Published : 29 May 2016 01:45 PM
Last Updated : 29 May 2016 01:45 PM

விவாதக் களம்: பாதகம் செய்பவரை மோதி மிதித்துவிட வேண்டும்!

தினசரி அலுவலகப் பயணத்தில் தனக்கு நேரும் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட சேலம் வாசகி அனிதா, ‘பயணத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையே’ என்று வருந்தியிருந்தார். அதையொட்டி, பெண்களுக்கு எந்த இடமும் பாதுகாப்பானது இல்லையா என்று வாசகர்களிடம் கேட்டிருந்தோம். வந்து குவிந்த கடிதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உங்கள் பார்வைக்கு…

பாலியல் சீண்டல்களால் நகரப் பேருந்துகள் பெண்களுக்கு நரகப் பேருந்துகளாக மாறிவிடுகின்றன. ஒரு பெண் பாதிக்கப்படும்போது அவருக்கு ஆதரவாக சக பயணிகள் குரல்கொடுக்க வேண்டும். இது போன்ற நேரத்தில், ‘மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’ என்று சொன்ன பாரதியாரைத் துணைக்கு அழைத்துக்கொள்ள வேண்டும். பாலியல் சீண்டல்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

- பொன். கருணாநிதி, கோட்டூர்.



அற்ப சுகம் தேடும் கயவர்களைப் பெண்கள் துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும். பயந்து ஒதுங்காமல், அவர்களைத் துணிச்சலுடன் அடையாளம் காட்ட வேண்டும். பாலியல் சீண்டலில் ஈடுபடுகிற ஈனப்பிறவியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை வைத்தாலே போதும், அடுத்த முறை தவறு செய்யத் தயங்குவார்கள். பெண்கள் தங்கள் பாதுகாப்பைத் தாங்களே உறுதி செய்துகொள்ள வேண்டும். துணிவும் தொடர் போராட்டமுமே அவர்களுக்கு வெற்றி தரும்.

- பா. சுபிசுதா, காவேரிப்பாக்கம்.



தன்னுடன் சக பயணியாக இருக்கிற பெண் மீது கைவைக்கும் கள்ளத்தனம் ஒரு ஆணுக்கு எப்படித்தான் வருகிறதோ? அது போன்ற நேரங்களில் பெண்கள், சிறுமை கண்டு பொங்கவும், ரௌத்திரம் பழகவும் வேண்டும். தவறாக நடந்துகொள்ளும் ஆணைப் பற்றிப் புகார் செய்தால், நீ கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்று பெண் மீதே பாய்கிற பிறவிகள் நிறைந்த இந்தச் சமூகத்தில் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். பெண்களை மதிக்கும்படி ஆண் குழந்தைகளுக்குச் சிறு வயது முதலே கற்றுத்தர வேண்டும். பெண்ணை உடலாக மட்டுமே பார்ப்பது ஈனத்தனமான செயல் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

- லலிதா சண்முகம், திருச்சி.



‘நான் ஒரு பெண், பெண்ணால் என்ன செய்துவிட முடியும்’ என்கிற அவநம்பிக்கையைப் பெண்கள் விட்டொழிக்க வேண்டும். பெரும்பாலான பெண்கள் இதே மனநிலையில் இருப்பதால்தான் ஆண்கள் எந்தவித பயமும் இல்லாமல் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுகின்றனர். அடுத்தவர்களுக்குத் தீங்கு நேர்ந்தால், ‘நமக்கேன் வம்பு’ என்று ஒதுங்கிக்கொள்கிறவர்களும் இங்கே உண்டு. தவறிழைத்தவர்கள் தான் தலை குனிய வேண்டும். பெண்கள், ஆண்களின் தவறுகளைத் தட்டிக் கேட்காமல் தலை குனிந்து நிற்பதால்தான் இது போன்ற இழிசெயல்களில் ஆண்கள் ஈடுபடுகிறார்கள்.

-எஸ். பிரபுமதி, தேனி.



ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் வேலைக்குப் போகும் சூழலில் பொதுப் போக்குவரத்து தவிர்க்க முடியாதது. அது பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பைத் தருவதில்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் இருப்பது போல மகளிர் மட்டும் பேருந்துகளை காலை மற்றும் மாலை வேளைகளில் மற்ற ஊர்களிலும் இயக்கலாம். பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டிருக்கும் இருக்கைகளில் அமராமல் ஆண்கள் கண்ணியம் காக்க வேண்டும். ஒவ்வொரு ஆணும் அடுத்த பெண்ணிடம் எல்லை மீறும் போது, அவரவர் வீட்டுப் பெண்களை நினைத்தாலே போதும். தவறான எண்ணம் தலைதூக்காது.

- கு. ரவிச்சந்திரன், ஈரோடு.



நான் அலுவலகம் சென்ற காலத்தில் என் கைப்பையில் எப்போதும் ஒரு ஊக்கை வைத்திருப்பேன். பேருந்துப் பயணத்தின்போது ஏதாவது கை நீண்டால் போதும், நறுக்கென ஊக்கை வைத்துக் குத்திவிடுவேன். திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல இருக்கும் அந்த நபருக்கு. வீடு, அலுவலகம் என இரட்டைச் சவாரி செய்யும் பெண்களுக்கு இது போன்ற பாலியல் சீண்டல்கள் எல்லாமே வேண்டாத இடைச்செருகல்தான். பெண்கள் பாதுகாப்புக்காகக் கிடைக்கும் பெப்பர் ஸ்பிரே, ஸ்டன் கன் இவற்றைப் பெண்கள் வாங்கி வைத்துக்கொள்வதுடன் தற்காப்புக் கலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

- ஜே.சி. ஜெரினாகாந்த், சென்னை.



முதலில் மனித மனம் விசாலமாக வேண்டும். வெறும் ஏட்டுப் படிப்பை மட்டும் சொல்லித் தந்துவிட்டு மனித நேயத்தை இளம் உள்ளங்களில் விதைக்கத் தவறிவிட்டோம். பெண்கள் பயந்து விலகாமல் ஒரே ஒரு கோபப் பார்வையை வீசினாலும் போதும், தவறு செய்தவன் தள்ளி நிற்பான்.

- தே.சேஷாத்ரி, ஸ்ரீரங்கம்.



பெண்கள் எப்போதும் தன்னுணர்வோடு செயல்பட்டால் தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியும். இருசக்கர வாகனத்தில் சென்றால் பின்பக்கம் பார்க்கும் கண்ணாடியில் அவ்வப்போது கவனம்கொள்ள வேண்டும். சந்தேகத்துக்குரிய நபர் தொடர்கிறார் என்றால் கூட்டம் இருக்கும் இடத்தில் வண்டியை நிறுத்தி உதவி கோரலாம். கைப்பையில் எப்போதும் டார்ச், சிறிய கூரான ஆயுதம் வைத்துக்கொள்ளலாம்.

- பெ.குழந்தைவேலு, நாமக்கல்.



ஒரு பெண்ணுக்கு எப்போது தைரியம் வருகிறதோ, ஒரு பெண் பாதிக்கப்படும்போது அருகில் இருக்கும் பெண் எப்போது துடித்துப் போய் உதவிக்குப் போகிறாளோ, பெண்களுக்குள் எப்போது ஒற்றுமை ஓங்கி நிற்கிறதோ, நாட்டின் எந்தப் பகுதியில் ஒரு பெண் பாதிக்கப்பட்டாலும் அவளுக்காக நாடு முழுவதும் உள்ள பெண்கள் எப்போது போர்க்கொடி உயர்த்துகிறார்களோ அன்றுதான் ஒரு பெண்ணுக்கு முழுமையான பாதுக்காப்பு கிடைக்கும்.

- கலைவாணி, ஈரோடு.



தினமும் நான்கில் ஒரு இந்தியப் பெண் பாலியல் அச்சுறுத்தலுக்கும் சீண்டலுக்கும் உள்ளாக்கப்படுகிறாள் என்று ஒரு கருத்துக் கணிப்பு சொல்கிறது. பெண்களைக் கடவுள்களாக வணங்கும் இதே சமூகம்தான் அவளைப் பலவந்தப்படுத்தியும்வருகிறது. பேருந்துகளிலும் பொது இடங்களிலும் பெண்கள் ஒதுங்கி ஒதுங்கியே செல்ல வேண்டிய நிலை எப்போது மாறும்?

மதிப்பெண் எடுக்கும் கருவிகளாக மாணவர்களை வளர்க்காமல் அவர்களுக்கு இந்தச் சமூகத்தைப் பற்றியும் கற்றுத்தர வேண்டும். பாலியல் கல்வியும், பெண்களைப் பற்றிய புரிதலும் அவசியம். பெண்களை வெறும் உடல்களாகப் பார்க்காமல் சக தோழியாக, பயணியாகப் பார்க்கும் மனநிலை ஒவ்வொருவருக்கும் வேண்டும். ஆண் குழந்தைகளுக்குக் கண்ணியத்தைச் சொல்லித்தந்து வளர்ப்பது அவசியம்.

- பா.ரேவந்தி, கரூர்.



எந்தப் பயணத்தின் போதும் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. பெண்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்வது அவசியம். கண்ணியமற்றவர்கள் நிறைந்த உலகில் வாழ்கிறோம் நாம். ஒரு முறை பேருந்தில் பயணித்த போது கல்லூரி மாணவர்கள் சிலர் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் பார்த்துக் கீழ்த்தரமான பாடலைப் பாடினார்கள். அந்தப் பேருந்தில் இருந்த பெண் காவலர், மாணவர்களைத் தட்டிக் கேட்பார் என்று நினைத்தோம். அவரோ தனக்கும் அதற்கும் தொடர்பே இல்லை என்பது போல இருந்தார். இந்த நிலையில் மற்ற பெண்கள் நமக்காக குரல் எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ரயில் பயணங்களும் கொடுமை நிறைந்தவை. ஒரு பெண் தனியாகப் பயணம் செய்தால் போதும், இரட்டை அர்த்தத்துடன் பேசுவது, ஆபாசமான அங்க அசைவுகளை வெளிப்படுத்துவது என்று வதைத்துவிடுவார்கள்.

இப்படித் தவறு செய்யும் ஆண்களுக்கு எல்லோர் முன்னிலையிலும் சாட்டையடி கொடுப்பதுபோல நடந்துகொள்ள வேண்டும். இதில் ஊடகங்களுக்கும் பங்கு இருக்கிறது. நகைச்சுவை என்ற பெயரில் பெண்களைக் கிண்டல் செய்வதையே சிலர் தொழிலாக வைத்திருக்கிறார்கள்.

- வீ. யமுனா ராணி, சென்னை.



பெண்கள் வெளியே செல்லும்போது தங்களைத் தற்காத்துக் கொள்ள சில வழிகளைத் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். ரயிலில் தனியே பயணம் செய்யும்போது ஹெல்ப் லைன் நம்பரை செல்போனில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆட்டோவில் சென்றால் ஆட்டோ நம்பரைப் பார்த்துவைத்துக்கொள்ள வேண்டும். நமக்கேன் வம்பு என பெரும்பாலான மக்கள் நினைக்கும் இந்தக் காலத்தில் அடுத்தவர் உதவியை எதிர்பார்க்க முடியாது. நமக்கு நாமே உறுதுணை என்ற தன்னம்பிக்கையோடு வெளியே செல்ல வேண்டும்.

- பானு பெரியதம்பி, சேலம்.



பெண்கள் கொஞ்சம் நாகரிகமாக உடையணிந்தால் போதும். ‘அவள் ஒரு மாதிரி’ என்று சொல்கிறவர்கள் இங்கே அதிகம். அடுத்தவர் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் பெண்கள் அப்படி உடையணிகிறார்கள் என்பது போன்ற மாயத்தோற்றத்தைப் பலரும் ஏற்படுத்திவைத்திருக்கிறார்கள்.

நாகரிகமாக உடையணிந்திருக்கும் பெண்ணை பேருந்தில் யாராவது கிண்டல் செய்யும்போது, ‘இவளுக்கு நல்லா வேணும்’ என்று மற்ற பெண்கள் சொல்வதைக் கேட்டாலே மனம் கொதிக்கும். இதற்காகவெல்லாம் பயந்து ஒதுங்காமல், துணிச்சலுடன் தன்னம்பிக்கையுடனும் அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும்.

- வீ. ரத்னமாலா , சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x