Published : 22 Jun 2014 06:53 PM
Last Updated : 22 Jun 2014 06:53 PM
அசுர வாத்தியமான நாகஸ்வரத்துக்கு இணையான லய வாத்தியம் தவில். எந்த ஒலிபெருக்கியின் துணையும் இல்லாமல் இடியைப் போல் ஒலிக்கக் கூடிய வாத்தியம். ஆண்கள் மட்டுமே கையாளத் தகுந்த இந்த வாத்தியத்தை அரிதாகக் கையில் எடுத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புஷ்பராணி திருச்செல்வம் புகழ்பெற்ற பெண் தவில் கலைஞராக மிளிர்ந்திருக்கிறார். இவருக்கு அடுத்துத் தவில் வாசிப்பில் சுடர்விட்டுக் கொண்டிருப்பவர், பெங்களூரில் வசிக்கும் ஐஸ்வர்யா நந்தகோபாலா.
தந்தை ராஜகோபாலிடம்தான் ஐஸ்வர்யா தவில் கற்றுக்கொண்டிருக்கிறார். ஏறக்குறைய 250 பேருக்குத் தவில் வாசிக்கக் கற்றுக் கொடுத்த ராஜகோபால், தன் மகள் ஐஸ்வர்யாவுக்கு முதலில் தவில் வாசிக்கக் கற்றுக் கொடுக்கவில்லை. தவிலையே தொடக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறார்.
ஆனால், என்ன? ஐஸ்வர்யாவின் ரத்தத்திலேயே ஊறிய இசையால், பள்ளியிலிருந்த மேசை, நாற்காலிகள் எல்லாமே அவருடைய வாத்தியங்களாகின! ஆசிரியர் கண்டிப்பையும் மீறி, வகுப்பறைகளில் ஐஸ்வர்யாவின் தனி ஆவர்த்தனத்தை மாணவர்கள் ரசித்தனர்.
சிறு வயதிலேயே திருமணம் ஆன ஐஸ்வர்யா, குடும்பச் செலவுகளை சமாளிக்க எனக்கு பணம் தாருங்கள் என்று அவருடைய தந்தையிடம் கேட்கவில்லை. மாறாகத் தவில் வாசிக்கக் கற்றுக்கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதன்பிறகுதான் ஐஸ்வர்யாவுக்குத் தவில் பயிற்சி தொடங்கியது.
தளராத முயற்சி
பொதுவாகவே பெண்களின் மென் விரல்களுக்கு உகந்த வாத்தியம் அல்ல தவில். ஏறக்குறைய 20 கிலோ எடையுள்ள இந்த வாத்தியத்தை தோளில் மாட்டிக் கொண்டுதான் கோயில் சடங்குகளிலும் திருமண வைபவங்களிலும் வாசிக்க வேண்டும். விரல்களில் தொப்பி அணிந்து வாசிக்கும் போது காய்ப்பு காய்த்துவிடும். விரலுக்குத் தகாத வீக்கம் வரும். ஆனாலும் தன்னுடைய முயற்சியில் பின்வாங்கவில்லை ஐஸ்வர்யா. அவருடைய சீரிய பயிற்சியால் தவில் வாசிப்பில் படிப்படியாக முன்னேறினார்.
திருமண நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள் என்று தொடங்கி பெண்கள் இசை குழுவிலும் வாசிக்கத் தொடங்கினார். கர்நாடக அரசின் சிறந்த கலைஞருக்கான விருதைப் பெற்றிருக்கிறார். உள்ளூர் மேடைகளில் மட்டும் இல்லாமல் இலங்கை, கனடா, மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் தவிலால் முழங்கிவருகிறார்.
இரண்டு கோபாலர்களால்தான் (கணவர் நந்தகோபால், தந்தை ராஜகோபால்) என்னுடைய தவில் வாசிக்கும் கனவு நனவாகியிருக்கிறது என்கிறார் ஐஸ்வர்யா, நகைச்சுவையாக!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT