Last Updated : 25 Apr, 2021 05:03 AM

 

Published : 25 Apr 2021 05:03 AM
Last Updated : 25 Apr 2021 05:03 AM

முகங்கள்: ஒரு கதை கேட்கலாமா?

“ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி இருக்கும் குகைக்குள்ள ஒரு கூண்டு இருந்துச்சாம்...” என்று சொல்லிக் குழந்தைகளோடு பெரியவர்களையும் மாய உலகத்துக்கு அழைத்துச் செல்லும் இது போன்ற குரல்கள் இன்று அரிதாகிவிட்டன. பலரது வீடுகளிலும் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை ஸ்மார்ட் போன் இருக்கும். ஆளுக்கொரு மூலை யில் அதனுடன் ஐக்கியமாகிவிடுவார்கள். செல்போன்கள் இல்லாத வீடுகளில் அந்த இடத்தை டி.வி., பிடித்துக்கொள்கிறது. ஒன்றாக அமர்ந்து பேசவோ விவாதிக்கவோ யாருக்கும் விருப்பமும் இல்லை. இந்தப் புள்ளியில்தான் வித்தியாசப்படுகிறார் ரம்யா வாசுதேவன்.

சென்னை அடையாறைச் சேர்ந்த ரம்யா, இந்தக் காலத்தின் கதைசொல்லி. மரத்தடிகளும் திண்ணைகளும் அரிதாகிப்போன சென்னை நகரத்தில், சமூக ஊடகங்களைக் களமாகக் கொண்டு கதைசொல்கிறார். அதுகூட வேடிக்கையாகத் தொடங்கியதுதான் என்கிறார் ரம்யா. “96 திரைப்படப் பாதிப்பில் நாங்களும் பள்ளித் தோழர்களைக் கண்டுபிடிச்சு ஒரு வாட்ஸ்-அப் குழுவைத் தொடங்கினோம். ஆரம்பத்தில் அனைவரும் நிறைய பேசினோம். குழு கலகலப்பாக இருந்தது. கொஞ்ச நாள்ல எல்லோரும் அமைதியாகிட்டாங்க. ‘ஏன் யாரும் எதுவும் பேசுறதில்லை’ன்னு நான் கேட்டேன். ‘அப்படின்னா நீயே ஏதாவது கதைசொல்லு’ன்னு நண்பர்கள் விளையாட்டா சொன்னாங்க. நானும் விளையாட்டா கதை சொன்னேன். 30 கதைகள் சொன்னதுக்குப் பிறகு நானும் நிறுத்திட்டேன். என் தோழியோட மகன் என் கதைகளைத் தொடர்ந்து கேட்டிருப்பான்போல. ‘ஏமா அந்த ஆண்ட்டி கதை சொல்றதை நிறுத்திட்டாங்க?’ன்னு கேட்டானாம். சரி, கதை சொல்றதுக்காகவே தனியாக ஒரு குழுவைத் தொடங்கலாம்னு முடிவெடுத்தோம்” என்று அதையே ஒரு கதைபோலச் சொல்கிறார் ரம்யா.

கதையால் மலரும் மனங்கள்

ரம்யாவின் தோழி கிருத்திகா, ‘அண்டர் த ட்ரீ’ என்கிற வாட்ஸ்-அப் குழுவைத் தொடங்கினார். ஒரு மணி நேரத்துக்குள்ளேயே உறுப்பினர்கள் எண்ணிக்கை உச்சத்தை எட்டிவிட பிறகு ஆறு குழுக்களைத் தொடங்கினார்கள். குழுவில் இருக்கிறவர்கள் தங்கள் நண்பர்களுக்குப் பகிர, அது பல காதுகளைச் சென்றடைந்திருக்கிறது. எந்தக் கதையாக இருந்தாலும் அதைச் சுருக்கி எட்டு முதல் பத்து நிமிடங்களில் சொல்லிவிடுகிறார். இலக்கிய ஆளுமைகள், சமகால எழுத்தாளர்கள், ஆன்மிகத் தலங்கள், சிறார் கதைகள் என்று தனித்தனி தலைப்புகளில் கதை சொல்கிறார்.

“எனக்கு வாசிப்பில் ஆர்வம் உண்டு. வீடு முழுக்கப் புத்தகங்கள் நிறைந்திருக்கும். ஒரு துண்டுக் காகிதம் கிடைத்தால்கூடப் படித்துவிடுவேன். அதுதான் இப்போது தொய்வில்லாமல் கதைசொல்ல உதவுகிறது. வயதானவர்கள், தமிழ் வாசிக்கத் தெரியாதவர்கள், பார்வையற்றோர் என்று பலதரப்பினரையும் என் கதைகள் சென்று சேர்ந்திருப்பதில் மகிழ்ச்சி. சிறுவாணி வாசகர் மையத்திலிருந்து ஒருவர் அழைத்தார். மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் நான் சொல்லும் கதையைக் கேட்டு ரியாக்ட் பண்ணுவதாகச் சொல்லி நன்றி கூறினார். நான் கதை சொல்வதற்கான பலனை அடைந்துவிட்டதாகத் தோன்றியது” என்று நெகிழ்கிறார். வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், டெலிகிராம், கைசாலா, பாட்காஸ்ட், யூடியூப் என்று பல தளங்கள் வழியாகவும் கதைகளைப் பகிர்கிறார்.

இயற்கையால் கிடைத்த அடையாளம்

தனியார் கணக்குத் தணிக்கை நிறுவனத்தில் பணியாற்றும் ரம்யா, கதைசொல்லி மட்டுமல்ல; தொழில்முனைவோரும்கூட. பதின்பருவத்தில் இருக்கும் தன் மகள்தான் அதற்குக் காரணம் என்கிறார். “என் மகள் அழகுக்காக ரசாயனங்கள் நிறைந்த முகப்பூச்சுகளைப் பயன்படுத்துவதில் எனக்கு விருப்பமில்லை. என் கொள்ளுத்தாத்தா சித்த மருத்துவர். என் பாட்டியும் கைமருந்துகளைத் தயாரிப்பார். அதனால், எனக்கும் ஓரளவுக்கு அதெல்லாம் பரிச்சயம். அதனால், இயற்கைப் பொருட்களை வைத்துக் குளியல் பொடியைத் தயாரித்து அதை அழகான டப்பாவில் அடைத்து, மேலே லேபிள் ஒட்டி மகளிடம் தந்தேன். மகளும் சந்தையில் புதிதாக வந்திருக்கும் பொருள் என்று நினைத்து ஆர்வத்துடன் வாங்கிப் பயன்படுத்தினாள். அது நல்ல பலனைத் தர, தொடர்ந்து அதையே வாங்கும்படிச் சொன்னாள்” என்று சிரிக்கிறார் ரம்யா.

பிறகு கூந்தல், சருமப் பராமரிப்புக்கான ரசாயனம் கலக்காத பொடிகளைத் தயாரித்து நண்பர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் மூலம் மற்றவர்களும் கேட்க, ஆறு மாதங்களுக்கு முன்பு ‘விவிக்தா நேச்சுரல்ஸ்’ என்கிற பெயரில் சிறிய தொழிலைத் தொடங்கினார். அவரே எதிர்பாராத அளவுக்கு நல்ல வரவேற்பு. கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்தும் ஆர்டர் கிடைப்பதாகச் சொல்கிறார். இந்த நிறுவனத்தின் ஓர் அங்கமாகத்தான் ‘அண்டர் த ட்ரீ’ இயங்குகிறது. “பெரிய கதைகளைப் பத்து நிமிடங்களுக்குள் சுருக்குவதுதான் சவாலாக இருக்கிறது. ஆனால், அது சுவாரசியமான சவால்” என்று சொல்லும் ரம்யா வாசுதேவன், விரைவில் 500-வது கதையை வெளியிடவிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x