும்பாலான வீடுகளில் பெண்ணின் முன்னேற்றத்துக்குத் திருமணம் ஒரு தடையாக இருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இனிவரும் காலத்திலாவது இந்த நிலை மாற வேண்டும்.
- ஆர். ஹேமா, வேலூர்.
நாற்பதுக்குப் பிறகு வாழ்க்கை முடிந்துவிடுவதெல்லாம் அந்தக் காலம். வதவதவென்று பிள்ளைகளைப் பெற்று, தன் காலத்துக்குள்ளேயே அவர்களுக்கு மணம் முடித்துவிட வேண்டும் என்ற நிலை இப்போது மாறிவிட்டது. கல்வியும் அது தருகிற தெளிவும் பெண்ணுக்கு மனப்பக்குவத்தைத் தருகின்றன. அதனால் பெற்றோரை எதிர்பார்க்காமல் தன் வாழ்க்கையை முடிவெடுக்கும் உரிமையும் திறமையும் இன்றைய பெண்களுக்கு உண்டு.
- வே.தேவஜோதி, மதுரை.
குடும்பம், குழந்தைகள் என்ற வட்டத்துக்குள் மட்டுமே வாழ பெரும்பாலான பெண்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். கல்வி, வறுமை, வேலையின்மை இவைதான் இதற்கு முக்கியமான காரணங்கள். பெண்ணுக்குத் தேவையான கல்வி தந்து, அவளைப் பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு பெறவைத்தாலே போதும். எந்த வயதிலும் சாதிப்பாள்.
- பா. சுபிசுதா, காவேரிப்பாக்கம்.
அவசரமாக மணம் முடித்து, குழந்தை பெற்று, அவர்களுக்கும் அவசரமாக மணம் முடிக்கும் காலம் இன்று மாறிவிட்டது. இன்று பெண்கள் முன்னேற ஓரளவு வசதியும் வாய்ப்பும் இருக்கிறது என்றாலும் பல பெண்கள் தங்களைப் பிணைத்திருக்கும் அறியாமை இருளிலிருந்து வெளியே வரத் தயங்குகிறார்கள். குடும்பக் கடமைகள், அலுவலகப் பணி அனைத்தையும் நிறைவு செய்த பின் ஆணுக்குக் கிடைக்கிற ஓய்வு பெண்ணுக்குக் கிடைப்பதில்லை. தன் குழந்தைகளுக்கு மணம் முடித்துவைத்து, அவர்களுடைய குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் வேலை திணிக்கப்படுகிறது. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அறுபது வயதுக்குப் பிறகும் தவிக்கும் பெண்ணின் மனவோட்டங்களை அனைவரும் புரிந்துகொண்டால்தான் பெண்களுக்கு நிம்மதி.
- லலிதா சண்முகம், திருச்சி.
நாற்பதிலேயே பேரக் குழந்தைகளைப் பெற்றுவிட்ட நிலை இன்று இல்லை. நாற்பதுகளில்தான் இன்றைய பெண்களுக்குப் பல்வேறுவிதமான பிரச்சினைகளுடன் புது வாழ்க்கை தொடங்குகிறது. குடும்பம், வேலை, பதின்ம வயது குழந்தைகள், உளவியலோடு உடல் சார்ந்த சிக்கல்கள் என்று அவள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். ஆனால் இன்றைய பெண்கள் பொருளாதாரத் தன்னிறைவுடன் தங்கள் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் துணிச்சலுடன் செயல்படுகிறார்கள்.
- ஜே.சி. ஜெரினாகாந்த், சென்னை.
உடலுக்குத்தான் வயது. மனதுக்கு வயதே இல்லை. நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் வயது. என் அம்மா 75 வயதுக்கு மேல் சம்ஸ்கிருதம் கற்று அதில் பண்டிட் ஆனார். இன்று பெரும்பாலான வீடுகளில் ஒன்றோ இரண்டோதான் பிள்ளைகளை வைத்திருக்கிறார்கள். அதனால் அவர்களை நல்ல நிலைக்குக் கொண்டுவந்த பிறகே மணம் முடிக்கிறார்கள்.
- உஷா முத்துராமன், திருநகர்.
திருமணம் ஒரு ஆணின் முன்னேற்றத்தில் எந்தத் தடையையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் திருமணம் நிச்சயிக்கப்படும்போதே திருமணத்துக்குப் பிறகு தன் மனைவி வேலைக்குச் செல்வதா, வேண்டாமா என்பதை ஆண்தான் முடிவு செய்கிறான். தனக்கு எது தேவை என்பதைக்கூட ஒரு பெண் தீர்மானித்துவிட முடியாத இறுக்கமான சூழலே இங்கு நிலவுகிறது. தடைகளைத் தாண்டி வேலைக்குப் போகும் பெண்கள் வீட்டு வேலை, அலுவலக வேலை என்ற இரட்டைச் சிலுவைகளைச் சுமக்கிறார்கள். அந்தச் சிலுவைகளில் அவர்கள் தங்களைத் தாங்களே அறைந்துகொள்கிறார்கள்.
எப்போது பெண்களின் சுமைகளைப் பகிர்ந்துகொள்ள ஆண்களும் முன் வருகிறார்களோ அப்போதுதான் பெண்ணுரிமைக்கான முழு அர்த்தமும் தெளிவுபடும். அந்த மாற்றம் இயல்பானதாக இருக்க வேண்டுமே தவிர வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்கக் கூடாது. நாம் நம்மை உற்சாகமாக, சந்தோஷமாக வைத்துக்கொள்ள வயது ஒரு தடையே இல்லை.
- தேஜஸ், கோவை.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் பெண்ணுரிமை பற்றி யோசிப்பதும் கேள்வி எழுப்பியிருப்பதுமே கால மாற்றத்துக்கு சாட்சி. இந்தக் கேள்விகளை நம் அம்மாக்கள் நம் வயதில் இருக்கும்போது கேட்டிருக்கவே முடியாது. பாட்டிகள் நிலை இன்னும் மோசம். பெண்ணுரிமை என்ற சொல்லைக்கூட அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அதனால் நம் நிலை குறித்து நம்பிக்கையின்மை வேண்டாம்.
அம்மாக்களுக்கு நாற்பது வயதிலேயே எல்லாம் முடிந்துவிட நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம். பிள்ளையைப் பெற்றெடுக்கும் வலி, உடல் பிரச்சினைகள், தினம் அவள் சந்திக்கும் மனப் போராட்டங்கள் அனைத்துக்கும் அவள் தெய்வத் தன்மைக்குப் பொருத்தமானவள்தான். இன்னும் சொல்லப் போனால் தெய்வங்களைவிட ஒரு படி மேலேயே வைக்கலாம். ஆனால் அவள் தியாகங்களையும் ஆசைகளையும் தெய்வத்தனங்களில் சேர்த்துவிடுவது நியாயம்தானா? நமக்குப் பிடிக்காத, அம்மாவுக்கு மிகவும் பிடித்த பதார்த்தம் நம் சாப்பாட்டு மேஜையில் என்றாவது நாம் வரவிட்டதுண்டா? அவளது மாதவிடாய் தேதி எத்தனை மகள்களுக்குத் தெரியும்? அப்படி ஒன்று அவளுக்கு இருக்குமென்றாவது மகன்களுக்குத் தெரியுமா? ஆனால் நமக்குச் சின்னத் தலைவலி என்றாலும் நாம் கேட்காமலேயே இஞ்சி டீ நமக்கு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். வரவும் செய்கிறது. லேசான காய்ச்சல் என்றாலும் அம்மா மடி தேவைப்படுகிறது. காரணம் அவள் இலவசமாகச் சேவை செய்யக் கடமைப்பட்டவள் என்ற எண்ணம் நம் ரத்தத்தில் ஊறியிருக்கிறது. அதை அவள் செய்ய இயலாத சூழ்நிலையில் இருக்கும்போது, கடவுளாகப் பார்க்கப்பட்டவள் ஒரேயடியாயத் தரைமட்டமாக்கப்படுவாள்.
இவையெல்லாம் உன் கடமைகள் என்று இலக்கணம் வகுத்ததில் சமூகத்தின் பங்கு எவ்வளவு இருக்கிறதோ, அதற்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல, மகள்களும் மகன்களும் செலுத்தும் ஆதிக்கம். தாயாக, மனைவியாக, சகோதரியாக இருப்பவளை நாம் புரிந்துகொள்கிற போது நாற்பது வயதில் அவளுக்கு வாழ்க்கை முடிந்துவிடாது. புதிய நிறத்தில் புதிய தடத்தில் புத்துணர்வோடு பயணிக்க நாம் பக்க பலமாக நிற்போம்.
ராஜிசங்கர்.
பாலியல் வன்கொடுமைகள், காதல் திருமணம் குறித்த அச்சமே பெற்றோருக்கு இப்படியொரு எண்ணத்தைத் தூண்டுகிறது. ஆணாதிக்கம் மலிந்த இச்சமூகத்தில் மிகச் சிலரே பெண்களைப் புரிந்துகொள்கின்றனர். லட்சியம், வாழ்க்கை என்பது ஆண்களுக்கு மட்டும் இல்லை. அது இருபாலருக்கும் உண்டு என்பதைப் பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு உணர்த்த வேண்டும்.
- இ.நேதாஜி சுபாஷ், பாலக்கோடு
ஐம்பது வயதிலும் இளைஞன் என்ற போர்வையில் ஆண் நடமாடும் போது நாற்பது வயதுக்கு மேல் சகலவிதத்திலும் ஒடுக்கப்படுகிறாள் பெண். இன்று பல கல்லுரி மாணவிகள் படித்து ஏதோ ஒரு வேலை கிடைத்தவுடன் கல்யாணம் செய்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். படித்தும்கூட இப்படியொரு தெளிவு! பெண் என்றாலே சமையல், கோலம் தவிர வேறெதுவும் தேவையில்லை என்பது ஆண்களின் எண்ணம் மட்டுமல்ல, பெரும்பாலான பெண்களின் எண்ணமும்கூட. அரசியல், பொருளாதாரம் எல்லாம் பெண்ணுக்குத் தேவையில்லை என்று நினைப்பவர்கள் ஏராளம். பெண்கள் முதலில் தங்களுக்குள் மாற்றத்தைத் தொடங்க வேண்டும். ஆண்களும் பெண்களின் போட்டியை நேருக்கு நேர் சந்திக்கத் தயாராக வேண்டும்.
- வீ. யமுனா ராணி, சென்னை.
நாற்பது வயதில் எல்லாமே முடிந்துவிட்டது என்ற அபத்தமான எண்ணத்தை வளர்த்துக்கொள்வது பெண்களாகவே இருப்பது கொடுமை. தன்னிடம் உள்ள திறமையை உணராத அறியாமைதான் இதற்குக் காரணம். தான் இல்லையென்றால் குடும்பமே இல்லை என்ற புரிதல் இன்று பெரும்பாலான பெண்களுக்கு இல்லை. தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுகூட பலர் நினைப்பதில்லை. ஏதோ அவள்தான் அந்தக் குடும்பத்தைச் சார்ந்திருக்கிறாள் என நம்பும் அறியாமையை எப்படி ஒழிப்பது? சமயங்களில் தன்மானத்தைக்கூட பலி கொடுத்து தன் சக்தி புரியாமல் பரிதாபமாக நிற்கும் இவர்களை என்ன செய்வது? தன் சக்தியை உணராத யானைகளாக இருக்கிற பெண்கள், தங்களை உணர்ந்து செயல்படும் நாளில் நாற்பது என்பது வெறும் எண் மட்டுமே!
- ஜே. லூர்து, மதுரை.
அறுபது வயது பாட்டியை விட்டு விடுவோம், நாற்பது வயது அம்மாவை விட்டுவிடுவோம். இருபது வயதில் நம்மிடமிருந்து தொடங்குவோம் முன்னேற்றத்தை. பழையன கழிந்து, நவீனப் பெண்களாக இருக்கும் நாம் குடும்பத்திலும் உறவுகளைக் கையாள்வதிலும் அப்படியே இருப்போம். இளம் பெண்கள் மனதுவைத்தால் இந்த இழிநிலையை மாற்ற முடியும்.
- ரம்யா, கடலூர்.
தற்போது திருமண வயது அதிகரித்துள்ளபோதும் பெண்கள் சம்பாதித்து, குடும்பத்தில் ஆணோடு சரிசமமாக இருக்கும்போதும் குழந்தை வளர்ப்பு, கல்வி போன்றவை பெண் மீது மட்டுமே சுமத்தப்படுகின்றன. வேலைச் சுமையுடன் குடும்பச் சுமையும் சேர்ந்துவிடுகிறது. அன்று நாற்பது வயதில் கிடைத்த அனுபவம் இன்று அறுபது வயதில் கிடைக்கிறது என்பதைத் தவிர பெரிய மாற்றமில்லை.
- ஜீவன்.பி.கே, கும்பகோணம்.
நாற்பதுக்குப் பிறகு வாழ்க்கை இல்லை என்பதெல்லாம் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடே. இத்தகைய கருத்துக்கள் பெண்களை ஒரு வட்டத்துக்குள் இழுத்துவைக்கும் சமூகத்தின் பிரதிபலிப்பு. பல்வேறு தலைவர்கள் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்ததால்தான் இன்று பெண்கள் ஓரளவுக்கு சாதிக்க முடிகிறது. பெண்கள் சாதிப்பதற்கான வாய்ப்புகளையும் வசதிகளையும் நாம் உருவாக்கித்தர வேண்டும்.
- கு. நிர்மலாதேவி, வேலூர்.
இன்னும் கொஞ்ச நாள் போனால் நாற்பதுக்குப் பிறகு பெண்கள் ஏன் வாழ வேண்டும் என்று கேட்பார்கள் போல இருக்கிறது. ஆண்களுக்கு மட்டும் என்ன இளமை நிரந்தரமா? நாற்பது வயதில்தான் அறிவு விசாலமாகிறது, சிந்தனை தெளிவாகிறது. நல்லது கெட்டது புரிகிறது. பெண்களே பெண்களுக்கு வயது வரம்பு போடுகிறார்களே இது எந்த விதத்தில் நியாயம்? பொறியியல், மருத்தவம் படித்துவிட்டுப் பெண்கள் குடும்பம் என்ற கட்டுக்குள் வீட்டிலேயே முடங்குகிறார்கள். ஏன் இந்த பாகுபாடு? பெண்களை எப்போதும் ஒரு படி கீழேயே வைத்து நடத்தும் மனோபாவம் மாற வேண்டும்.
- பிரிசில்லா ஆன்சி, சென்னை.
திருமணத்துக்குப் பிறகு குழந்தை வளர்ப்பு என்பது பெண்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. அவர்களுக்கு உறுதுணையாக யாராவது இருந்தால் அவர்களின் வளர்ச்சியில் தடை இருக்காது. அந்த உதவி கிடைக்காத பெண்களுக்கு அவர்களுடைய தனிப்பட்ட வளர்ச்சி கனவாகிறது.
- பார்த்தசாரதி
முதல் மாற்றம் சக பெண்களிடம் இருந்து வர வேண்டும். பெண்கள் தங்கள் உணர்வுகளையும் கனவுகளையும் தங்கள் குடும்பத்துக்குப் புரியவைக்க வேண்டும். எந்த மாற்றமும் போராட்டம் இல்லாமல் வராது. மாற்றத்தை உங்களிடமிருந்து தொடங்குங்கள்.
- தினேஷ் சத்தியமூர்த்தி
திருமணமோ, வேலையோ எதுவாக இருந்தாலும் பெண்கள் தங்கள் குறிக்கோளை முடிவுசெய்ய வேண்டும். எடுத்த முடிவில் ஆணித்தரமாய் இருக்க வேண்டும். திருமணம் செய்துகொண்டால் பிள்ளை வளர்ப்பில் பெண்களுக்குப் பெரும் பங்கு உண்டு என்பதையும் உணர வேண்டும். பிள்ளைகளுக்காகத் தங்கள் கனவுகளை மாற்றியமைக்கும் நிலையும் ஏற்படலாம். எதையுமே உணர்ந்து செயல்பட்டால் தேவையில்லாத சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
- மீனாள்
அந்தக் காலத்தில் பெண்ணுக்குத் திருமணமாகி, பூப்படையும்வரை பெற்றோருடன் இருப்பாள். இவனுக்கு இவள்தான், இவளுக்கு இவன்தான் என்பது முடிவாகியிருக்கும். அதன் காரணமாகவே ஈர்ப்பு உருவாக்கப்பட்டுவிடும். இள வயதில் திருமணம் செய்வதால் ஐம்பது வயதுக்குள்ளேயே குழந்தைகளை கரையேற்றிவிடுவார்கள். இதைத்தான் அந்த மாணவியின் அம்மா குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன். ஆனால், வாழ்க்கை என்பது இரண்டும் இரண்டும் நான்கு என்ற கணித சூத்திரத்திற்கு உட்பட்டது அல்ல.
- மது
எந்த வயதிலும் பெண்களுக்குக் கனவுகள் இருக்கும். ஆனால் அதைச் செயல்படுத்த அவர்களுக்கு நேரமும் ஊக்கமும் கிடைப்பதில்லை. இதில் அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தரக் குடும்பத்துப் பெண்களே. மீறி செய்ய முற்படும்போது அவர்கள் உடலாலும் மனதாலும் களைப்படைவதுதான் மிச்சம்.
- காமினி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT