Published : 23 May 2022 12:24 PM
Last Updated : 23 May 2022 12:24 PM

கேரளத்தை உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவர் குற்றவாளி - நீதிமன்றம் தீர்ப்பு

கேரளத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் வரதட்சணை கொடுமை குறித்த பெரும் விவாதத்தை உருவாக்கிய சம்பவம், கொல்லம் விஸ்மயா வழக்கு. கொல்லம் மாவட்டம் சாஸ்தான்கோட்டையில் தன் கணவரின் வீட்டில் குளியலறையில் தொங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. தற்கொலை செய்துகொண்டதாக கணவர் தரப்பில் சொல்லப்பட்டாலும், அது மர்மமான மரணமாக அது பார்க்கப்பட்டது.

வாட்ஸ்-அப் செய்திகள், அழைப்புப் பதிவுகள் அடிப்படையில் விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் கைதுசெய்யப்பட்டார். கேரள அரசும் அவரை முதலில் அவரைப் பணி இடைநீக்கமும் பின்னர் பணி நீக்கமும் செய்தது. இந்த வழக்கு கொல்லம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த வாரம் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. அதனடிப்படையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்தியத் தண்டனைச் சட்டம் 304 – பி பிரிவின் கீழ் அவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. தண்டனை குறித்த தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

விஸ்மயாவின் கணவர் கிரண் குமார், மோட்டார் வாகனத் துறையில் ஆய்வாளராகப் பணியிலிருந்தவர். விஸ்மயா, ஆயுர்வேத மருத்துவம் இறுதியாண்டு மாணவி. பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட இந்தத் திருமணத்துக்காக 100 சவரன் நகையும் 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரும் பணமும் நிலமும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் கார் வாங்கியதில் கிரண் குமாருக்கு விருப்பக் குறைவு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த கார், தன் தகுதிக்குக் குறைவு எனக் கூறியிருக்கிறார்.

இதை வைத்து மனைவியுடன் சண்டையிட்டிருக்கிறார். மனைவியின் வீட்டுக்கு வந்தபோது சண்டை முற்றிக் கைகலப்பாக மாறியிருக்கிறது. விஸ்மயாவை அடித்ததைத் தட்டிக் கேட்ட விஸ்மயாவின் அண்ணனுக்கும் அடி விழுந்திருக்கிறது. இந்தப் பிரச்சினை காவல் நிலையம் வரை சென்று சமாதானம் ஆகியிருக்கிறார்கள். அதன் பிறகு விஸ்மயாவை பிறந்த வீட்டுக்கு அனுப்பவில்லை. தொலைபேசியில் அம்மாவுடன் மட்டும் பேச அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு 19 ஜூன் தந்தையர் தினத்தில் விஸ்மயா தன் தந்தைக்கு வாழ்த்து சொன்னது பிரச்சினை ஆகியிருக்கிறது. இதற்கிடையில் தான் பட்ட காயங்களையும் கஷ்டங்களையும் அம்மாவிடம் அடிக்கடி விஸ்மயா சொல்லவும் செய்திருக்கிறார். ஜூன் 19 அன்றே அவரது சடலம் குளியலறை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 22 வயது பெண் வரதட்சணை கொடுமையால் மரணமான சம்பவம் கேரளத்தில் பெரும் சலனத்தை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x