Published : 12 Dec 2021 03:30 AM
Last Updated : 12 Dec 2021 03:30 AM
‘நாட்டின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் மறைந்தார்’ என்கிற செய்தியை ஒற்றை வரியில் கடந்து போய்விட முடியவில்லை. வாழ்க்கை விநோத மானது. நாம் சந்திக்கும் மனிதர்களும் அப்படியேதான். பல ஆண்டுகள் பழக்கத்தில் சிலர் கசந்துவிடுவதுண்டு; ஒரே சந்திப்பில் சிலர் மனதோடு ஒட்டிக்கொள்வதுண்டு. ‘முதல் பெண்கள்’ தொடருக்காக இந்த ஆண்டு ஜனவரி மாதம் சாரதா அம்மாவைப் பேட்டி எடுக்க விரும்பினேன். அலைபேசி எண்ணைத் தேடியெடுத்து அழைத்தால், அவரது உதவியாளர் பேசினார். “மேடம் ஈமெயில் ஐடிக்கு மெயில் அனுப்புங்க. அவங்க பதில் போடுவாங்க” என்று சொல்லி அவரது மின்னஞ்சல் முகவரி தந்தார்.
97 வயதில் மின்னஞ்சல் பார்த்துப் பதிலிடும் மருத்துவரா? நம்ப முடியவில்லை. பேட்டி காணும் என் விருப்பத்தை மின்னஞ்ச லில் அனுப்பினேன். அடுத்த நாளே, ‘தாராளமாக. பேட்டியை ஸ்கைப் வழியாக வைத்துக்கொள்ளலாம். என் தனிப்பட்ட மொபைல் எண்ணுக்குக் காலை பத்து மணிக்கு அழைக்கவும்’ என்று தன் எண்ணும் அனுப்பியிருந்தார். முதலில் மின்னஞ்சல், அடுத்து ஸ்கைப் வழி பேட்டி! அவரது உதவி யாளரிடம் பேட்டிக்கான நாள், நேரம் குறித்துக் கொண்டேன். ஒரு வாரம் திடீரென களப்பணிக்கு நெல்லை செல்ல நேர்ந்ததால், சொன்ன நாளில் பேட்டி எடுக்கமுடியவில்லை. அதற்குள்ளாக ஸ்கைப் எப்படித் தரவிறக்கம் செய்வது, அவரது பயன்பாட்டாளர் பெயர் என்ன, எப்படி அதன் மூலம் அவரை அழைப்பது என்கிற நீண்ட மின்னஞ்சல் ஒன்றையும் அனுப்பிவிட்டார். அவரது உதவியாளரை அழைத்து, பேட்டியை அடுத்த வாரம் வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டு, அவர் அனுமதியுடன் தள்ளிவைத்துக் கொண்டேன்.
குறையாத உற்சாகம்
பேட்டியன்று மிகச்சரியாக பத்து மணிக்கு ஆன்லைன் வந்துவிட்டார். “சின்ன பெண்ணாக இருக்கிறாயே… நான் வயதான ஆளை அல்லவா எதிர்பார்த்தேன்?” என்றுவிட்டு, “நெல்லைப் பயணம் நல்லபடியாக முடிந்ததா?” என்று கேட்டார்.
நெற்றியில் ஏற்றி வைத்த மூக்குக் கண்ணாடியை 40 வயதிலேயே வீடு இரண்டுபடத் தேடும் என்னை நினைத்து வெட்கப்பட்டுக்கொண்டேன். “எப்படி நினைவு வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டதற்குச் சிரிப்புதான் பதில். பேட்டியைத் தொடங்கினால், முதல் பத்து நிமிடங்கள் அவரே என்னை பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார்! எதிரே யார் இருந்தாலும் அவர்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற உண்மையான அக்கறை அவரது கேள்விகளில் இருந்தது. சரளமான ஆங்கில உரையாடல். எங்கும் பிசிறு தட்டாமல், சிந்தனை ஓட்டம் தடைபடாமல், நிறுத்தி நிதானமாக ஆனால் தெளிந்த நீரோடை போலப் பேசினார்.
மருத்துவப் படிப்பில் சேர விரும்பியவர் கல்லூரியில் அறிவியல் பிரிவு கிடைக்காமல், கிடைத்த வாய்ப்பான வரலாற்றுப் பிரிவில் படித்தார். ‘அறிவியலும் சேர்த்துப் படிக்கிறேன்’, என்று கல்லூரி முதல்வரிடம் அனுமதி வாங்கினார். “வரலாறு அப்பாவுக்காக, அறிவியல் எனக்காக. அந்தக் காலத்தில் பெண்கள் படிக்க வேண்டும் என்று சமூகம் விரும்பியது. இரண்டு குரூப்பிலும் சேர்ந்து படித்துத் தேர்வானேன்” என்றார். சாரதா, நினைத்ததை நடத்தி முடிக்கும் திடமான மனம் கொண்டவர். புதியதைக் கற்கும் ஆர்வமும் உண்டு. ஆந்திரத்தின் பீத்தபுரம் பொது மருத்துவமனையில் பணி யாற்றத் துணிந்து ரயிலேறிய போது சாரதாவுக்கு தெலுங்கில் ஒரு சொல்கூடத் தெரியாது. 97 வயதில் இன்டர்நெட்டும், ஸ்கைப்பும் புரிந்துகொண்டு அவர் லாகவமாகக் கையாண்டதில் ஆச்சரியமே இல்லை!
நோயாளிகள் மீதான கரிசனம்
வாழ்க்கையின் மிக மோச மான அனுபவம் என்ன என்று கேட்டதற்கு, ‘ஊழியர்கள் வேலைநிறுத்தம்’ என்றார். “கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையின் சமையல் ஊழியர்கள் ஒரு முறை வேலைநிறுத்தம் செய் தார்கள். நானோ, நீங்களோ உணவின்றி ஒரு வேளை தாக்குப் பிடிக்கலாம். மனநலப் பாதிப்புள்ளவர் களால் முடியுமா? ஏன் உணவு வரவில்லை என்று அவர்களுக்குப் புரியுமா சொல்லுங்கள்? அடுத்த நொடியே சமையலறைக்குச் சென்று அன்றைய சமையலுக்குத் தேவையானதைச் செய்யத் தொடங்கிவிட்டேன். மற்ற வர்களும் என்னுடன் சேர்ந்து கொண்டார்கள்” என்றார். சக மனிதர்கள் மேல், குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மேலான சாரதாவின் இந்த உள்ளார்ந்த அக்கறையே கீழ்ப்பாக்கம் மனநன மருத்துவமனையை இந்நிலைக்கு உயர்த்தியது. கட்டுரைக்கு அவரது இளம் வயது ஒளிப்படங்களை இணையத்தில் தேடினால், எதுவும் தென்படவில்லை. “உங்களை வீட்டில் சந்தித்துப் படங்கள் எடுக்கட்டுமா? உங்கள் சிறுவயதுப் படங்கள் கிடைத்தால் அவற்றையும் ஸ்கேன் செய்துகொள்கிறேன்” என்று மின்னஞ்சல் அனுப்பினேன். அரை மணி நேரத்தில் மின்னஞ்சலைப் பார்த்துவிட்டு அழைத்தார்.
“சிறு வயதுப் படங்கள் பெட்டிகளில் மேலே இருக்கின்றன. இரண்டு நாள்கள் கழித்து, காலை பத்து மணிக்கு வீட்டுக்கு வா. எடுத்து வைக்கிறேன்” என்றார். அவரை நேரில் சந்திக்கச் சென்ற நாளை மறக்கவியலாது. கரோனா பொதுமுடக்கக் காலம் என்பதால் வெகு முன்னெச்சரிக்கை உணர்வுடன் இருந்தார். வீட்டு வாயிலில் சானிடைசர் வைக்கப்பட்டி ருந்தது. அவரது அறையில் கணினியின் முன் அமர்ந்திருந்தார். எளிய கேரளப் பருத்தி சேலை, கண்கள் வரை எட்டிய புன்னகை. “இங்கே பார்… சில படங்கள் டிரைவில் எடுத்து வைத்திருக்கிறேன். இவற்றை அனுப்பட்டுமா?” என்று கேட்டு அனுப்பினார். அவர் ஆரம்பித்து நடத்திவரும் ஹோம்களின் படங்களைக் காட்டினார். அவருக்கு நிறைய கனவுகள் இருந்தன. “இந்தக் கட்டமைப்பு போதாது. இன்னும் நிறைய செய்ய வேண்டும்” என்றார்.
ஓய்வில்லா மருத்துவப் பணி
படங்கள் எடுக்க வேண்டும் என்றதும் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் வரவேற்பறைக்கு வந்தார். “நானே வயதானவள். என்னைப் போய் என்ன படமெடுக்கப் போகிறாய்?” என்று கேட்டுச் சிரித்தார். ஆனால், கேமராவைக் கையில் எடுத்ததும், குழந்தை போன்ற உற்சாகத்துடன், “இங்கே நிற்கவா? உட்காரவா?” என்று கேட்டுப் படங்கள் எடுக்க உதவினார். அவரது இளம் வயதுப் படங்கள் மேசையில் விரித்துவைக்கப்பட்டிருந்தன. “நீ கேட்ட படங்கள் இங்கே இருக்கின்றன. என்ன வேண்டுமோ, எடுத்துக் கொள்” என்றார். “உடம்பை கவனித்துக்கொள். அடிக்கடி வெளியே சுற்றாதே. விரைவில் சந்திப்போம்” என்றுவிட்டு அறைக்குள் சென்றார். புறப்படும்போது பணிப்பெண்ணிடம், “அம்மாகிட்ட சொல்லிட்டுக் கிளம்பவா?” எனக் கேட்டேன். “அவுங்க ஸ்கைப்ல பேஷன்ட்டைப் பார்த்துட்டு இருக்காங்க” என்று பதில் வந்தது. அறைக்குள் சிரித்தபடி யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். அந்தச் சிரிப்பை ரசித்துவிட்டுக் கிளம்பினேன்.
பேட்டி வெளியானதும் அதன் சுட்டியை மின்னஞ்சலில் அனுப்பினேன். “என் குறைபாடுகளையும் தாண்டி நீ நன்றாகச் செய்திருக்கிறாய், மிக்க நன்றி” என்று பதில் அனுப்பினார். எவ்வளவு உயரம் போனாலும், தரையில் கால் பதித்திருக்க வேண்டும் என்று எனக்கு நினைவூட்டிய பதில் அது. சாரதாம்மாவை அந்தக் கடைசிச் சிரிப்புடனே நினைவுகளில் பொத்தி வைத்திருக்கிறேன். அவரைச் சந்தித்த ஆயிரக்கணக்கானவர்களில், எங்கோ யார் நினைவடுக்கிலோ அந்தச் சிரிப்புடன் சாரதா வாழ்ந்துகொண்டேதான் இருப்பார். அவருக்கு மரணமில்லை.
கட்டுரையாளர், ‘முதல் பெண்கள்’, ‘ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை’ நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: niveditalouis@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT