Published : 12 Sep 2021 03:19 AM
Last Updated : 12 Sep 2021 03:19 AM
நம்மை அழகாகக் காட்டுபவை ஒளிப்படங்கள். அதிலும் அன்றலர்ந்த பூவாக மிளிரும் பச்சிளங்குழந்தைகளின் ஒளிப்படங்கள் விவரிக்க முடியாத அழகு நிறைந்தவை. இதற்கும் ஒரு படி மேலாக, அந்தக் குழந்தை வயிற்றில் துள்ளும்போது அம்மாவை நிறைமாத கர்ப்பிணியாக ஒளிப்படம் எடுப்பது பரவச அனுபவம். அப்படியொரு பரவச நிலைக்குத்தான் நம்மை அழைத்துச் செல்கிறார் அஜந்தா வெங்கட். சின்னத்திரை நடிகைகளை நிறைமாத கர்ப்பிணிகளாக இவர் எடுத்த படங்கள் எல்லாமே அசத்தல் ரகம்.
தொழில்முறை ஒளிப்படக் கலைஞரான அஜந்தா, குழந்தைகளைப் படமெடுப் பதில் தேர்ந்தவர். அவருடைய கணவர் வெங்கட், சின்னத்திரை நடிகர்.
‘‘என் கணவர் சீரியலிலும் நான் போட்டோகிராபியிலும் பிஸியாக இருப்போம். ஒருவருக்கு ஓய்வு கிடைத்தால் இன்னொருத்தருக்கு வேலை இருக்கும். அதனால் நான் அவருடைய ஷுட்டிங் ஸ்பாட்டுக்கும் அவர் எனக்கு உதவியாக என் போட்டோ ஷுட்டுக்கும் வருவது வழக்கம். அப்போதுதான் சின்னத்திரை நடிகர்களின் அறிமுகம் கிடைத்தது. நான் ஒளிப்படக்காரர் என்பதை அறிந்ததும் அவர்களைப் படம் எடுக்கச் சொல்லி கேட்பார்கள். நானே சிலரிடம் கேட்பேன். அப்படி எடுத்துக் கொடுத்த படங்கள் மூலம் அவர்கள் எனக்கு நெருங்கிய தோழிகளாகிவிட்டார்கள்!’’ என்று புன்னகைக்கிறார் அஜந்தா.
மகளால் விளைந்த மாற்றம்
அஜந்தாவுக்குச் சொந்த ஊர் கோயம்புத்தூர். அப்பா அரசு அலுவலர். பள்ளி நாட்களிலேயே இவருக்கு ஒளிப்படம் எடுப்பதில் ஆர்வம். அப்பா வாங்கிக் கொடுத்த ஃபிலிம்ரோல் கேமராவில் படங்களாக எடுத்துத் தள்ளியவர், கல்லூரிக்குப் போனதும் திருமண ஒளிப்படங்களை எடுத்தார். திருமணம் முடிந்து குழந்தை பிறந்ததும் தன் மகள் தேஜஸ்வினியை விதவிதமாய்ப் படமெடுத்தார். அவர் எடுத்த படங்களைப் பார்த்து வியந்த குடும்பத்தினர், இதையே தொழிலாகச் செய்ய ஆலோசனை தந்தனர். அவர்களது பாராட்டு தந்த நம்பிக்கையில் குழந்தைகள் போட்டோகிராபியில் அஜந்தா இறங்கினார். இதற்குக் கணவர் வெங்கட் ஒத்துழைக்க சென்னையில் ஒளிப்பட நிறுவனம் ஒன்றில் ஆறு மாதப் பயிற்சியும் எடுத்தார்.
பிறந்த குழந்தையிலிருந்து ஆறு மாதக் குழந்தைகள் வரை ஆயிரக்கணக்கில் படங்களை எடுத்திருக்கிறார் அஜந்தா.
‘‘பச்சிளங் குழந்தைகளை போட்டோ எடுப்பதை 2015இல் நான் தொடங்கியபோது ஓரிருவர்தான் இந்தத் தொழிலில் இருந்தனர். இப்போது தெருவுக்கு ஒருவர் இருக்கிறார். ஆனால், என் வாடிக்கையாளர்கள் என்னைத் தவிர யாரையும் அழைப்பதில்லை. அவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் என்னையே பரிந்துரைப்பார்கள். சின்னத்திரையில் சுஜிதா, ஹேமா போன்றவர்களைக் கர்ப்ப காலத்தில் படமெடுத்த பின்பு அவர்கள் சொல்லி நிறைய நடிகைகள் என்னை அழைக்கிறார்கள். கோவையில் பாதி, சென்னையில் மீதி என்று இருப்பதால் அவர்கள் தரும் நேரம் எனக்கு ஒத்துவருவதில்லை’’ என்று சொல் லும் அஜந்தா, கர்ப்பிணிகளையும் நேர்த்தியாகப் படமெடுக்கிறார். பிறந்த குழந்தைகளையும் கர்ப் பிணிகளையும் படமெடுக்க ஏற்ற வகையில் அதற்கான பிரத்தியேக ஆடைகளையும் இவரே வைத்தி ருக்கிறார்.
“மேற்கத்திய நாடுகளில் எப்போதோ வந்துவிட்ட கலை இப்போதுதான் இங்கே பரவத் தொடங்கியுள்ளது. குழந்தை வயிற்றில் இருக்கும்போது மூன்று மாதத்திலேயே தாயின் முகப்பொலிவு கூடும். ஆறு மாதத்தில் அது நிறைமதிபோல இருக்கும். அந்த நேரத்தில் படம் எடுத்து வைத்துக் கொள்வதை இப்போது நிறைய பெண்கள் விரும்புகிறார்கள். பொதுவாகக் கர்ப்பிணிகள் நான்கு மாதத்திலிருந்து ஆறு மாதம் முடிவடைவதற்குள் படம் எடுத்துக்கொள்வது நல்லது. ஏழாம் மாதம் தொடங்கிவிட்டால் அவர்களை நீண்ட நேரம் நிற்க வைத்து வருத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் அதை நான் செய்வதில்லை!’’ என்று சொல்கிறார் அஜந்தா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT