Last Updated : 08 Aug, 2021 03:17 AM

 

Published : 08 Aug 2021 03:17 AM
Last Updated : 08 Aug 2021 03:17 AM

அவலம்: பாலியல் குற்றங்களின் புதிய பரிணாமம்

இந்தியாவில் 2015 முதல் 2019வரையிலான ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சத்து 71 ஆயிரம் பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவாகியிருப்பதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு சார்பாகத் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் தென்மேற்கு டெல்லியில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட ஒன்பது வயதுப் பட்டியலினச் சிறுமிக்கு நீதி கேட்டுப் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

ஆகஸ்ட் 1 ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டுக்கு அருகில் உள்ள சுடுகாட்டில் இருக்கும் வாட்டர் கூலரிலிருந்து குளிர்ந்த நீரை எடுத்து வருவதற்காகப் பெற்றோரால் அனுப்பப்பட்டிருக்கிறார் அந்த ஒன்பது வயதுச் சிறுமி. அடுத்த அரை மணிநேரத்தில் சுடுகாட்டில் பணியாற்றும் புரோகிதரும் அவருடைய உதவியாளர்கள் மூவரும் வாட்டர் கூலரிலிருந்து மின்சாரம் தாக்கியதால் சிறுமி இறந்துவிட்டதாகத் தெரிவித்துச் சிறுமியின் அம்மாவை உடனடியாக வரவழைத்திருக்கின்றனர். அம்மா வந்தவுடன் அவருடைய எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் சிறுமியின் சடலத்தை உடனடியாக எரியூட்டியுள்ளனர். தகவல் அறிந்து அருகில் இருப்பவர்கள் வந்து எரிந்துகொண்டிருக்கும் சிதையிலிருந்து சடலத்தை உருவியபோது ஒரு காலை மட்டுமே எரியாத நிலையில் மீட்க முடிந்தது. அதை வைத்து சிறுமியின் இறப்புக்கான காரணத்தையும் அவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாகியிருக்கிறாரா என்பதையும் கண்டறிய முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இந்தக் குற்றம் தொடர்பாகப் புரோகிதரையும் மற்ற மூவரையும் டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

தாம் செய்த குற்றங்களுக்கான ஆதாரங்களை அழிப்பதற்காகவே புரோகிதரும் அவருடன் இருந்த மற்ற ஊழியர்களும் மிகுந்த அவசரத்துடன் தாயின் எதிர்ப்பையும் மீறிக் குழந்தையை எரியூட்டியிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. தன் மகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகப் பிள்ளையைப் பறிகொடுத்த தாயும் சம்பவ இடத்தில் இருந்த மற்றவர்களும் குற்றம்சாட்டிய பிறகும் காவல்துறையினர் கைதுசெய்யப்பட்ட நால்வர் மீதான முதல் தகவல் அறிக்கையில், பாலியல் வல்லுறவுக்கான சட்டப் பிரிவைச் சேர்க்கவில்லை. பட்டியல் சாதி, பழங்குடியினர் ஆணையத்திடம் குழந்தையின் அம்மா முறையிட்ட பிறகே இந்த வழக்கில் பாலியல் வல்லுறவுக்கான சட்டப் பிரிவையும் போக்சோ சட்டத்தையும் காவல்துறை சேர்த்துள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நால்வருக்கும் உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று டெல்லியில் மாணவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்புடன் போராட்டம் நடைபெற்றது. பிள்ளையைப் பறிகொடுத்த பெற்றோரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துள்ளன. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. டெல்லி காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லியில் சட்ட-ஒழுங்கு நிலைமை மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் குரலெழுப்பியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக மாதர் சங்கம், மாணவர் சங்கம், பீம் ஆர்மி உள்ளிட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் தலைமையிலான குழு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் அனைத்து வயதுப் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு வல்லுறவு கொண்டவர்களாலேயே கொல்லப்படும் நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றன. இப்படி உயிரிழப்பவர்கள் பெரும்பாலும் பட்டியல் சாதி, பழங்குடியினங்களைச் சேர்ந்த சிறுமிகளாகவும் இளம் பெண்களாகவும் இருக்கிறார்கள். இந்த இரு சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்குகள் 2017-ஐவிட 2019இல் 22.14 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், இதுபோன்ற வழக்குகளில் குற்றத்தை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் அழிக்கப்படுவது பெண் சமூகத்துக்கு எதிரான கொடும் தாக்குதலின் மற்றுமொரு கோரமான பரிணாமமாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படட் 20 வயது பட்டியல் சாதிப் பெண்ணின் சடலத்தை அவருடைய குடும்பத்துக்குத் தெரியாமல் காவல்துறையினர் எரித்ததுப் பெரும் சர்ச்சையானது. இப்போது டெல்லி சிறுமியின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களே ஆதாரங்களை அழித்துள்ளனர். பெண்களுக்கெதிரான குற்றங்களின் எண்ணிக்கை மட்டுமல்ல அவற்றின் வடிவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x