Published : 30 Jun 2014 03:14 PM
Last Updated : 30 Jun 2014 03:14 PM
உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுபநிகழ்வுகளுக்குச் சென்றால் என்ன செய்வோம்? அவர்கள் தேவைக்கும் நம் விருப்பத்துக்கும் ஏற்ப பணமோ, பொருளோ பரிசாகத் தருவோம். ஆனால் திருநெல்வேலி மாவட்டம் நல்லூரைச் சேர்ந்த வாகீஸ்வரி, ஒவ்வொரு விசேஷத்துக்கும் தான் செய்த கைவினைப் பொருட்களைப் பரிசாகத் தருகிறார். அது தனக்கு நிறைவையும், பெறுகிறவருக்கு மகிழ்ச்சியையும் தருவதாகச் சொல்கிறார் வாகீஸ்வரி.
“எனக்குத் திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. சென்னையில் இருந்த நாங்கள், என் கணவரோட பணி மாறுதலுக்காக நல்லூர் வந்து 2 வருடங்கள்தான் ஆகிறது. நான் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகக் கைவினைப் பொருட்கள் செய்து வருகிறேன். சென்னையில் இருக்கும்போது ஒவ்வொரு வருடமும் நவராத்திரியை யொட்டி கண்காட்சி நடத்துவேன். அதன் மூலம் எனக்கு நிறைய நண்பர்களும் வாடிக்கையாளர்களும் கிடைத்தார்கள். திருநெல்வேலி வந்த பிறகு கண்காட்சி நடத்துவது எப்படி என்று கவலையாக இருந்தது. உடனே கைவினைப் பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு சென்னைக்குச் சென்று 2 நாட்கள் கண்காட்சி நடத்திவிட்டுத்தான் திரும்பினேன்” என்று சொல்லும் வாகீஸ்வரி, ‘பிளாஸ்டிக்கை ஒழிப்போம்’ என்ற கருத்தைத் தன் கலையின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.
முடிந்த வரை இயற்கைக்குத் தீங்கு விளைவிக்காத பனையோலை, காகிதம் போன்ற மூலப் பொருட்களை வைத்து நிறைய பொருட்களைச் செய்கிறார். பயன்படுத்திவிட்டு வேண்டாம் என்று தூக்கியெறியும் பொருட்களையும் கலைப் பொருளாக்கி விடுகிறார் இவர். தேங்காய் ஓடு, பெருங்காய டப்பா, இனிப்புகள் அடைக்கப்பட்டு வரும் டப்பா என்று சகலத்துக்கும் ஏதாவது ஒரு வடிவம் கொடுத்துவிடுகிறார்.
“ஓவியம் வரைவதில் அடிப்படையை மட்டும் முறைப்படி கற்றுக் கொண்டேன். மற்றவை எல்லாம் என் கற்பனையில் உதித்தவைதான். நான் நிறைய கண்காட்சிகளுக்குப் போவேன். அங்கே பார்க்கிற பொருட்களுடன் என் கற்பனையையும் கலந்து புதுவிதமாகச் செய்ய முயற்சிப்பேன். அதற்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது” என்கிற வாகீஸ்வரி, தன்னிடம் பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் இன்று சிறுதொழில் முனைவோராக இருப்பது பெருமிதம் தருகிறது என்கிறார்.
“நான் செய்கிற கைவினைப் பொருட்கள் மூலம் கிடைக்கிற வருமானத்தில் ஒரு பகுதியை எளியவர்களுக்கு உதவுவதில் செலவிடுகிறேன். என் கணவருக்கும், குழந்தைகளுக்கும் பரிசுகள் வாங்கித் தருவேன். இது என் உழைப்பில் கிடைத்தது என்ற நினைப்பே என்னை உற்சாகத்துடன் வைத்திருக்கிறது” என்கிறார் வாகீஸ்வரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT