Published : 06 Mar 2022 10:47 AM
Last Updated : 06 Mar 2022 10:47 AM

பெண் எழுத்து: வாழ்க்கையை வாசிக்க வேண்டும்

கதை, கவிதை, கட்டுரை என்று எந்த வடிவமாக இருந்தாலும் பெண்கள் எழுத வருவதே அரசியல் செயல்பாடுதான். வரலாறும் அப்படித்தான் சொல்கிறது. பெண்கள் எல்லா உரிமைகளையும் பெற்றுவிட்டார்கள் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கும் இந்நாளிலும் ‘பெண்களிடம் கரண்டியைப் பிடுங்கிவிட்டுப் புத்தகத்தைக் கொடுங்கள்’ என்கிற பெரியாரின் வார்த்தைகள் தேவையாகத்தான் இருக்கின்றன. திருநெல்வேலியில் சிறுபான்மைச் சமூகத்தில் பிறந்து எழுத்தாளர் என்கிற நிலையை அடைய தமயந்தி கடந்துவந்திருக்கும் பாதையும் அதைத்தான் உணர்த்துகிறது.

கல்லூரிப் பேராசிரியரான அப்பா மூலம் தமயந்திக்குச் சிறுவயதிலேயே வாசிப்பு கைகூடியது. ஒரு நாள் தன் தோழி தங்கம் என்பவரின் அத்தை திருவேங்கடத்தின் வீட்டுக்குப் போனார் தமயந்தி. அங்கே பீரோ முழுவதும் துணிக்குப் பதிலாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அவரிடமிருந்து நா.பார்த்தசாரதியின் ‘குறிஞ்சி மலர்’ நாவலை இரவல் வாங்கிவந்து படித்தார் எட்டாம் வகுப்பு மாணவி தமயந்தி. அம்மாவும் சிவகங்கை பக்கத்தில் இருந்து புத்தகங்கள் வாங்கிவர, வாசிப்பு தடையின்றித் தொடர்ந்தது. வாஸந்தி, இந்துமதி, பாலகுமாரன் என்று வாசித்தவர் பதின்பருவத்திலேயே கதைகள் எழுதத் தொடங்கினார். கல்லூரியில் படித்தபோது முதல் சிறுகதைத் தொகுப்பு (தமயந்தியின் சிறுகதைகள்) வெளியானது. அந்தப் புத்தக வெளியீட்டுக்கு பிரபஞ்சனை அழைக்க அப்பாவுடன் சென்னை வந்தவருக்கு வாழ்க்கையின் வேறொரு பரிமாணம் புலப்பட்டது.

வாழ்வை மாற்றிய சந்திப்பு

“சென்னை சாலிகிராமத்தில் பிரபஞ்சனைச் சந்தித்தது என் வாழ்வில் முக்கியமான தருணம். எழுதும் பெண் களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் மனிதர்கள் எப்போதும் தேவை. அப்படி யொரு தேவதைபோல் வந்தவர் பிரபஞ்சன். வாழ்வது என்பது மகிழ்ச்சியாக இருப்பது என்று அவரைப் பார்த்தபோது புரிந்தது” என்று சொல்லும் தமயந்தி, வெகுஜன இதழ்களில் எழுதியதாலேயே மோசமான விமர்சனங்களைத் தான் சந்தித்ததாகச் சொல்கிறார்.

இப்போதும் பலர் பொதுவெளியில் பேசத் தயங்கும் மாதவிடாய், அதீத காதல், ஆண் - பெண் உறவு போன்றவற்றை மையமாக வைத்து எழுதியதாலேயே கல்லூரி நாட்களில் புறக்கணிப்புக்கு ஆளானார் தமயந்தி. தான் சாத்தானின் குழந்தை என்று வர்ணிக்கப்பட்டதை இன்று வெறும் தகவலாகச் சொல்லிக் கடக்க முடிவதே தமயந்தியின் வெற்றி.

“சாதி குறித்தும் பாகுபாடு குறித்தும் மனத்தில் இருப்பதைக்கூட உரையாட முடியாத இறுக்கமான சூழல் அப்போது. ஆணும் பெண்ணும் நட்பாகவே இருக்க முடியாது என்று நம்புகிற சமூகத்தில் இருந்துகொண்டு ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பைக் கதையாக எழுதி ஒரு வார இதழுக்கு அனுப்பினேன். அது திரும்பிவந்துவிட்டது. கதை பிடிக்கவில்லையென்றாலும் கதையமைப்பில் ஏதோவொன்று இருக்கிறது என்றும் தொடர்ந்து எழுதும்படியும் அதன் ஆசிரியர் சொன்னார். பிறகு தினமும் எழுதினேன். தென் ஆப்ரிக்காவிலிருந்து சென்னை வரும் இளைஞன் பிராமணப்பெண் ஒருவரை மணந்துகொள்ளும் ‘நிழல்’ சிறுகதையை எழுதினேன்” என்கிறார் தமயந்தி.

புதிய வானத்தின் தரிசனம்

ப.சிங்காரம், அசோகமித்திரன், பிரபஞ்சன், சாமர்செட் மாம், தாமஸ் ஹார்டி என்று தன் வாசிப்புத்தளம் விரிவடைய தன் எழுத்துத் தளமும் சிந்தனையும் விரிவடைந்தன என்கிறார். “குறிப்பா அம்பையோட எழுத்து. அவரை என் வர்சுவல் அம்மான்னுதான் சொல்லணும். அவர் எழுதின ‘சிறகுகள் முறியும்’ எனக்கு மிகப் பிடிக்கும். நான் வாசித்த எழுத்தாளர்களின் எழுத்து எனக்குப் புதிய வானத்தைக் கொடுத்தது. சமூகத்தின் கேள்விகளைத் தள்ளிவைக்கும் துணிவையும் எதையும் பேசும் தெளிவையும் கொடுத்தது” என்கிறார்.

கதைகளின் வன்மம்

முதுகலை ஆங்கில இலக்கியம் படித்தவர் சென்னையில் பத்திரிகையாளர், பண்பலைத் தொகுப்பாளர் என்று ஆண்டுகள் கழிய மீண்டும் திருநெல்வேலிக்கே சென்றார். தன்னைப் புறக்கணித்தவர்கள் மத்தியில் நான் எப்படி வாழ்கிறேன் பார் என்று காட்டுவதற்கான பயணம் அது என்று சொல்கிறார். “வாழ்க்கை என்னை அந்த அளவுக்கு வதைத்திருந்தது. அதிலிருந்து மீண்டு எனக்கான பாதையில் நான் சென்றபோது அதை மற்றவர்களுக்குக் காட்டும் வன்மமாகத்தான் இந்த ஊர் திரும்புதலைச் சொல்லணும். என் பெரும்பாலான கதைகளில் இந்த வன்மம் உறைந்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. வாழ்க்கையை நான் ஜெயித்துவிட்டேன் என்கிற நேர்மறை வன்மம் இது” என்று சொல்லும்போது தமயந்தியின் பேச்சில் துளிக்கூட வருத்தமோ வேதனையோ இல்லை.

திரைப்பயணம்

எழுத்தாளராக அறியப்பட்டவர் பாடலாசிரியாரானது தற்செயல். மீரா கதிரவனின் ‘விழித்திரு’ படத்தில் இடம்பெற்ற ஆர்.ஜே. கதாபாத்திரத்துக்கு வசனம் எழுதச் சென்றவர் ஒரு பாடலையும் எழுதினார். ‘வெள்ளை இரவே...’ என்கிற அந்தப் பாடலைத் தொடர்ந்து பாடல்கள் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. தொலைக்காட்சித் தொடர்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதும் பணியிலும் ஈடுபடத் தொடங்கினார். “ஏற்கெனவே தொலைக்காட்சியில் பணியாற்றிய அனுபவம் உண்டு. கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது அதை மையமாக வைத்து 'பிணைக்கைதிகள்' என்னும் சிறுகதையை அப்போது எழுதினேன். ஒரு குடும்பத்தின் ஆண் கடத்தப்பட, துக்கம் விசாரிக்க வரும் உறவினர் கூட்டத்தால் வீடு நிரம்பி வழியும். நாள் முழுவதும் அவர்களுக்குச் சமைத்துப் போட்டு, மூச்சுகூட விட முடியாத நிலையில் மனைவிதான் வீட்டுச் சிறையில் கைதியாக இருப்பாள். இந்தக் கதையை இயக்குநர் சமுத்திரகனி தொலைக்காட்சி நாடகமாக இயக்கினார். அப்போது கிடைத்த அனுபவம் பிறகு ஆவணப்பட இயக்கம், விவாத நிகழ்ச்சி போன்றவற்றை இயக்க உந்துசக்தியாக அமைந்தது” என்கிறார். கிரவுட் ஃபண்டிங் மூலம் ‘தடயம்’ படத்தை இயக்கியுள்ள தமயந்தி, தற்போது ‘காயல்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

“நான் திரைப்பட இயக்குநரானது எதிர்பாராமல் நிகழ்ந்தது என்றாலும் திரைப்படங்கள் குறித்த ஆர்வம் சிறு வயதிலேயே இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது. பாலுமகேந்திராவின் ‘வீடு’ படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றிருக்கிறேன். அங்கே நான் பார்த்த ஒவ்வொரு காட்சியும் மனதுக்குள் அப்படியே நிலைத்துவிட்டது. வாழ்க்கை ஒரு வட்டமடித்துத் திரைப்பட இயக்கத்துக்குள் நான் நுழைந்தபோது பாலுமகேந்திராவிடமிருந்து கற்றுக்கொண்டது எனக்குக் கைகொடுத்தது. ‘காயல்’ படம் ஒருவகையில் என்னுடைய கதை தான். பாண்டிச்சேரியிலிருந்து ராமேஸ்வரம் வரைக்குமான கடற்கரைப் பகுதியில் நடைபெறும் கதை இது. கூடிய விரைவில் வெளிவரவிருக்கிறது” என்கிறார் தமயந்தி.

புறக்கணிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்

ஆண்களே பெருவாரியாக நிறைந்திருக்கும் திரையுலகில் பெண்ணின் நுழைவைப் பலரும் ஏற்றுக்கொள்வதில்லை என்கிறார். “நான் இருவகையான விமர்சனங்களையும் எதிர்கொண்டேன். பெண் இயக்குநர் என்று மரியாதையாக நடத்துகிறவர்களும் உண்டு. இவ எல்லாம் என்ன பண்ண வந்திருக்காளோ என்று காதுபட விமர்சித்தவர்களும் உண்டு. இந்த இரு தரப்பையும் நான் எதிர்கொள்ளும் விதம் மாறியிருக்கிறது. ஒரு பெண்ணை முடக்க அவள் மீது நடத்தை சார்ந்த அம்புகளை எய்வது பலருக்கும் எளிதாக இருக்கிறது. ஆண்கள் மட்டுமல்ல, ஆண் மனம் கொண்ட பெண்களும் இப்படி விமர்சிப்பதுண்டு. இது சமத்துவம் நிறைந்த உலகம் என்று நம்பி அதற்கான வேலைகளை நாம் செய்யும்போது கோமாளியாக மாற்றப்படுவோம். ஆனால், அதைக் கடந்து வர வேண்டும்” என்கிறார்.

பெண்கள் ஏன் புனைவையே எழுதுகிறார்கள் என்றால், “வாழ்க்கை அவர்களுக்கு எதைத் தந்திருக்கிறதோ அதைத்தானே எழுதுவார்கள்?” என்று புன்னகைக்கிறார். பெண்கள் பல துறைகளில் தடம்பதிக்கிற போதும் சிந்தனை அளவில் பின்தங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். “எழுத்து என்பது சக்தி. அது திமிர் அல்ல. அது திமிராகக் கொள்ளப்படும்போது எழுத்து நீர்த்துப்போகும். சிகரத்தைத் தொட்ட எழுத்தாளர்கள் எல்லாம் அவர்களின் உயரத்தை அறிவதே இல்லை. தன் சிறகுகளின் வண்ணத்தை உணராத வண்ணத்துப்பூச்சியைப் போன்ற அந்தப் பணிவுதான் எழுத்தைச் செழுமையாக்கும். நாம் வாழ்க்கையை வாசிக்க வேண்டும். தேவையற்றதை நிராகரிக்கவும் புறந்தள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும். மனவோட்டம் விரிவடைய வேண்டும். அதுதான் நம்மை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்” என்கிறார் தமயந்தி.

தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x