Published : 06 Feb 2022 06:17 AM
Last Updated : 06 Feb 2022 06:17 AM

ஆணாதிக்கத்தின் கோர முகம்

முகத்தில் கறுப்புச் சாயம் ஊற்றப்பட்ட இளம் பெண் ஒருவர், தலை முடி வெட்டப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுத் தெருவில் அடித்து இழுத்துவரப்பட்ட வீடியோ கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வெளியானது. பார்த்தவர்களைப் பதறச் செய்த அந்த வீடியோவில் இடம்பெற்ற காட்சி தலைநகர் டெல்லியில் நடந்தது. நாடு முழுவதும் இந்தியக் குடியரசு நாள் கொண்டாடப் பட்டுவந்த வேளையில் தான் அந்த 20 வயதுப் பெண் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, வீதிக்கு இழுத்துவரப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். அந்தப் பெண்ணின் தங்கை கொடுத்த வாக்குமூலம்தான் உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.

டெல்லியின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் அந்த இளம்பெண் திருமணமானவர். இரண்டரை வயதில் குழந்தை இருக்கிறது. அவர் குடியிருந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த நவம்பர் மாதம் தற்கொலை செய்துகொள்ள அதற்கு இந்தப் பெண்தான் காரணம் என்று அந்த இளைஞனின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதற்குத் தண்டனை தரும்விதமாக ஜனவரி 26 அன்று அந்த இளம்பெண்ணை அவரது பிறந்தவீடு இருக்கும் கஸ்தூர்பா நகருக்கு அடித்து இழுத்துவந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். “தன்னை மூன்று ஆண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கியதாகவும் அதை அங்கிருந்த பெண்கள் ஊக்குவித்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார்” என்று டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மலிவால் தெரிவித்துள்ளார். சுற்றியிருந்தவர்கள் அந்தக் கொடுமையை வேடிக்கை பார்த்தபடியும் வீடியோ எடுத்தபடியும் இருந்தார்களே ஒழிய ஒருவர்கூடத் தன் அக்காவுக்கு நடந்ததை எதிர்க்கவில்லை என்று வேதனையுடன் சொல்லியிருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை. அந்த இளம்பெண்ணை அடித்துத் துன்புறுத்திய கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பது, நம் மனங்களில் ஆணாதிக்கச் சிந்தனை பாலின வேறுபாடு இல்லாமல் எந்த அளவுக்கு ஊறிப்போயிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x