Published : 16 May 2021 06:40 AM
Last Updated : 16 May 2021 06:40 AM

பெண்கள் 360: பெண்களின் ஒப்பற்ற அரசியல் முன்னோடி

பெண்களின் ஒப்பற்ற அரசியல் முன்னோடி: கே.ஆர்.கெளரி (1919 ஜூலை 14 - 2021 மே 11)

ஓயாத களப்பணியாலும் உறுதியான செயல்பாடு களாலும் பொதுவாழ்க்கையில், குறிப்பாக அரசியலில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் தன்னிகரற்ற முன்னோடியாகத் திகழ்ந்தவரான கே.ஆர்.கெளரி (102) மே 11 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

கேரள அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமை என்றும் கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டமைத்ததில் இன்றியமையாப் பங்களித்தவர் என்றும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனால் புகழப்பட்டிருக்கும் கே.ஆர்.கெளரி அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவராலும் பெரிதும் மதிக்கப்படும் ஆளுமை. அனைவரும் அவரை ‘கெளரி அம்மா’ என்றே அழைத்தனர்.

சட்டத்தில் பட்டம்பெற்ற கெளரி அம்மா, கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவ இயக்கங்களில் பங்கேற்றார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று ஆங்கிலேயர்களின் வன்முறைத் தாக்குதலுக்கு ஆளானார். வயதுவந்த அனைவருக்கும் முதன் முறையாக வாக்குரிமை அளிக்கப்பட்ட 1948 திருவிதாங்கூர் தேர்தல் தொடங்கி 2006 கேரள சட்டப்பேரவைத் தேர்தல்வரை 16 தேர்தல்களில் போட்டியிட்டு 13 முறை வெற்றிபெற்றார். 1957, 1967, 1980, 1987 ஆண்டுகளில் அமைந்த கம்யூனிஸ்ட் அரசுகளில் வருவாய், கலால் வரி, விற்பனை வரி, சமூக நலன் எனப் பல்வேறு துறைகளில் அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார். முதல்வர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு தலைமையிலான அரசாங்கம் கொண்டுவந்த நிலச் சீர்த்திருத்தச் சட்ட மசோதாவை முன்மொழிந்தவர் கெளரி அம்மாதான்.

கட்சித் தோழரான டி.வி.தாமஸ் என்பவரை மணந்துகொண்டார். இருவரும் கம்யூனிஸ்ட் அமைச்சரவைகளில் ஒரே நேரத்தில் அங்கம் வகித்தனர். 1964-ல் கட்சி இரண்டாகப் பிளவுபட்டபோது தாமஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி லேயே நீடிக்க, கெளரி கட்சியையும் கணவரையும் பிரிந்து மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1980-களிலும் 90-களின் முற்பகுதியிலும் முதல்வர் ஈ.கே.நாயனாரின் அமைச்சரவையில் முக்கியப் பதவிகளை வகித்தார். 1994-ல் கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ‘ஜனாதிபத்ய சம்ரக்ஷண சமிதி’ என்னும் கட்சியைத் தொடங்கி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொண்டார். ஏ.கே.அந்தோணி, உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சரவைகளில் பங்குவகித்தார்.

கடந்த 15 ஆண்டுகளாகக் கட்சி அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தாலும் அவ்வப்போது சமூக அரசியல் விவகாரங்களில் துணிச்சலான கருத்துகளையும் விமர்சனங்களையும் பொதுவெளியில் முன்வைத்து வந்தார்.

கடந்த ஆண்டு கெளரி அம்மாவின் 101-வது பிறந்தநாள் விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா இருவரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

கெளரி அம்மாவின் போராட்ட வாழ்க்கையை முன்வைத்துப் பல கவிதை கள் புனையப்பட்டுள்ளன. திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவருடைய தன்வரலாற்று நூலான ’ஆத்மகதா’ கேரள சாகித்ய அகாடமி விருதை வென்றது. தன் அறிவார்ந்த செயல்பாடுகளால் கேரள அரசியல் மட்டுமல்லாமல் சமூக, பண்பாட்டு அடையாளமாகவும் உயர்ந்து நிற்பவர் கெளரி அம்மா.

மருத்துவமனையிலும் மறுக்கப்படும் பாதுகாப்பு

பக்தர்களால் புனிதமானவையாகக் கருதப்படும் மத வழிபாட்டுத் தளங்களில் மட்டுமல்ல உயிர்காக்கும் கோயில்களாகக் கருதப்படும் மருத்துவமனைகளிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அதுவும் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆண்களுக்கு இந்தப் பெருந்தொற்றுக் காலமும் தடையாக இருப்பதில்லை என்பதை கோவிட் 19 நோய்க்குத் தன் கணவனைப் பறிகொடுத்த பெண் வெளியிட்டுள்ள காணொலி அம்பலப்படுத்தியுள்ளது. நொய்டாவில் வசிக்கும் அந்தப் பெண்ணும் அவருடைய கணவரும் ஹோலி கொண்டாட்டங்களுக்காக பிஹாருக்கு வந்துள்ளனர். ஏப்ரல் 11 அன்று கணவரின் உடல்நிலை நலிவடைந்தது. கோவிட் பரிசோதனையில் தொற்று இல்லை என்று வந்துவிட்டாலும் சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருந்ததால் அவர் பாகல்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன் கணவரின் உயிர் காக்க மருத்துவமனையில் அவருடன் இருந்து போராடிக்கொண்டி ருந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு பாகல்பூர் மருத்துவமனையின் மருத்துவ உதவியாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். உடையைப் பிடித்து இழுத்தல், தொடுதல் போன்ற அத்துமீறல்களை செய்திருக்கிறார். இதை வெளியே சொன்னால் தன் கணவருக்கும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தன்னுடைய தாய்க்கும் ஆபத்து விளையக்கூடும் என்னும் அச்சத்தில் அந்தப் பெண் இதை வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். தன்னுடைய கணவரின் உடல்நிலை மேலும் மோசமானதை அடுத்து பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தபோது அங்கிருந்த மருத்துவர் ஒருவரும் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். இப்போது கணவர் இறந்த பிறகு மருத்துவமனைகளில் தனக்கு நிகழ்ந்தவற்றை விளக்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. பாகல்பூர் காவல்துறை இந்தச் சம்பவத்தை விசாரிக்க தனிக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

பாகிஸ்தான் நிர்வாகப் பணியில் முதல் இந்துப் பெண்

பாகிஸ்தான் நிர்வாகப் பணிக்கு முதல் முறையாக இந்துப் பெண் ஒருவர் தேர்வாகியுள்ளார். இது இந்திய ஆட்சிப் பணிக்கு ஒப்பானதாகும். பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் இந்துக்கள் அதிகமாக வசிக்கும் ஷிகார்பூர் மாவட்டத்தில் மருத்துவராகப் பணியாற்றிவந்தவர் சனா ராம்சந்த். 18,553 பேர் பங்கேற்ற ஆட்சிப் பணித் தேர்வில் 221 பேர் தேர்ச்சியடைந்தனர். அதன் பிறகு நேர்முகத் தேர்வு, மருத்துவ உளவியல் பரிசோதனைகளிலும் தேர்ச்சி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் நிர்வாகப் பணிக்குத் தேர்வாகியிருக்கும் முதல் இந்துப் பெண்ணாகியிருக்கிறார் சனா ராம்சந்த் என்று பிபிசி செய்தி நிறுவனத்தின் உருது பிரிவு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x