Published : 09 May 2021 09:26 AM
Last Updated : 09 May 2021 09:26 AM

பாடல் சொல்லும் பாடு 15: பெண்மையின் பெருமை தாய்மை மட்டுமா?

கவிதா நல்லதம்பி

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று கிடந்த மரம் ஒன்று...

‘அன்னை’ திரைப்படத்துக்காகக் கவிஞர் கண்ணதாசன் இயற்றிய பாடல் இது. பானுமதியின் தனித்துவமான குரலில், குழந்தைக்காக ஏங்கித் தவிக்கும் ஒரு தாயின் துயரத்தைச் சொல்கிறது. பெண் உடல், இயற்கையின் பெரும் பண்பு கொண்டு, பூப்பதும் காய்ப்பதும் கனிதலுமான மறு உற்பத்தியுடன் ஒத்திசைவு கொள்கிறது.

உயிர்கள் அனைத்துக்கும் இந்த விதி பொருந்தும் என்றாலும், திருமணத்தின் பயன் குழந்தைப்பேறு மட்டுமே என்று கற்பிக்கப் பட்டிருக்கிறது. திருமணம் ஆனதும் பெண் கருவுற்றுவிட வேண்டும். இல்லையென்றால், ‘என்ன விசேஷம்?’ என்று எல்லோரும் கேட்க, ஏதோ தவறிழைத்துவிட்டதைப் போல் கூனிக்குறுக வேண்டும்.

கடந்த ஆண்டு பத்ம விருதுகள் வழங்கும் விழா நிகழ்வு பற்றிய செய்தியில் குடியரசுத் தலைவர், வயதில் முதிர்ந்த பெண் ஒருவரிடம் தலை தாழ்த்தி வாழ்த்துப் பெறுவதைப் போன்ற படம் இடம்பெற்றிருந்தது. அப்பெண்மணி கர்நாடகத்தைச் சேர்ந்த திம்மக்கா (வயது 107). அவர் பிபிசி பட்டியலிட்ட உலகின் சக்திவாய்ந்த பெண்மணிகள் (2016) நூறு பேரில் ஒருவர். கர்நாடக அரசின் விருது, தேசியக் குடிநபர் விருது போன்ற விருதுகளைப் பெற்றவர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் A U.S. environmental organisation என்னும் கல்வி மையம் Thimmakka's Resources for Environmental Education எனத் திம்மக்காவின் பெயரைச் சூடி அவரைக் கவுரவித்துள்ளது.

ஊருக்குப் பயனளிக்கும் ‘பிள்ளைகள்’

திம்மக்காவும் கணவர் சிக்கையாவும் பல மைல்கள் நடந்து பானைகளில் தண்ணீர் சுமந்து மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வந்திருக்கிறார்கள். இரண்டாண்டுகளுக்கு முன்பு சிக்கையா மறைந்துவிட்டார். இருவருமாக 385 ஆலமரங்களையும் 8000-க்கும் மேற்பட்ட பிற மரங்களையும் நட்டு வளர்த்துள்ளனர்.

வறுமை என்றாலும் மகிழ்வான வாழ்க்கை. குழந்தை இல்லை. நாட்கள் செல்லச் செல்ல சுற்றமும் உறவும் ‘மலடி' என்று புறம்பேச, இருவரும் மனமுடைந்தனர். சுற்றத்தாரின் ஏச்சும் ஏளனமும் இச்சமூகம் மதிக்கும்படியான ஒரு செயலைச் செய்யத் தூண்டின. மரம் நடத் தொடங்கினார்கள். குழந்தை இருந்தால் நமக்கு மட்டுமே பயன். மரங்களை வளர்த்தால் எல்லோருக்கும் பயன் என்று இருவரும் நினைத்தார்கள். அந்தத் தருணத்திலிருந்து மரங்களே அவர்களின் குழந்தைகள் ஆயின.

ஆந்திரத்தைச் சேர்ந்த 74 வயது மங்காயம்மா செயற்கைக் கருவூட்டல் முறையில் 2019-ல் இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அதன்மூலம் அதிக வயதில் குழந்தை பெற்ற பெண்மணி என்கிற உலக சாதனை படைத்தார். குழந்தைகள் பிறந்ததும் 'ஒன்பது மாதங்களாக நாங்கள் இந்த மருத்துவமனையில்தான் இருக்கிறோம். குழந்தை இல்லாதவர் என்று சுற்றியிருப்போர் என்னைக் குறைகூறுவதுண்டு. அந்தக் கூற்று இப்போது பொய்யாகிவிட்டது' என்று நிறைவு ததும்பச் சொன்னார் மங்காயம்மா.

சமூகத்தின் இடைவிடாத கேள்விகள்

மன உளைச்சலோடு 57 ஆண்டுகளாகக் காத்திருந்த இத்தம்பதியருக்கு, முதுமையிலும் குழந்தை வேண்டும் என்று நினைக்க வைத்தது எது, தத்தெடுத்து வளர்க்கும் வாய்ப்புகள் இருந்தும், தன் கருவறைப் பிள்ளையாக இருக்க வேண்டும் என்று ஏன் நினைத்தார்கள், தம்மைப் பேணவே மற்றொருவர் வேண்டும் என்கிற வயோதிகத்தில், சிகிச்சையின் அத்தனை வலிகளையும் தாங்கிக்கொள்ளச் செய்தது எது?

இத்தனை காலமாகச் சுமந்துகொண்டிருந்த குழந்தையில்லாதவள் என்கிற பெயர்தானே இவை அனைத்துக்கும் காரணம். அவர் சந்தித்த அவமதிப்புகள், புறக்கணிப்புகள். இவற்றால் பெற்ற வலியை விடவா இந்தச் சிகிச்சையால் வரும் இடர் பெரிது என்கிற விரக்தியில் எடுத்த முடிவாகவும் அது இருக்கக்கூடும்.

உண்மையில் வசைகளையும் அவமானங்களையும் வேறொன்றாக மடைமாற்றும் திம்மக்காக்கள் நம் சமூகத்தில் மிக அரிதானவர்கள். சமூகத்தின் வாய்க்குப் பயந்து, எவ்வளவு வலியையும் தாங்கிப் பிள்ளைபெறத் துடிக்கும் மங்காயம்மா போன்றோரே நம்மைச் சுற்றி அதிகம். காரணம், நாம் அப்படித்தான் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.

பயனற்ற பிள்ளையில்லா வாழ்க்கை

ஒருவன் பல்வேறு வகையான செல்வங்களை உண்டாக்கியிருக்கலாம். பலரோடு சேர்ந்து உண்கிற பெருஞ்செல்வத்தைப் பெற்றிருக்கலாம். ஆனால், உணவு உண்கிற வேளையில், இடையிடையே குறுகுறுவென்று நடந்து வந்து, தன் சிறிய கையினை நீட்டி, நெய்யிட்ட சோற்றை வாங்கி, அச்சோற்றைத் தரையிலே இட்டு, பின் அந்தச் சோற்றைத் தொட்டும் வாயால் கவ்வியும், கையால் பிசைந்தும் உடம்பெங்கும் பூசியும் தம் செயல்களால் மயக்குகிற குழந்தைகளைப் பெறாதவனாக இருந்தால், அவன் வாழும் இவ்வாழ்வின் நாட்கள் பயனற்றதாகும் என்கிறது பாண்டியன் அறிவுடை நம்பியின் புறநானூற்றுப் பாடல்.

‘புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின் நன்ன ராட்டி’ என்று புதல்வனைப் பெற்ற தாயைப் புகழ்கிறது அகநானூற்றுப் பாடல் ஒன்று. பகைவரும் விரும்பத்தக்க வீரமிக்க புதல்வர்களைப் பெறும் பெற்றோர், இந்தப் பிறவியில் மட்டுமின்றி, இனி வரும் பிறவியிலும் புகழுடன் திகழும் செம்மலோர் என்று பாராட்டுகிறது மற்றொரு பாடல்.

குழந்தை பிறந்தால் மக்களைப் பெற்ற மகராசி என்று போற்றப்படுகிறாள். குழந்தை பிறக்கவில்லை என்றால், அவள் முழுமை யடையவில்லை என்று நம்பவைக்கப்படுகிறாள். மலடி என்றும் வரடி என்றும் வசைப்பெயர் பெறுகிறாள். குழந்தைப்பேறுக்குத் தகுதிபெறாத பெண் 'இருசி' ஆகிறாள். குழந்தைகள் இல்லாத பெண்கள் மங்கலச் சடங்குகளில் ஒதுக்கப்படுகிறார்கள். பணிச்சூழலிலும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். யாரென்று அறியாதவரால்கூட, ‘புள்ளைங்க இல்லையா?’ என்கிற ஒற்றைக் கேள்வியில் இவர்களை மனமுடையச் செய்துவிட முடிகிறது.

குழந்தைக்காகக் காத்திருந்த ஒரு தாய் தன் தாலாட்டில்,
அரசே உனைவேண்டி
ஆடாத தீர்த்தமில்லை
பொருளே உனைவேண்டி
போகாத கோயிலில்லை...
என்று தான் செய்த வேண்டுதல்களைச் சொல்கிறாள்.
மற்றொரு தாயோ,
எட்டாத கோயிலுக்கு எட்டி விளக்கேற்றி
தூரத்துக் கோயிலுக்குத் தூண்டாத விளக்கேற்றி
சோதி பரதேசிகளுக்குத் தூமடமும் கட்டிவைத்து
நல்ல தண்ணீர்க் கிணறுகளும் வெட்டி வைத்து

என்று குழந்தைக்காகத் தான் செய்த வழிபாடுகளையும் நற்காரியங்களையும் பாடுகிறாள்.

ஒதுங்கிக் கொள்ளும் ஆண்கள்

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நான்கு தம்பதியரில் ஒருவருக்குக் குழந்தைப்பேறு இல்லை என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதன்படி, உலகம் முழுக்க, எட்டு முதல் 12 சதவீதத் தம்பதியினருக்குக் குழந்தையில்லை. குழந்தை வேண்டி, பெண்கள் இன்றும் கோவில் கோவில்களாக ஏறியிறங்குகிறார்கள். கோவில் மரங்கள் இவர்கள் கட்டிய தொட்டில்களால் நிரம்பிக் கனக்கின்றன.
விரதங்கள் இருக்கிறார்கள். மண் சோறு உண்கிறார்கள். மொட்டையடித்துக் கொள்கிறார்கள். வேளாங்கண்ணிக்கும் நாகூருக்கும் சென்று வேண்டுதல் வைக்கிறார்கள். யார் யாரோ சொல்லும் வைத்தியங்களையும் செய்து பார்க்கிறார்கள்.
குழந்தையின்மைக்கான காரணங்கள் யாவற்றையும் தனதாக மட்டுமே எண்ணப் பழக்குவிக்கப்படுகிறார்கள். தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதாகத் துளைக்கும் கேள்விகளின் மொத்தச் சுமையையும் அவள் தலையில் வைத்து ஒதுங்கிக்கொள்கிறது ‘ஆண்' எனும் பாத்திரம். குழந்தை இல்லை என்று மனைவியை மணவிலக்கு செய்கிறார்கள். மறுமணம் செய்துகொள்கிறார்கள்.

காயத்துக்கு மருந்திடுவோம்

பெண்களே பரிசோதனைக்கும் வலி மிகுந்த சிகிச்சைக்கும் உட்படுகிறார்கள். இந்தத் தலைமுறையில் விதிவிலக்காக மிகச் சில ஆண்கள் மனைவியோடு, பரிசோதித்துக் கொள்ளவும் சிகிச்சையெடுக்கவும் முன்வருகிறார்கள். அவ்வாறு ஆண்கள் முன்வராதபோது பிள்ளையற்றவள் என்கிற பெயரைக் காலம் முழுக்க அவள் எதிர்கொள்ள வேண்டும். ஆண் பெண் இருவருக்குமானதாக இந்தப் பிரச்சினையை அணுகும் பார்வை நம்மிடம் இல்லை. இறைவேண்டுதல்களோடு, மருத்துவமனைகளை நாடுவோர் இன்று அதிகரித்திருக்கிறார்கள்.

குழந்தைப்பேற்றுக்கான சாத்தியங்களை நவீன மருத்துவமுறைகள் அதிகம் கொண்டுள்ளன. செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் பெருகியிருக்கின்றன. அவை இன்று பெருவணிக நிறுவனங்களாக உருவாகியிருக்கின்றன. தத்தெடுத்தலின் சாத்தியத்தையும் உணரத் தொடங்கியிருக்கி றார்கள். தாய்மை உலகத்தார்க்குப் பேரின்பத்தை வழங்கக்கூடியதுதான். ஆனால், அது வாய்க்காமல் போவதும் நேரக்கூடியதே. தாய்மை எனும் உணர்வு குழந்தைப்பேறினால் மட்டுமே அடைந்துவிடக் கூடியதா, குழந்தைப்பேறு மட்டுமே ஒரு பெண்ணின் வாழ்வைத் தீர்மானிக்க முடியுமா? அது முற்றிலும் பெண்ணைச் சார்ந்ததே என்கிற நம்பிக்கையிலிருந்து விடுபட வேண்டும். வார்த்தைகளால் குத்திக்கிழிப்பதை விடுத்து, புரிதல்களால் பெண்ணின் காயங்களுக்கு மருந்திட முயல்வதே அறிவுடைச் சமூகத்தின் வெளிப்பாடாக இருக்கும்.

(பெண் வரலாறு அறிவோம்)

கட்டுரையாளர், உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: janagapriya84@gmail.com .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x