Published : 27 Mar 2022 11:47 AM
Last Updated : 27 Mar 2022 11:47 AM
தமிழக அரசின் பட்ஜெட்டில் பெண்களின் கல்வியை உறுதி செய்யும் வகையில் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பலரும் அதைக் கொண்டாடுகின்றனர், தவறில்லை. ஆனால், ஒரு திட்டம் இன்னொரு திட்டமாக மாற்றப்படுவது தான் சிக்கல்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதன்படி ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் உயர்கல்வியில் (பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு/தொழிற்கல்வி) சேரும்போது அவர்களது படிப்பு முடியும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த உதவித்தொகை மாணவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. பயன்பெறும் மாணவிகள் வேறு ஏதேனும் உதவித் தொகை பெற்றாலும் உயர்கல்வி உறுதித் திட்டத்துக்குத் தகுதியுடையவர்களே என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். கல்வி உதவித்தொகை அனைத்துத் தரப்புக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக இது பொதுப்பிரிவினர் அனைவருக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கதே.
ஆனால், இதற்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவி அளிப்பதற்கும் என்ன தொடர்பு? அரசின் இந்தப் புதிய திட்டத்தால் மட்டுமே மாணவியரின் உயர்கல்வி உறுதிசெய்யப்படும் என்பதுபோலவும் திருமண நிதியுதவி என்பது படிக்காதவர்களுக்கு வழங்கப் படுவது என்கிறரீதியிலும் விவாதிப்பது நகைப்புக்குரியதே. காரணம், திருமண நிதியுதவித் திட்டத்திலும் பத்தாம் வகுப்பு, பட்டப்படிப்பு என்று கல்வித் தகுதி அளவுகோலாக வைக்கப்பட்டுள்ளது. 1989-ல் ஐந்தாயிரம் ரூபாயாக நிதியுதவி அறிவிக்கப்பட்டுப் பிறகு 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. பின்னர் பள்ளிக் கல்வியை முடித்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயுடன் 8 கிராம் தங்கமும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 50 ஆயிரம் பணமும் 8 கிராம் தங்கமும் அறிவிக்கப்பட்டது. இதில் வழங்கப்படுகிற 8 கிராம் தங்கத்தை ‘தாலிக்குத் தங்கம்’ என்று சொல்வதைத்தான் பலரும் பிடித்துக்கொண்டு வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது பெண்ணடிமைத்தனம், பெண்ணுரிமைக்கு எதிரானது என்று தங்களது வாதத்துக்கு ஆதரவாகச் சில கருத்துகளையும் முன்வைக்கிறார்கள்.
மேலோட்டமாகப் பார்த்தால், முதல்வர் சொல்வதுபோல் தாலிக்குத் தங்கம் தருவதைவிடக் கல்வி என்னும் பெரும் சொத்தைப் பெண்ணுக்குத் தருவதுதான் சரி என்றுகூடத் தோன்றும். இந்தத் திருமண நிதியுதவி, பெண்ணுக்கு அல்ல; அந்தப் பெண்ணைப் பெற்றவர்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் வழங்கப்படுவது. இந்தத் திட்டத்தில் தங்கம் சேர்க்கப்படாத காலத்தில் என் மாமா மகளுக்கான திருமண நிதியுதவி விண்ணப்பத்தை என் அப்பாதான் நிரப்பிக் கொடுத்தார். மாமா விவசாயி. அவர்களிடம் பணப்புழக்கம் மிகக் குறைவு. வாய்க்கும் வயிற்றுக்குமாக இருக்கிறவர் களுக்குத் திருமணச் செலவு என்பது மலையளவு சுமை. அப்போது அரசு வழங்கிய 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அந்தக் குடும்பத்தின் சுமையைப் பெருமளவு குறைத்தது.
நாம் இருக்கிற இடத்தையும் சூழலையும் வைத்துக்கொண்டு பெரும்பான்மையை எள்ளி நகையாடக் கூடாது. தாலிக்குத் தங்கம் என்கிற திட்டத்தை நிறுத்திவிட்டால் திருமணச் சடங்குகளுக்கு ஏழைகள் செலவிடுவது குறைந்துவிடும் என்று நம்புவது சாதிச் சான்றிதழைக் கிழித்துவிட்டால் சாதியை ஒழித்துவிடலாம் என்பதைப் போன்றதே. ஒரு பொட்டுத் தங்கம் வாங்கக்கூட வழியில்லாத குடும்பங்களுக்கு, அரசு வழங்கும் எட்டு கிராம் தங்கமும் 50 ஆயிரம் பணமும் மிகப்பெரும் உதவி. எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் பேசுகிற பெண்ணியம் மேட்டிமை வாதமாகி விடும் அபாயம் உண்டு.
திருமண நிதியுதவித் திட்டத்தில் ஒரு லட்சம் பேர்தான் பயனாளிகள், உயர் கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் ஆறு லட்சம் பேர் பயனடைவார்கள் என்பது உண்மையாக இருக்கும்பட்சத்தில் தகுதியுடைய ஒரு லட்சம் பேருக்குத் திருமண நிதியுதவி வழங்குவதில் என்ன சிக்கல்? தவிர, திருமண நிதியுதவி, உயர்கல்வி உறுதித் திட்டத்தைப் போல பொதுப்பிரிவினருக்கானது அல்ல. வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கிறவர்களுக்கு வழங்கப்படும் அந்த நிதியுதவியை நிறுத்துவது நியாயமா? இதில் ஏராளமான முறைகேடு நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படிப் பார்த்தால் அரசின் எந்த நலத்திட்டத்தில்தான் முறைகேடு நடப்பதில்லை? முறைகேடு களைச் சரிசெய்து, தகுதியுடையோரைக் கண்டறிந்து அவர்களுக்கு நிதியுதவி சென்று சேர வழிவகை செய்வதுதான் அரசின் கடமையே தவிர, திட்டத்தையே வேறொரு திட்டமாக மாற்றி ஏழைகளுக்குக் கிடைக்க வேண்டியதைத் தடுப்பதல்ல.
- சித்ரா, திருநின்றவூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT