Last Updated : 14 Nov, 2021 03:06 AM

 

Published : 14 Nov 2021 03:06 AM
Last Updated : 14 Nov 2021 03:06 AM

களத்தில் நிற்கும் போராளி துளசி

எந்த வகை போராட்டமாக இருந்தாலும், அதில் பங்கேற்பவர்களை இரண்டு வகைகளாகப் பிரித்துவிடலாம். பிரச்சினைகள், பாதிப்புகள், தீர்வுகளைப் பேசிக்கொண்டு இருப்பவர்கள் முதல் வகையினர். மற்றொரு வகையினர் அமைதியாகவும் அழுத்தமாகவும் தீர்வுகளைச் செயல்படுத்தும் களப் போராளிகள். சமீபத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற 72 வயது துளசி கவுடா இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்.

யார் அந்த துளசி?

கர்நாடகாவில் உள்ள ஹொன்னல்லி கிராமத்தில் வசிக்கும் ஹலக்கி வொக்கலு பழங்குடியினத்தைச் சேர்ந்த மூதாட்டி இவர். இயற்கை ஆர்வலரான இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காகத் தொய்வின்றிப் பாடுபட்டுவருகிறார்.

மரக்கன்று நடுவது இவருடைய விருப்ப பணி என்பதால், காட்டிலாகாவில் தற்காலிகத் தன்னார்வலராகப் பணிபுரிந்துள்ளார். 12வது வயதிலிருந்தே மரம் நட்டுவருவதோடு, அந்த மரங்களைத் தொடர்ந்து பராமரிக்கவும் செய்கிறார். இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்.

அவர் பள்ளி சென்றதில்லை. இருப்பினும், நட்ட அனைத்து மரக்கன்றுகளின் சிறப்பம்சமும் துளசிக்கு நன்றாகத் தெரியும். மூலிகைத் தாவரங்கள் உள்ளிட்ட பல அரிய வகை தாவரங்களின் பெயர்களை அவர் அறிந்து வைத்திருக்கிறார். காடுகள், காட்டின் தன்மை, விதைகளின் வீரியம் போன்றவற்றைக் குறித்து அவர் கொண்டிருக்கும் அறிவும், தெளிவும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் புரிதலுக்கு இணையானவை.

விருதுக்கே பெருமை சேர்த்தவர்

72 வயது ஆகிவிட்டதே என்று ஒதுங்கிவிடாமல், இன்றைக்கும் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டுவருகிறார். இளைய தலைமுறையும் மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதற்காக, காடுகள், தாவரங்கள் குறித்த அனுபவப் பாடங்களைக் கற்றுத் தருகிறார் துளசி. தன்னுடைய பரந்த அறிவைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் இளைய தலைமுறையினருக்குச் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் உணர்த்துகிறார். அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டதன் காரணமும் இதுவே.

சிலரால்தான் விருதுகளுக்குப் பெருமை சேர்க்க முடியும். துளசி அந்தச் சிலரில் ஒருவர். குடியரசுத் தலைவரிடம் பத்ம விருதுபெறச் சென்றபோது எந்த ஒப்பனையும் இல்லாமல், செருப்புகூட அணியாமல், தனது இயல்பான, எளிய தோற்றத்துடன் கலந்துகொண்டார். இயற்கையை உண்மையாக நேசிப்பவரால் வேறு எப்படி இருக்க முடியும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x