Published : 22 May 2016 01:42 PM
Last Updated : 22 May 2016 01:42 PM
‘நாம் எடுக்கும் குறிக்கோளில் உறுதியாக இருந்து போராடினால் வெற்றி உறுதி’ என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு 60 வயது மம்தா பானர்ஜி. இவர், மேற்கு வங்கத்தில் 35 ஆண்டுகளாக கோலோச்சிய இடதுசாரிகளின் ஆட்சியைத் தகர்த்தவர். தொடர்ந்து இரண்டாவது முறையாக மேற்கு வங்கத்தின் முதல் அமைச்சராக மே 27-ல் பதவியேற்க உள்ளார்.
எளிமையே அடையாளம்
அரசியல் கட்சித் தலைவி, மத்திய அமைச்சர் எனப் பல பொறுப்புகள் ஏற்றிருந்தபோதும், கொல்கத்தாவின் காளிகாட்டில் உள்ள தனது வீட்டை மாற்றவில்லை மம்தா. முதல்வர் வீடு என்பதால் பாதுகாப்பு கூடினாலும், இன்னும் அங்கு மிக எளிமையாகவே வாழ்கிறார் மம்தா. இவரைப் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும், எந்தத் தடையுமின்றி சந்தித்துவருகின்றனர்.
கடந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்து முடிவுகளுக்காகக் காத்திருந்தபோது மம்தா களைப்பு தீர ஓய்வெடுக்க எங்கும் சென்று விடவில்லை. மாறாக, தனது காளிகாட் வீட்டிலேயே தன் அம்மா காயத்ரி தேவிக்காக நல்ல உணவு வகைகளைச் சமைத்துக்கொண்டிருந்தார்.
பாட்டும் ஓவியமும்
அரசியலையே முழு நேரமும் நினைத்துக்கொண்டு வாழும் பழக்கம் கொண்டவர் அல்ல மம்தா. ராமகிருஷ்ண பரமஹம்சரின் பக்தையான இவர், நல்ல படிப்பாளியும்கூட. தனது வீட்டில் ஏராளமான புத்தகங்களை வைத்திருக்கும் மம்தா, பத்துக்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். ரவீந்தரநாத் தாகூரின் பாடல்களைக் கேட்பது மம்தாவுக்குப் பிடித்த விஷயம். இனிமையாகப் பாடும் திறமை படைந்த இவர், ஒருமுறை தனியார் தொலைக்காட்சியின் ‘ரியாலிட்டி ஷோ’வில் கலந்துகொண்டு இந்திப் படத்தின் தேசபக்திப் பாடலைப் பாடி அனைவரையும் அசரவைத்தார்.
நன்றாக ஓவியமும் வரைவார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஓவியம் தீட்டத் தொடங்கிவிடுவார். இவர் வரைகிற ஓவியங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உண்டு.
அவலுடன் காய்கறிகள் சேர்த்துச் சமைக்கப்படும் உணவு, மம்தாவுக்குப் பிடித்தமானது. வீட்டில் ‘டிரட் மில்’ வைத்து நடப்பது மட்டுமே இவர் செய்யும் முக்கியமான உடற்பயிற்சி.
நெசவுக்கு வந்தனம்
எம்.ஏ., பி.எட்., எல்.எல்.பி. ஆகிய பட்டங்களுடன் கவுரவ டாக்டர் பட்டமும் பெற்ற மம்தா, எப்போதும் வெண்மை நிறப் பருத்திச் சேலையைத்தான் அணிவார். அதுவும், கஞ்சி போடாதது. 300 ரூபாய் மதிப்பிலான அந்தச் சேலை அதிக டிசைன்கள் இன்றி, ஓரத்தில் சன்னமான கரையுடன் இருக்கும். தோளில் ஒரு ஜோல்னா பை, காலில் சாதாரண செருப்பு. வெயிலுக்குக்கூடக் குளிர் கண்ணாடி அணியும் பழக்கம் இல்லாத எளிமைதான் பாமர மக்கள் மத்தியில் அவரை அழைத்துச் சென்றிருக்கிறது.
தினமும் மம்தா அணிகிற பருத்திச் சேலைக்குப் பின்னால் ஒரு சம்பவம் இருக்கிறது. மேற்கு வங்கத்தின் வட பகுதியில் இருக்கும் தானே காளி என்னும் ஊர், ஆங்கிலேயர் காலத்திலேயே நெசவுத் தொழிலுக்குப் பெயர் பெற்றது. இங்கு ஒரு முறை சென்ற மம்தா, அந்தத் தொழில் நசிந்துவருவதைக் கேள்விப்பட்டு வருந்தினார். அன்று முதல், தானே காளி பகுதியில் நெய்யப்படும் ‘டாண்ட்’ எனப்படும் கைத்தறிச் சேலைகளை உடுத்தத் தொடங்கினார். டாண்ட் வகை சேலைகளை அவர் அணியத் தொடங்கிய பிறகு அந்தச் சேலைகள், ‘மம்தாதி சேலை’ என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றன.
இந்த வகை சேலையை அணியும் பெங்காலிப் பெண்களுக்கு இன்று தனி மரியாதை கிடைக்கிறது. இதனால் வெளிநாடு, உள்நாடு என தானே காளியின் நெசவாளிகளுக்குப் பல கோடி மதிப்பிலான ஆர்டர் குவிந்துவருகிறது. கர்நாடகத்தின் உடுப்பியிலும் நெசவுத் தொழில் நசிந்துவருவதைக் கேள்விப்பட்ட மம்தா, ஒருமுறை அங்கும் 300 காட்டன் சேலைகள் ஆர்டர் செய்திருந்தார்.
சுகாதாரம் முக்கியம்
இவர் முதல்முறையாக ஆட்சி அமைக்க உதவியது, நந்திகிராம் மற்றும் சிங்கூரின் அரசு நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம்தான். அப்போது, நந்திகிராமில் மருத்துவ வசதி இல்லை எனக் கேள்விப்பட்டுப் பதறிவிட்டார். போதுமான மருத்துவ வசதி இல்லாததால் தனது 17 வயதிலேயே தந்தை புரோமிலேஷ்வர் பானர்ஜியை இழந்தவர் மம்தா.
இழப்பின் வலி உணர்ந்தவர் என்பதால் நந்திகிராம்வாசிகளுக்கு உதவுவதற்காக, அதுவரை தான் வரைந்த ஓவியங்களை ஏலம் விட்டார். அவை பல லட்சம் ரூபாய்க்கு விலை போயின. அந்தப் பணத்தை மூலதனமாகக் கொண்டு மருத்துவமனை கட்டியவருக்கு நன்கொடைகளும் குவிந்தன. முதல்வரான பிறகு மாநிலத்தின் சுகாதாரத் துறையை தன்னிடமே வைத்திருந்தார்.
பெங்காலி மொழியில், ‘மா மாட்டி மானுஷ்!’ என்றால், ‘தாய், பிறந்த மண் மற்றும் பொதுமக்கள்!’ என்று பொருள். மம்தா கட்சியின் முக்கிய கோஷம் இதுதான்! அதைச் செயல்படுத்திவருவதில்தான் மம்தாவின் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT