Last Updated : 01 Aug, 2021 06:29 AM

 

Published : 01 Aug 2021 06:29 AM
Last Updated : 01 Aug 2021 06:29 AM

முகங்கள்: சாலையும் பூங்காவும் நம் சொத்து

கட்டிடக் கலைத் துறையில் பணியாளராகப் பெண்களை ஏற்றுக்கொள்கிற பலரும் பெரிய பெரிய கட்டுமானங்களைத் திட்டமிடுகிற அல்லது நிர்வகிக்கிற பணியைப் பெண்கள் செய்வார்கள் என்று நம்ப மறுப்பார்கள். இந்த நம்பிக்கையின்மையைத் தன் அறிவாலும் திறமையாலும் மாற்றுகிறார் கவிதா செல்வராஜ். சென்னையைச் சேர்ந்த இவர், தொழில்முறைக் கட்டிடக் கலைஞராக முத்திரை பதிப்பதுடன், பொது இடங்களைச் சீரமைத்துப் பொதுச் சேவையையும் செய்துவருகிறார்.

கவிதா பிறந்தது சென்னையில் என்கிறபோதும் ராணுவத்தில் பணிபுரிந்த தந்தையின் பணியிட மாறுதலால் டெல்லி, செகந்தராபாத் என்று வெவ்வேறு நகரங்களில் வசித்தவர். கவிதா சிறுமியாக இருந்தபோது அவரது பெற்றோர் சென்னையில் இடம் வாங்கி வீடு கட்ட நினைத்தனர். அதன் கட்டுமானப் பணியை ஷீலா பிரகாஷ் என்கிறவரிடம் கொடுத்தனர். “அது அம்மாவின் தேர்வு. ஒரு பெண்ணைக் கட்டிடப் பொறியாளராகப் பார்க்கப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது விழுந்த விதைதான் கட்டிடக் கலை மீதான ஆர்வம்” எனப் புன்னகைக்கிறார் கவிதா.

இளநிலைப் படிப்பைச் சென்னையிலும் முதுகலைப் படிப்பை ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலும் முடித்தார். சென்னையில் படித்தபோது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் பெரிய கோயிலின் கட்டுமானத்தைப் பார்வையிடச் சென்ற கவிதாவுக்கு, கோயில் மட்டும் கண்ணில்பட வில்லை. “நாம் கோயிலுடன் மட்டும் நின்றுவிடுகிறோம். கட்டுமானம் என்பது அதைச் சுற்றியுள்ள நகரத்தையும் சேர்ந்தது தானே. நகர வடிவமைப்பும் சிறப்பாக இருந்தால் அதன் அழகு கூடுவதுடன் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும்” என்று சொல்கிற கவிதா, நாம் வரலாற்றைக் கொண்டாடத் தவறுவதால் பலவற்றை இழக்கிறோம் என்கிறார். “நகரங்களை நிர்மானிக்கிறபோது வெள்ளம், புயல், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாற்றம் என அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார்.

கண்ணில் படாத உயிரிழப்புகள்

படிப்பு முடிந்து 2002-ல்சென்னை திரும்பியவர், ‘மஹிந்திரா இண்டஸ்ட்ரியல் பார்க்’ நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். பிறகு தங்களது குடும்பக் கட்டுமான நிறுவனமான ‘சி.ஆர்.என்’-ல்இணைந்து பணியாற்றிவருகிறார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்லூரிகள் என்று பெரிய கட்டுமானங்களில் பணியாற்றினார். அவற்றில் இருக்கிற கவனம் ஏன் மக்கள் பயன்படுத்தும் பொது இடங்களை வடிவமைப்பதில் இருப்பதில்லை என்கிற கேள்வி கவிதாவுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. குறிப்பாக மக்கள் நடக்க வேண்டிய நடைபாதையை அதற்குத் தவிர மற்ற அனைத்துக்கும் பயன்படுத்துவது அவரைச் சிந்திக்க வைத்தது. “இதனால் ஏற்படுகிற சாலை விபத்துகள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. விமான விபத்தில் ஒரே நேரத்தில் 200 பேர் இறந்தார்கள் என்றால் பதறுகிறோம். ஆனால், ஆக்கிரமிப்பாலும் சரியான திட்டமிடல் இல்லாமலும் ஏற்படுகிற சாலை விபத்துகளால் தினமும் சிலர் இறப்பதை நாம் பெரிதாக நினைப்பதில்லை” என்று வருத்தப்படுகிறார் கவிதா.

நிறைவு தரும் பணி

தன் நண்பர்கள், தன்னார்வலர்களின் உதவியோடு சாலை, பூங்கா, கால்வாய், பள்ளி போன்றவற்றைச் சீரமைக்கும் பணியில் இறங்கினார். பொது இடம் என்பது அரசாங்கத்தின் பல்வேறு துறைகளையும் உள்ளடக்கியது என்பதால் ஒவ்வொரு துறையிடமும் அனுமதி பெற்று அவற்றைச் சீரமைப்பது பெரும் சவாலாக இருந்திருக்கிறது. “ஆனால், எங்கள் நோக்கத்தை விளக்கிச் சொன்னால் எல்லோருமே அனுமதித்ததுடன் நிதியுதவியும் செய்தார்கள். எங்களிடம் ஆர்க்கிடெக்ட் இருப்பதால் அவர்கள் கட்டுமானத் திட்டமிடலில் உதவுவார்கள். பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்களித்தார்கள்” என்கிறார் கவிதா.

சென்னை மயிலாப்பூரில் உள்ள கல்விவாரு தெருவை இவர்கள் சீரமைத்தது இவர்களின் பணிக்கு ஒரு சோற்றுப் பதம்.

“ஒரு இடத்தைச் சீரமைக்கும்போது அங்கே இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிவிட முடியாது. சிலர் 30, 40 வருடங்கள் அங்கேயே இருக்கலாம். அதனால், அதற்கெல்லாம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். 400 மீட்டர் நீளமுள்ள இடத்தைச் சீரமைக்கவே எங்களுக்கு ஓராண்டுக்கு மேலே ஆனது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக சாந்தோமில் உள்ள ஒரு பூங்காவைச் சீரமைத்தோம். அதற்குப் பிறகு ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் என்னிடம் நெகிழ்ந்து பேசியதை மறக்கவே முடியாது. ‘எங்க குழந்தையை எங்கே அழைத்துச் செல்வதுன்னு நினைப்போம். இந்த பார்க்குக்கு வந்த பிறகு எங்க குழந்தை முகத்துல சந்தோஷத்தைப் பார்க்கறப்ப நிறைவா இருக்கு’ன்னு சொன்னாங்க” என்கிறார் கவிதா.

நம் கடமை

நண்பர்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து செய்துவந்த இதுபோன்ற பொதுப்பணிகளை மேம்படுத்த, 2016-ல் ‘சிட்டி வொர்க்ஸ்’ என்கிற அமைப்பைத் தொடங்கினார். தற்போது அதன்மூலம் பல்வேறு சீரமைப்புப் பணியைச் செய்துவருகிறார். பொதுமக்களும் தங்களிடம் கோரிக்கைவைப்பதாகச் சொல்கிறார். தூத்துக்குடி, தஞ்சாவூர், கோவை போன்ற நகரங்களிலும் சீரமைப்புக்கான கோரிக்கையை அனுப்பியிருக்கிறார். அரசிடமிருந்து உத்தரவு வந்ததும் அதைத் தொடங்கிவிடுவோம் என்று சொல்லும் கவிதா, இதில் பொதுமக்களின் பங்கு மிக அவசியம் எனக் குறிப்பிடுகிறார். “பொது இடங்கள் எல்லாமே நம் சொத்து. அவற்றைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது நம் கடமை. பணத்துக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மனம்தான் அவசியம். நம் வீட்டுக்கு நடுவில் குப்பையைக் கொட்டுவோமா, நம் வீட்டு ஜன்னல்களையும் கதவையும் நாமே உடைப்போமா, பிறகு ஏன் பொது இடங்களில் உள்ள பொருட்களை மட்டும் சேதப்படுத்துகிறோம்? வடிவமைத்துக் கொடுப்பது எப்படி அரசின் கடமையோ அவற்றைப் பராமரிப்பது நம் கடமை. பலர் தங்கள் பகுதியைச் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அது வாழும் பகுதியின் அழகை மேம்படுத்துவதுடன் சுகாதாரத்துக்கும் வழி வகுக்கும்” என்கிறார் கவிதா செல்வராஜ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x