Published : 26 Sep 2021 03:25 AM
Last Updated : 26 Sep 2021 03:25 AM

துணை நின்ற சட்டம்

மனிதக் கழிவை மனிதர்களே அள்ளும் அவலத்தைப் போக்கும்விதமாக, கைகளால் மலம் அள்ளும் தொழிலுக்குத் தடைவிதித்து 2013-ல் சட்டம் இயற்றப்பட்டது. தீண்டாமை ஒழிப்பின் ஓர் அங்கமாகவும் இந்தச் சட்டம் கருதப்பட்டது. இருந்தபோதும் மலக்குழிக்குள் மனிதர்களை இறக்கிச் சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்தபடிதான் இருக்கின்றன. இந்நிலையில் 2019 டிசம்பர் 23 அன்று மும்பையின் கோவண்டி பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு ஒன்றில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்த மூவர் மூச்சுத் திணறி இறந்தனர். அவர்களுடைய மனைவியர் இழப்பீடு கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். விமலா, நீதா, பானி ஆகிய மூவர் தொடுத்த இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு ‘கண் திறப்பு’ தீர்ப்பாகக் கொண்டாடப்படுகிறது. தீர்ப்பின் சாராம்சமே இதற்குக் காரணம்.

கணவனை இழந்த பெண்கள் மூவருக்கும் மகாராஷ்டிர அரசு தலா பத்து லட்சம் ரூபாயை இழப்பீடாக நான்கு வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கழிவுநீர்த் தொட்டிகளிலோ சாக்கடைக் குழாய்களிலோ இறங்கி வேலைசெய்கிறவர்கள் அரசு ஊழியர்களா தனியார் ஊழியர்களா என்பது தேவையற்றது எனவும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியான இழப்பீட்டை வழங்குவது அரசின் கடமை எனவும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர். கணவனை இழந்த அந்தப் பெண்களின் மறுவாழ்வுக்கு உறுதியளிக்கும் விதமாக அவர்களுடைய குழந்தைகளின் கல்வி ஊக்கத்தொகைக்கு மாநில அரசு உதவும் என்று அரசு சார்பு வழக்கறிஞர் நீதிபதிகளிடம் தெரிவித்தார். சட்டம் இயற்றப்படுவதிலும் அதை அமலாக்குவதிலும் உள்ள துல்லியமே சமூக நீதியை நிலைநிறுத்தும் என்பதற்கு இந்த வழக்கே சான்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x