Published : 05 Sep 2021 06:01 AM
Last Updated : 05 Sep 2021 06:01 AM
டெல்லிப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து வங்க எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி, தமிழ்ப் படைப்பாளிகள் பாமா, சுகிர்தராணி ஆகியோரது படைப்புகள் நீக்கப்பட்டது குறித்து ஆகஸ்ட் 29 தேதியிட்ட ‘பெண் இன்று’வில் எழுதியிருந்தோம். எல்லாத் துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் போதுமான அளவுக்கு இருக்கிறதா என்றும் முடிவெடுக்கிற அதிகார அமைப்புகளில் பெண்களின் பங்கேற்பை உறுதிசெய்ய எவற்றில் எல்லாம் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டிருந்தோம். விகிதாச்சார அடிப்படையில் எல்லாத் துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்த வேண்டும் என்பதே பெரும்பாலான வாசகர்களின் கருத்தாக இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு:
தி.சௌந்தர்ராஜன், அசோக்நகர், சென்னை.
மக்களவையில் பெண்களின் பங்களிப்பைக் குறைந்தது 33 சதவீதம் என்கிற அளவி லாவது செயல்படுத்துகிறபோதுதான் பெண் களை எல்லாத் துறைகளிலும் பங்கேற்கச் செய்ய முடியும்.
பேரா. கரு. பாலகிருஷ்ணன் (பணி நிறைவு), மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
சமூகத்தில் பெண்களின் நிலை ஆண்களால் மட்டுமே தீர்மானிக்கப் படுகிறது. முதலில் தந்தை, பின் கணவர் அதன் பின்னர் மகன் என்று இருக்கிறது அந்தக் கட்டமைப்பின் வழித்தடம். இது மாற்றப்பட வேண்டும். தொழில்துறையிலும் முடிவெடுக்கும் அதிகாரம் வாய்ந்த பணிகளிலும் அவர்கள் அதிக அளவில் பங்கெடுக்க வேண்டு மானால் அதற்கேற்றவாறு சட்ட திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். பெண்களுக் கென்று தனியான தொழிற்பேட்டைகள் லகுவான சட்ட திட்டங்களுடன் கொண்டுவரப்பட வேண்டும். பெண்களுக்காக இருக்கும் ஒன்றிரண்டு பல்கலைக்கழகங்கள் தூங்கி வழியாமல் துடிப்புடன் செயல்பட வழிவகை செய்யப்பட வேண்டும்.
மணிமேகலை, ஓசூர்.
எண்ணற்ற மாற்றங்களுடன் இச்சமூகம் முன்னேறிச் சென்று கொண்டிருந்தாலும், அங்கீகாரம், பிரதிநிதித்துவம் என்கிற அளவில் பல சறுக்கல்களைச் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறது. இதற்குக் காரணம் ஆணாதிக்கப் போக்குதான். ஒரு சில ஆண்கள்தான் இப்படி என்றாலும் ஒரு குடம் பாலில் துளி விஷமாக அல்லவா இருக்கிறார்கள்? இதனால் பாதிக்கப்படுவது ஒட்டுமொத்தப் பெண்களும்தானே. இந்த விஷக்கிருமிகளைப் புறக்கணித்துவிட்டு, பெண்களை ஊக்குவித்து, அங்கீகாரமளித்து, அடிப்படை அறிவை உரமிட்டு வளர்க்க வேண்டும்.
தேஜஸ், காளப்பட்டி, கோவை.
பெண்களுக்கு 33 சதவீதமல்ல 50 சதவீத ஒதுக்கீடு வேண்டும். அவர்களால் அடுக்களையைத் தாண்டிச் சிந்திக்க முடியாது என்று ஆண்கள் இட்டுவைத்த வரையறையை வெட்டிச் சாய்க்க வேண்டும். எந்தத் துறையிலும் பொறுப்பில் ஒரு பெண், ஒரு ஆண் என்று இருவரை நியமிக்க வேண்டும். அப்போதுதான் ஒருதலைபட்சமாக எடுக்கப்படும் முடிவுகள் குறையும். அதிகாரப் பதவிகளில் பெண்கள் அதிகமாகப் பங்கேற்க வேண்டும். தனக்கான உரிமையைப் பெறுவதில் எந்தவொரு சமரசத்தையும் செய்துகொள்ளக் கூடாது.
தங்கவேல் பழனிச்சாமி, பெரிய கள்ளிவலசு.
பெண்ணின் உரிமை உண்மையில் அரசாங்கத்தின் கையில், அதிகார வர்க்கத்தின் கையில். இவர்கள் நினைத்தால் ஆக்கும் வேலைகளைச் செய்யலாம், அழிக்கும் வேலைகளையும் செய்யலாம். இனியாகிலும் அடிமைத்தனத்துக்கு எதிரான குரல்களைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கும் தகாத வேலைகளைச் செய்யாமல் இருந்தாலே போதும்.
ச.ராஜலெட்சுமி.
உச்ச நீதிமன்றத்துக்குப் பெண் தலைமையேற்கும் வாய்ப்பே இப்போதுதான் வாய்த்திருக்கிறது. அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸின் வெற்றியைக் கொண்டாடிய நாம், நம் பெண்களுக்கு அத்தகைய வாய்ப்பை அமைத்துத் தரும் சூழல் இங்கே ஏன் இல்லை என்பதை யோசிக்க வேண்டும். ஆண்களின் மனோபாவம் மட்டுமன்றி ஆணாதிக்கச் சிந்தனையை உயர்த்திப் பிடிக்கும் பெண்களிடமும் மாற்றம் தேவை. கல்வியும் சமுதாயத்தைத் திறந்த மனத்துடன் பார்க்கும் தன்மையும் பெண்களை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.
வர்ஷ், ஈரோடு.
அரசியல், ராணுவம் போன்றவற்றில் பெண்களின் நிலை முதல் படியிலேயே உள்ளது. இந்நிலை மாற வேண்டும் என்றால் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அரசாங்கம் உறுதிபடுத்த வேண்டும். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை இன்னும் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். ‘ஆண்மை என்கிற பதமே பெண்மையை இழிவுபடுத்துவது. பெண்களால் ஆண்மை என்கிற தத்துவம் அழிக்கப்பட்டால் ஒழிய பெண்ணின் விடுதலை இல்லை’ என்று கூறிய பெரியாரின் வார்த்தைகளை அதிகார அமைப்புகளில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே புரிந்து செயல்பட்டாலே போதும்.
ம.ராஜா, திருச்சி.
பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருக்கும் ஆணாதிக்கச் சிந்தனையை முதலில் களைய வேண்டும். குடும்ப ஓவியத்தில் அப்பா கால் மேல் கால் போட்டு பேப்பர் படிப்பது, அம்மா சமையலுக்குக் காய் அரிவது போன்ற படங்கள் இடம்பெறுவதை மாற்ற வேண்டும். சமத்துவத்துக்கான நாற்றாங்காலை ஒன்றாம் வகுப்பிலிருந்து தொடங்கி மாற்றத்தை அங்கிருந்து கொண்டுவர வேண்டும்.
ர ரஜினி பியூலா ஷோபிகா, நாகமலை புதுக்கோட்டை, மதுரை.
போட்டியில் பங்கேற்கத் தகுதிபெற்றும் வெளிநாட்டுக்கு அனுப்பப்படாததைப் போராடி வென்ற செவித்திறன் குறைபாடு கொண்ட தடகள வீராங்கனை சமிஹா பர்வீனைப் போலத்தான் நாமும் நமக்கான உரிமைகளைப் போராடி வெல்ல வேண்டும். நமது சமூகச் செயல்பாடுகளுக்கான எதிரான தடைகளை உடைத்தெறிந்து முன்னேற வேண்டும்.
குப்புலெஷ்மி, திருச்சிராப்பள்ளி.
சமூகத்துக்கும் மொழிக்கும் தொடர்பு உண்டு என்கிறார் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜுலியா கிறிஸ்துவா. பெண்ணியம், உளப்பகுப்பாய்வு போன்றவற்றில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றிவரும் இவர் மொழி, சிந்தனையைக் கட்டுப்படுத்துகிறது, மொழியின் அமைப்புதான் அந்த மொழியைப் பேசுகிறவர்களின் சிந்தனையைக் கட்டுப்படுத்துகிறது என்கிறார். மொழி ஆணுக்கு முதலிடம் கொடுக்கிறது. சடங்கு, கதை, நாடகம், திரைப்படம் போன்றவற்றில் ஆண்களைத்தான் முதன்மைப்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார். பெண்ணுக்கு விடுதலை வேண்டும் என்றால் முதலில் மொழிப் பயன்பாட்டை மாற்ற வேண்டும். ஆணை மையப்படுத்துகிற மொழியில் மாற்றம் ஏற்பட்டாலே எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT