Last Updated : 15 Aug, 2021 03:24 AM

 

Published : 15 Aug 2021 03:24 AM
Last Updated : 15 Aug 2021 03:24 AM

யாருக்கும் அஞ்சாத வீராங்கனைகள்

இந்தியா சுதந்திரம் பெற்றதன் பவள விழா (75-ம் ஆண்டு) இன்று நாடு முழுவதும் வெவ்வேறு வகையில் கொண்டாடப் பட்டிருக்கும். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழ் ஆண் பெண், மேலோர் கீழோர் என்று எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் இந்தியர்கள் அனைவரும் அடிமைப்பட்டிருந்தபோதும் உள்ளுக்குள் எல்லா வகையான ஒடுக்குமுறைகளும் நிகழ்ந்தபடிதான் இருந்தன. பெண்களும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், அதையும் மீறி ஆயிரக்கணக்கான பெண்கள் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றனர். சிலர் அதற்காகத் தங்கள் வாழ்க்கையையே பணயம் வைத்தனர். இன்னும் சிலரோ உயிரைத் துச்சமென மதித்து, நாட்டின் விடுதலை ஒன்றே குறிக்கோளாக இருந்து விடுதலை வேள்விக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தனர்.

வரலாற்றின் பக்கங்கள் அவர்களைக் கொண் டாடினவோ இல்லையோ ஆனால், அவர்களது ஒப்பற்ற செயல்கள் வீழ்ச்சியுற்ற மனங்களில் எழுச்சியை ஏற்படுத்தியபடிதான் இருக்கின்றன. சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளில் சிலர் இவர்கள்.

கமலாதேவி சட்டோபாத்யாய

வாழ்க்கையே வரலாறு

கமலாதேவி 1903 ஏப்ரல் 3 அன்று மங்களூரில் பிறந்தார். இசையும் நடனமும் இழைந்தோடிய குடும்பத்தில் பிறந்ததால் சிறுவயதிலேயே இவருக்கும் கலைகள் மீது ஆர்வம் இருந்தது. தந்தையின் அகால மரணத்தால் மாமாவின் வீட்டுக்குக் குடியேறினார். அங்கேதான் பெரும் அரசியல் தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சீனிவாச சாஸ்திரி, ரமாபாய், கோபாலகிருஷ்ண கோகலே, அன்னி பெசன்ட், கோவிந்த் ரானடே உள்ளிட்டோர் இவரது அரசியல் பார்வையை விசாலப்படுத்தினர்.

14 வயதில் நடைபெற்ற திருமணம், இரண்டே ஆண்டுகளில் இவரைக் கைம்பெண்ணாக்கியது. கணவனின் மரணத்தோடு வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை என்பதை உணர்ந்த கமலாதேவி, ராணி மேரிக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அப்போது சரோஜினி நாயுடுவின் சகோதரர் ஹரீந்தரநாத் சட்டோபாத்யாயவின் அறிமுகம் கிடைத்தது. நாடகத்துறையின் மீது இருவருக்கும் இருந்த ஈடுபாடு இவர்களை வாழ்க்கையிலும் இணைத்தது. மறுமணம் என்பதே கொலைக் குற்றமாகப் பார்க்கப்பட்ட காலத்தில் இவரது மறுமணம் சமூகப் புரட்சியாக விளங்கியது. பின்னாளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர். இதிலும் கமலாதேவி வரலாறு படைத்தார். இந்திய நீதிமன்றத்தின் சார்பில் சட்டரீதியாக விவாகரத்துப் பெற்ற முதல் பெண் இவர்.

1927இல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஒரே ஆண்டில் கட்சியின் பொதுக்குழுவில் இடம்பெறும் அளவுக்கு உயர்ந்தார். காந்தியுடன் இணைந்து உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். ‘சேவா தள’த்தில் இணைந்து பெண் செயற்பாட்டாளர்களுக்குப் பயிற்சியளித்தார். இவரது செயல்பாடுகளால் எரிச்சலடைந்த பிரிட்டிஷ் அரசு, சேவா தளத்தைத் தடைசெய்ததுடன் இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அரசியல் செயல்பாடுகளுக்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட முன்னோடிப் பெண்களில் முக்கியமானவர் இவர். இந்தியப் பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் குடியேறிய 50 ஆயிரம் கலைஞர்களுக்காக ஃப்ரிதாபாத் என்னும் நகரத்தை உருவாக்க உதவினார். சங்கீத நாடக அகாடமி, பாரதிய நாட்டிய சங்கம், இந்தியக் கைவினைக்கலை கழகம் போன்றவற்றை உருவாக்கினார். திரைத்துறை பெண்களுக்கானது இல்லை என்று சொல்லப்பட்டபோது திரைப்படங்களில் நடித்தார். பெண் முன்னேற்றம் குறித்து இவரிடம் கேட்கப்பட்டபோது, “பெண்களுக்குச் சமமாக இருக்க ஆண்கள் முதலில் கற்றுக்கொள்ளட்டும்” என்றார்.

இந்த உறுதிதான் கமலாதேவி. மதராஸ் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்ணான இவர் 1988 அக்டோபர் 29 அன்று மறைந்தார்.

அம்மு சுவாமிநாதன்

சொல்லும் செயலும் ஒன்றே

கேரளத்தில் உள்ள பாலக்காட்டில் 1894 ஏப்ரல் 22 அன்று பிறந்த அம்மு சுவாமிநாதன், விடுதலைப் போராட்ட வீராங்கனை மட்டுமல்ல; சமூகச் சீர்த்திருத்தவாதியும்கூட. நாட்டு விடுதலையுடன் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் போராடினார். சாதி இந்துக்கள், இடை சாதியினர் மீதும் பட்டியலின மக்கள் மீதும் நிகழ்த்திய வெறியாட்டங்களைக் கடுமையாக எதிர்த்தார். மதராஸுக்குக் குடிபெயர்ந்தது அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியத் திருப்பம். அங்கே கமலாதேவி சட்டோபாத்யாய, அன்னி பெசன்ட், டாக்டர் முத்துலட்சுமி, மாலதி பட்டவர்தன், அம்புஜம்மாள் உள்ளிட்ட பலருடன் இணைந்து ‘விமன்ஸ் இண்டியா அசோசியேஷ’னைத் தொடங்கினார். இந்தியாவின் முக்கியப் பெண்ணுரிமை அமைப்பான இதன் மூலம் குழந்தைத் திருமணம், தேவதாசி முறை ஆகியவற்றை ஒழிக்கப் பாடுபட்டார். பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளையும் கவனப்படுத்தினார். இந்த அமைப்பு 1917ஆம் ஆண்டு மாண்டேகு செம்ஸ்ஃபோர்ட் கமிஷனில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தது.

1934இல் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். தேர்ந்த வழக்கறிஞரான இவர், பெண்களுக்கான அரசியலமைப்பு உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடினார். சாரதா சட்டம், குழந்தைத் திருமணச் சட்டம் உள்ளிட்ட பெண்கள் சார்ந்த சட்டங்களின் சீர்திருத்தத்தில் இவரது பங்கும் உண்டு.

1942ஆம் ஆண்டு ‘ஒத்துழையாமை இயக்க’த்தில் பங்கேற்றதன் மூலம் வேலூர் சிறையில் ஓராண்டு அடைக்கப்பட்டார். 1946-ல் அரசியல் நிர்ணய அவைக்கு மதராஸ் மாகாணம் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசியல் நிர்ணய அவையில் பங்கேற்ற மிகச் சில பெண்களில் அம்முவும் ஒருவர். அங்கே, அடிப்படை உரிமைகள் குறித்தும் மாநிலக் கொள்கைகள் குறித்தும் பேசினார். தான் கொண்ட கொள்கைகளைத் தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடைப்பிடித்தார். தன் இரு மகன்களைப் போலவே இரு மகள்களையும் வளர்த்தார். அவரவருக்குப் பிடித்த துறையில் பயணம் செய்ய துணைநின்றார். ஒரு மகள், கேப்டன் லட்சுமி சாகல், மற்றொருவர் மிருணாளினி சாராபாய். அம்மு சுவாமிநாதனின் அயராத அரசியல் பணி அவரைப் பல்வேறு நாடுகளுக்கும் நல்லெண்ணத் தூதராக அனுப்பிவைத்தது. இந்தியச் சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் சமூக, அரசியல் தளங்களில் மகத்தான பங்காற்றிய அம்மு சுவாமிநாதன், 1978இல் மறைந்தார்.

லட்சுமி சாகல்

கிடைக்காத இரு விடுதலை

அம்மா அம்மு சுவாமிநாதனின் அரசியல் பயணம் தொடங்கிய 1914ஆம் ஆண்டில் பிறந்ததாலோ என்னவோ அரசியல் வாழ்க்கையைத்தான் தேர்ந்தெடுத்தார் லட்சுமி சாகல். இவரது பெயருக்கு முன்னால் இருக்கும் ‘கேப்டன்’ என்பது அடைமொழியல்ல; அடையாளம்! நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வழிநடத்திய இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சி ராணி படைப்பிரிவுக்குத் தலைமை வகித்ததால் கிடைத்த பெருமிதம் அது.

சென்னை மாகாணத்தின் மலபார் மாவட்டத்தில் அக்டோபர் 24 அன்று பிறந்தார் லட்சுமி. இவர் சிறுமியாக இருந்தபோது இவரது அறைக்குள் நுழைந்த இவருடைய அம்மா அங்கிருந்த அழகான ஆடைகளை வெளியே எடுத்துச் சென்று எரித்ததைப் பார்த்து மலைத்து நின்றுவிட்டார். பின்னாளில்தான் அந்த அரசியல் செயல்பாட்டின் பொருள் லட்சுமிக்குப் புரிந்தது. இந்திய விடுதலையில் தென்னகத்தின் பங்கு எவ்வளவு மகத்தானது என்பதையும் உணர்ந்தார்.

1938இல் சென்னை மருத்துவக் கல்லூரி யில் படிப்பை நிறைவுசெய்தார். ஜப்பான் படைகளால் சிறைபிடிக்கப்பட்டிருந்த இந்திய வீரர்களுக்குச் சிகிச்சையளிக்க சிங்கப்பூர் சென்றார். அங்கேதான் விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜியைச் சந்தித்தார். மருத்துவர், படைத்தலைவராகப் பரிணமித்ததும் அங்கேதான். இந்திய தேசிய ராணுவத்தைக் கட்டமைக்கும் பணியில் அவருக்கு உதவியதோடு பெண்கள் படைப்பிரிவுக்கும் தலைமை வகித்தார். பிரிட்டிஷ் படைகளைத் தாக்குவதற்காக 1944இல் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இம்பாலை நோக்கிச் செல்ல, லட்சுமியின் தலைமையின்கீழ் பெண்கள் ஆயுதமேந்தி அப்போதைய பர்மாவில் தாக்குதல் நடத்தினர். அந்தப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு ரங்கூன் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டு, பிரிட்டிஷ்காரர்களின் அதிகாரம் வலுவிழக்கத் தொடங்கிய நிலையில் விடுவிக்கப்பட்டார்.

ஒரு பக்கம் விடுதலைப் போராட்டம் மறுபக்கம் ஆலய நுழைவுப் போராட்டம், குழந்தைத் திருமணம், வரதட்சிணைக் கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான நடைமுறைக் கண்டித்துப் போராட்டம் என்று சமூகச் செயல்பாடுகளிலும் அக்கறையுடன் ஈடுபட்டார். அம்மா காங்கிரஸில் சேர, மகளையோ இடதுசாரிச் சிந்தனை ஆட்கொண்டது. எட்கர் ஸ்நோ எழுதிய ‘Red star over China’ புத்தகமும் பகுத்தறிவாளரான சுஹாசினி நம்பியாருடன் ஏற்பட்ட பழக்கமும் இவரைப் பொதுவுடைமைச் செயல்பாடுகளில் ஈடுபடச் செய்தன. கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருந்த இவருடைய மகள் சுபாஷினி, அகதிகள் முகாம்களில் மருத்துவர் பற்றாக்குறை இருப்பதைச் சொல்ல, 1970களில் கொல்கத்தாவுக்குச் சென்றார். அங்கேயே சில காலம் தங்கியிருந்து மருத்துவப் பணியாற்றினார். பிறகு 57ஆம் வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அந்தக் கட்சியின் பெண்கள் அமைப்பான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைக் கட்டமைத்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தகுந்தது. கான்பூரில் உள்ள மருத்துவ மனையில் தன் இறுதிக்காலம் வரை எளிய மக்களுக்குச் சிகிச்சை யளித்தார். எப்போதும் ஏழைகள், அதிகாரமற்றவர்களின் பக்கம் நின்று செயல்பட்ட லட்சுமி, “விடுதலை என்பது அரசியல் விடுதலை, பொருளாதார விடுதலை, சமூக விடுதலை என்று மூன்று வகைப்படும். இந்தியா முதல் விடுதலையை மட்டுமே அடைந்திருக்கிறது” என்று தன்னைப் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் சொல்லியிருக்கிறார். நாம் அடைய வேண்டிய விடுதலை குறித்து காலமெல்லாம் பேசிவந்த லட்சுமி 2012 ஜூலை 23 அன்று மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x