Published : 24 Apr 2016 02:11 PM
Last Updated : 24 Apr 2016 02:11 PM
(இந்தியா, பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு என்பதை உலகுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் சவால்கள் மிகுந்த இந்தியச் சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் தனி ஒருத்தியாக வலம் வருகிறார் ஈஷா குப்தா. 37 வயதான ஈஷா குப்தாவின் மோட்டார் சைக்கிள் அனுபவங்கள் தொடர்கின்றன.)
“என்னை நீ எல்லையற்றவனாகப் படைத்திருக்கிறாய்..!” என நூறாண்டுகளுக்கு முன்பு மகாகவி ரவீந்திரநாத் தாகூர் கீதாஞ்சலியின் முதல் வரியைத் தீட்டினார். இந்தியாவுக்கான முதல் நோபல் பரிசு மேற்கு வங்கம் நோக்கிப் பறந்து வந்தது. இந்த வரிகளைப் போலத்தான் நானும் எல்லையற்றவள். தேசத்தின் எல்லைக் கோடுகளைக் கடந்து பயணிப்பவள். கீதாஞ்சலி நூலின் மெல்லிய கவிதைகளை மனதில் ஓட்டிக்கொண்டே ஒடிஷாவில் இருந்து மேற்கு வங்க மாநிலத்தில் நுழைந்தேன்.
ஊரைத் தாங்கும் கம்பீர பாலம்
மேற்கு வங்கத்துக்கு ஒரு முறை எனது தோழியின் திருமணத்துக்காகவும், இன்னொரு முறை நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள் பயணத்துக்காகவும் வந்திருக்கிறேன். அந்த இருமுறையும் உள்ளூர் மக்களுடன் புழங்க முடியாமல் போய்விட்டது. இந்த முறை வங்கக் கடலலையின் ஒலியைக் கேட்டுக்கொண்டே இமயமலை அடிவாரத்தில் பயணிக்கப்போகிறேன்.
மேதினிப்பூரில் இருந்து காரக்பூர் வழியாக தில்கா நோக்கி வேகமாகப் பறந்துகொண்டிருந்தேன். இந்தத் தடத்தில் சாலைகளுக்குத் தார் போடும் வேலை நடந்துகொண்டிருந்ததால், கடும் வெயிலில் வண்டியை ஓட்டுவதற்குச் சிரமமாக இருந்தது. அந்தி சாயும் வேளையில் தில்கா நகரை அடையும்போதும் மிகவும் களைப்பாக இருந்தது. பூரி, சப்ஜி சாப்பிட்டுவிட்டு அன்றிரவு அங்கேயே தங்குவதற்காக ஹோட்டலுக்குச் சென்றபோது அதிர்ச்சி காத்திருந்தது. தில்கா நகரத்தைப் பொறுத்தவரை தனிநபர் தங்குவதற்கு அறைகள் தருவதில்லை. இருவராகவோ குடும்பத்துடனோதான் தங்க வேண்டும். பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆண்களையே தனியே தங்க விடுவதில்லை என்றனர். ஒருவழியாக ஹோட்டல் மேனேஜரிடம் சண்டைபோட்டு, முதல் முறையாக தில்கா நகரில் தில்லாகத் தனியாகத் தங்கினேன்.
மறுநாள் அதிகாலையே ஹவுரா வழியாக கொல்கத்தா நோக்கி மைக்கியை விரட்டினேன். மேற்கு வங்கத்தின் இரட்டை நகரமான ஹவுராவையும், கொல்கத்தாவையும் இணைக்க ஹூக்ளி நதியில் நீளமான பாலம் கட்டப்பட்டுள்ளது.
உலகின் ஆறாவது மிகப் பெரிய பாலமான ஹவுரா பாலம் போக்குவரத்து நெரிசல் நேரங்களில் 80 ஆயிரம் வாகனங்களின் எடையையும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான பாதசாரிகளின் எடையையும் தாங்குகிறது. கிட்டத்தட்ட ஒரு நகரையே தாங்கும் இந்தப் பாலம் கம்பீரமாக இருக்கும்போது, புதியதாகக் கட்டப்பட்ட பாலம் இடிந்து போய்விட்டது என ஆதங்கப்பட்டனர் வங்காள சகாக்கள்.
பழைய தலைநகரமும், இலக்கிய நகரமும்
ஹவுரா பாலத்தை மின்னல் வேகத்தில் கடந்து மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவை நெருங்கினேன். கொளுத்தும் கோடை வெயிலில் வழிநெடுகச் செங்கொடிகள் பறக்க, தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் வர்த்தகம், கல்வி, கலை, பண்பாடு, கலாச்சாரம் என கொல்கத்தா நகரம் சிறந்து விளங்கியது. இதனால் கொல்கத்தா 1911-ம் ஆண்டு வரை இந்தியாவின் தலைநகராக இருந்தது. இன்றும் ஹூக்ளி நதிக் கரையில் கலை, இலக்கியம், சமூகம், பண்பாடு, நாகரிகம் வளர்த்து, கலாச்சாரத் தலைநரகமாக கொல்கத்தா மிளிர்கிறது.
இந்தியாவின் பெருமைமிகு படைப்பாளிகளான சத்ய ஜித் ராய், மிருணாள் சென், ரித்விக் கட்டக் உள்ளிட்டோர் ஓடி விளையாடிய கொல்கத்தாவின் புராதன வீதிகளில் வலம் வந்தேன். வெள்ளித்திரையில் பார்த்து வியந்த சித்திரங்கள் கால் முளைத்து ஆங்காங்கே நடமாடிக்கொண்டிருந்தன. அங்கிருந்து ரவீந்திரநாத் தாகூர் நிறுவிய சாந்தி நிகேதனுக்குப் பயணித்தேன். போல்பூரில் அமைந்துள்ள சாந்தி நிகேதனில் ரவீந்திரநாத் தாகூர் 1862-ம் ஆண்டு விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தையும், ஒரு ஆசிரமத்தையும் இங்கு நிறுவினார்.
ஆன்மாவுக்குள் பயணிக்க அமைதியான பிரார்த்தனைக் கூடம், அறிவுக்குள் பயணிக்கப் பாடசாலை மற்றும் நூலகம், கவிதைக்குள் பயணிக்க அழகிய பூஞ்சோலை என சாந்தி நிகேதன் ரம்மியமாக இருக்கிறது. மாலைப் பொழுதில் காற்றில் மிதந்து வரும் தாகூரின் கவிதைகள் மனதை ஈரமாக்குகின்றன.
பெண் விடுதலை பெண் கையில்
போல்பூரில் இருந்து புர்ட்வான் நகர் நோக்கிப் புறப்பட்டேன். காவி உடை அணிந்த யாத்ரீகர்கள் தகிக்கும் வெயிலில் வெறும் கால்களில் விஷ்ணுப்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். சில இடங்களில் கடும் குடிநீர்ப் பஞ்சம் நிலவுவதால் அவர்கள் இரு பானைகளில் நீர் சுமந்து சென்றனர். புர்ட்வான் நகரில் நுழைந்ததும் ‘வாவ்’ (WOW - விமன் ஆன் வீல்ஸ்) அமைப்பினர் என்னை உற்சாகமாக வரவேற்றனர். தோழிகளுடன் சாப்பிட்டுவிட்டு, பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி 50 பெண்கள் இரு சக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்றோம்.
புர்ட்வான் நகரில் இருந்து முஷீர்பாத் வழியாக மால்டா நகரை நோக்கிப் பறந்தேன். 1788-ம் ஆண்டு நவாப்ஹட் என்ற இடத்தில் கட்டப்பட்ட 108 சிவாலயங்களைத் தரிசித்தேன். பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட மால்டா நகரைச் சென்றடைந்தேன். ஆங்கிலோ இந்தியர்களும், கிறிஸ்தவர்களும் கணிசமாக வசிக்கும் மால்டா டவுனில் நூறாண்டுகள் பழமையான பங்களாக்கள் பல இருக்கின்றன. சப்பாத்தியும், இஞ்சி டீயும் அருந்திவிட்டு, அன்றிரவு அங்கேயே உறங்கினேன்.
தேயிலையில் புதைந்திருக்கும் ரணம்
மால்டாவிலிருந்து இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஜல்பைகுரி நோக்கிப் புறப்பட்டேன். வடக்கில் பூடானும், கிழக்கில் வங்காள தேசமும் இருப்பதால் பலத்த ராணுவப் பாதுகாப்பு இருந்தது. எல்லையோர மாவட்டமாக இருப்பதால் இரு நாடுகளைச் சேர்ந்தவர்களும் அவ்வப்போது ஜல்பைகுரிக்குள் ஊடுருவி விடுகின்றனர். இங்கு ரஞ்பான்சி, ராவா, டோடா, சாந்தல், மடாஸியா, ஓரான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பழங்குடிகள் மிகுதியாக வாழ்கின்றனர். ஜல்பைகுரியில் அமைந்துள்ள ராஜ்பாரி அரண்மனையைக் காண லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
வங்காள தேச எல்லையில் 1887-ம் ஆண்டு கோச் பெஹார் அரண்மனை கட்டப்பட்டது. ரோம் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தைப் போல கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனையில் 50-க்கும் மேற்பட்ட அறைகள் இருக்கின்றன. இது தவிர தர்பார் மஹால், நடன மஹால், வரவேற்பு வளாகம் எனப் பிரமாண்டமாக இருக்கும் இதனைக் காணவும் பெரும்பாலோனோர் வருகின்றனர்.
இங்கிருந்து மால் பசார் வழியாக இமயமலையின் வடகிழக்கில் அமைந்துள்ள சிலிகுரியை நோக்கிச் சென்றேன். வழிநெடுக அடர் வனம், உயர் மரங்கள், பசும்போர்வை போர்த்திய தேயிலைத் தோட்டங்கள் எனப் பசுமையாக இருந்தது. டார்ஜிலிங் குளிர்ப் பிரதேசத்துக்குள் நுழைகையில் தீஷ்தா நதியின் குறுக்கே பிரமாண்டமாகக் கட்டப்பட்ட கோரனேஷன் பாலத்தைப் பார்த்தேன். இமயமலையில் இருந்து சீறிப் பாய்ந்து வரும் தீஷ்தா நதியைப் பெரும் பாறைகளைக் கொண்டு தடுத்து, பிரமாண்டமாகப் பாலம் கட்டப்பட்டுள்ளது. 1937-ம் ஆண்டு 6-ம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் இந்த பாலத்தைக் கட்டுவதற்கு ரூ. 4 லட்சம் செலவு செய்யப்பட்டது.
தேயிலைக்குப் புகழ்பெற்ற டார்ஜிலிங் முழுக்கப் பெருந்தோட்டங் கள். திசையெங்கும் சீராகக் கவ்வாத்து செய்யப்பட்ட தேயிலை மரங்கள். அதன் நடுவே தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தது போன்ற தொழிலாளர்களின் குடியிருப்புகள். இரண்டு இலைகளை அதன் நடுவே உள்ள ஒரு மொட்டுடன் சேர்த்துப் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கச்சிதமாகக் கிள்ளுகின்றனர். இங்குள்ள பெரும்பாலான பிள்ளைகள் காலங்காலமாகக் குழந்தைத் தொழிலாளர்களாக இருக்கின்றனர். பள்ளிக்கூடம், மருத்துவமனை, போக்குவரத்து என எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் அட்டைப்பூச்சிகளுக்கு மத்தியில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள் துயரப்படுகின்றனர்.
இமய மலையையும், வங்கக் கடலையும், மேகங்களையும் தாண்டி மேற்கு வங்க தேயிலைத் தோட்ட ரணம் எப்போது வெளிவரும் என்ற கேள்வியோடு நகர்ந்தேன்!
(பயணம் தொடரும்)
தொகுப்பு: இரா.வினோத்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT