Published : 03 Dec 2021 07:24 PM
Last Updated : 03 Dec 2021 07:24 PM
காலம் காலமாக ஆணாதிக்கவாதிகளால் சுரண்டப்படும் இனமாகவே பெண் இருக்கிறாள். பெண்ணை உடலாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்கவாதிகளை, பெண்ணின் உடலை அவளுக்கே சொந்தமில்லாததாக ஆக்கி வைத்திருக்கும் சமூகத்தை தீப்பொறி பதிலால் சுட்டெரிக்கிறது `என் உடம்பு’ குறும்படம்.
தன் உடலைத் தனக்குத் தெரியாமல் படம் பிடித்து, அதைக் காட்டி பணத்துக்காகவும், பாலியல் இச்சைகளுக்காகவும் ஆணாதிக்க மிருகங்கள் மிரட்டும் சம்பவங்கள் சமூகத்தில் நிறைய நடக்கின்றன. இதுபோன்ற விஷயங்களில் பாதிக்கப்படும் பெண்கள், மிரட்டுபவர்களுக்குப் பணிவது அல்லது தற்கொலை செய்து கொள்வது என்னும் இரண்டு முடிவுகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்பவர்களாகவே இந்தச் சமூகம் சித்தரித்து வைத்திருக்கிறது. பல முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்களும் இதையே காலம் காலமாக பெண்ணின் பெருமையாக காட்டிவந்திருக்கின்றன. இதற்கு மாறாக என் உடம்பு என் கம்பீரம் என்று பிரகடனப்படுத்துகிறது ‘என் உடம்பு’ குறும்படம்.
எவனோ ஒருவன் தன் உடலைப் படம் பிடித்து, அதைத் தன்னுடைய செல்போனுக்கே அனுப்பி இருக்கிறானே.. என்று உடைந்து, துடித்து, எதிலும் கவனம் செலுத்த முடியாமல் தனக்குள்ளேயே புழுங்கி வெதும்பும் போதும், தெளிவு பெற்றவராக, மிரட்டுபவனுக்கு செருப்படி கொடுப்பதுபோல் பதிலடி கொடுக்கும் இடத்திலும் செம்மலர் அன்னத்தின் நடிப்பு, அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்துக்கு நியாயம் செய்கிறது.
படத்துக்கான இசையும் மேற்கத்திய இசை வடிவமான ஓப்ரா பாணியில் ஏகாந்தமாக ஒலிக்கும் குரலிசையும் மனத்தை லேசாக்குகின்றன.
என்னுள் இருக்கும் தீயை
ஒரு மொட்டென
அடக்கி வைத்திருக்கிறேன்
தீண்ட முயன்றால்
சாம்பலாக மிஞ்சுவாய்
அழுகிய உன் அடக்குமுறைக்கு
இனி ஒருபோதும் தலைவணங்க மாட்டேன்
என் உடம்பு
உன்னுடையதில்லை
என்னுடையது
அது எனக்கு எதிராக
உன் கையில் ஒடுங்கும் ஆயுதமல்ல
என் உடல்
என் கம்பீரம்
என் முழக்கம்
ஆழ்கடலில் விழித்துறங்கும் சங்கு
என் உடல்
- படத்தில் இடம்பெற்றிருக்கும் மனுஷியின் இந்தக் கவிதை இன்னொரு பலம்.
“எவரும் எதிர்பாராத ஓர் அதிரடிச் செயலால் படத்தின் நாயகி தன்னை மிரட்டியவனைச் செயலிழக்க வைத்தாலும், தன்னை அப்படி படம் பிடிப்பதற்கு உதவிய கடை உரிமையாளர், படம் பிடித்துத் தன்னை மிரட்டியவர்களுக்கு எதிராக அந்தப் பாத்திரம் காவல் துறையில் ஒரு புகாரைக் கூட பதிவு செய்வதாக காட்சிகள் இல்லையே?” என்று படத்தின் இயக்குநர் எர்த்லிங் கவுசல்யாவிடம் கேட்டோம்.
“படத்தின் நாயகி இறுதியில் செய்யும் விஷயத்தின் மூலம் தன்னியல்பில் மற்ற விஷயங்கள் எல்லாம் நடக்கும். காலம் காலமாகப் பெண் உடலை பெண்ணுக்கே அந்நியமானதாக நம்முடைய சமூகத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். இந்த பிம்பத்தை உடைக்க வேண்டும். தன்னுடலை பெண் முதலில் ரசிக்கவும் அன்பு செய்யவும் மதிக்கவும் தெரியவேண்டும். தன்னுடல் மீதான சுயமதிப்பு, சுய கவுரவம் பெண்ணுக்கு வரவேண்டும். அதுதான் இந்தப் படத்தின் நோக்கம்” என்றார்.
புதுச்சேரியைச் சேர்ந்த எர்த்லிங் கவுசல்யா அடிப்படையில் கட்டிட வடிவமைப்புக் கலைஞர். கடந்த 15 ஆண்டுகளாக ஆக்ஸிசபில் ஹொரைஸன் ஃபிலிம்ஸ் சார்பாக சமூக நீதியை வலியுறுத்தும் ஆவணப்படங்களை ரகு, மான்வரிக் தாஸ், ரமேஷ் ஆகிய நண்பர்களோடு இணைந்து குறும்படங்களைத் தயாரித்து தங்களின் யூடியூப் சேனலில் வெளியிட்டு வருபவர். 2012ல் ‘ஐநூறும் ஐந்தும்’ என்னும் திரைப்படத்தை யூடியூபில் வெளியிட்டிருக்கிறார். அண்மையில் இவர் இயக்கிய ‘அஷ்வமித்ரா’ தமிழ் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘என் உடம்பு’ குறும்படத்தை இங்கே காணலாம்:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT