Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM

கிடாக்குழியாம் ஊரு... மாரியம்மாவாம் பேரு...

இரண்டாண்டுகளுக்கு முன்பு ‘களவாணி - 2’ படத்தில் பாடியிருந்தார் மாரியம்மாள். ‘ஓட்டு கேட்க வந்தாங்களே சின்னாத்தா’ என்று கோட்டைச்சாமியும் ஆறுமுகமும் முன்பு சேர்ந்து பாடியிருந்த பிரபலப் பாடல் சில மாற்றங்களுடன் மாரியம்மாளின் குரலில் ஒலித்தது. அதற்கு முன்பே, ‘வெள்ளி விலை தங்கம் விலை’ என்கிற, மாரியம்மாளின் தனித்த முத்திரைகளுடன் கூடிய தாலாட்டுப் பாட்டின் மெட்டு, ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தில் வளப்பக்குடி வீரசங்கரின் குரலில் ஒலித்திருக்கிறது. தற்போது, ‘கர்ணன்’ பாடல் வெளியீட்டுக்குக் கிடைத்திருக்கும் கவனம் மாரியம்மாள் குறித்துத் திரும்பவும் பேச வைத்திருக்கிறது.

தொண்ணூறுகளில் காவிரிக்கும் வைகைக்கும் இடைப்பட்ட நிலமெங்கும் அவரது குரல் கேட்டுக்கொண்டிருந்தது. பங்குனியிலும் சித்திரையிலும் நடக்கும் கிராமத்துப் பெருந்திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னால் அவர் பாடியிருக்கிறார். அவர் மேடையேறிய காலத்தில் பெயருக்கு முன்னால் ஊர்ப்பெயரைச் சேர்த்துக்கொண்டதில்லை. என்றாலும் அதுவும்கூட இசை ரசிகர்களுக்குப் பரிச்சயமானதுதான். ‘நாடோடிக் கவிதை’ பாடல் தொகுப்பில் ‘மஞ்ச வெயிலடிச்சு’ என்கிற பாடலில் ‘கிடாக்குழியாம் ஊரு மாரியம்மாவாம் பேரு’ என்று தன்னை அவர் அறிமுகம் செய்துகொண்டிருந்தார். இந்த ஒலிநாடாவை வெளியிட்டது ராம்ஜி ஆடியோ நிறுவனம்.

மதுரை ராம்ஜி ஆடியோ, ஒலிநாடாக்களின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருந்தது. திரைப்படப் பாடகர்களுக்கு இணையாக நாட்டுப்புறப் பாடகர்களுக்கும் தனி ஆல்பங்கள் வெளியிடும் வாய்ப்பை அந்நிறுவனம்தான் பெருமளவில் உருவாக்கித்தந்தது. திண்டுக்கல் லியோனியின் நகைச்சுவை பட்டி மன்றங்களை ஒலிப்பதிவு செய்து கிராமத்து டீக்கடைகள் வரைக்கும் கொண்டுபோய்ச் சேர்த்ததும் அதே நிறுவனம்தான். ராம்ஜி ஆடியோ வெளியீடுகளாக கோட்டைச்சாமியும் ஆறுமுகமும் சேர்ந்து பாடிய பாடல்கள் இருபதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் வெளிவந்துள்ளன. கேசட் அட்டைகளில் அவர்கள் இருவருடன் மூன்றாம் முகமாக இடம்பிடித்தவர் மாரியம்மாள்.

கோட்டைச்சாமி - ஆறுமுகத்தின் பாடல் கேசட்களில் கண்டிப்பாக மாரியம்மாள் தனியாகப் பாடிய ஒரு பாடலாவது இருக்கும். ‘சோளம் வெதைக்கையிலே’ என்கிற தலைப்பில் மாரியம்மாள் மட்டுமே பாடிய பாடல்களின் தொகுப்பு ஒன்றும் வெளிவந்தது. ஒற்றைப் புல்லாங்குழல் பின்னணியில் ஒலிக்க அவர் பாடிய ‘கல்லை அறுத்தல்லோ’ என்கிற தாலாட்டுப் பாட்டு அத்தொகுப்பின் விசேஷங்களில் ஒன்று. அத்தொகுப்பில் இடம்பெற்ற ‘பூமுடிஞ்சு’ என்கிற மற்றொரு பாடல், வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகும் பெண்களின் வலியைச் சொல்லும். மாரியம்மாள் பாடியவற்றில் மிகவும் பிரபலமானது ‘வாகான ஆலமரம்’ பாடல். தற்கொலைக்கு முடிவெடுத்த ஒரு பெண்ணின் ஓலம் அது. நூற்றாண்டு களாகப் பெண்கள் அனுபவித்து வரும் பெருந்துயரத்தை ஓங்கிக் குரலெடுத்து அவர் பாடுகையில் கம்மும் குரல் கேட்டுக் கண்கள் கலங்கும்.

பொதுவுடைமை இயக்க மேடைகளி லிருந்து பொதுவெளிக்கு நகர்ந்தவர் மாரியம்மாள். கோட்டைச்சாமி குழுவினருடன் அவர் பாடிய ‘ஏர்முனை’ பாடல் தொகுப்பு உழைக்கும் மக்களின் உள்ளக் குமுறல். அத்தொகுப்பில் மாரியம்மாள் பாடிய ‘மாஞ்சோலைத் தோட்டத்திலே’ பாடல், தேயிலைத் தோட்டத்தில் பெண் தொழிலாளர்கள் படும் வேதனைகளைப் பட்டிய லிட்டது. கோவனின் பாடல்களில் வெளிப்படும் அதே கோபத்தை ‘ஏர்முனை’யிலும் உணர முடியும். பின்பு அறந்தாங்கி வீரமாகாளி, பழனிமலை முருகன், பசும்பொன் தேவர் என்று அவர் பயணித்த திசைகள் பல உண்டு. உள்ளடக்கங்கள் மாறினாலும் அந்தக் குரல் எல்லோரையும் ஈர்த்துக்கொண்டு தான் இருந்தது.

விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், அனிதா குப்புசாமி என்று ஆய்வாளர்களும் இசையை ஒரு பாடமாகவே படித்தவர்களும் கோலோச்சிக்கொண்டிருந்த நாட்டுப்புற இசையுலகில், கிராமத்துப் பின்புலத்திலிருந்து வந்த மாரியம்மாள் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர். அவரது குரலில் எப்போதுமே சோகத்தின் நுண்ணிழையொன்று ஊடுபாவிக்கொண்டிருக்கும். சிறுமியாய் இருந்தபோது மரண வீடுகளில் ஒப்பாரி பாடி உருவெடுத்த குரல் அது. மேடைகளில் தன்னுடன் சேர்ந்து பாடுவதற்காக அவரைத் தேடிவந்த கோட்டைச்சாமியை, பின்பு கரம்பிடித்துக்கொண்டது அவரது வாழ்வின் திருப்புமுனையானது.

இப்போதும்கூட, நெடும்பயணங் களில் உணவக நிறுத்தங்களில் அடிக்கடி மாறும் பாடல்களுக்கு நடுவே மாரியம்மாளின் குரலும் எட்டிப்பார்த்துக் கொண்டேதான் இருக்கிறது. கிராமத்து இசை ரசிகர்களுக்கு எப்போதுமே விருப்பத்துக்குரிய பாடகர் அவர். அவரது பாடல்களை இணையத்தின் வழியாகவும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். பின்னூட்டங்களில் வெளிப்படும் நினைவுகள், கடந்த இருபதாண்டுகளுக்கு முந்தைய கிராமத்து வாழ்க்கையின் அடையாளங் களில் மாரியம்மாளின் குரலும் ஒன்றாகிவிட்டதைச் சொல்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x