Published : 06 Dec 2020 10:05 AM
Last Updated : 06 Dec 2020 10:05 AM
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து நவம்பர் 29 அன்று வெளியான ‘பெண் இன்று’வில் ‘வன்முறையிலிருந்து வேண்டும் விடுதலை’ என்கிற தலைப்பில் எழுதியிருந்தோம். பாலினச் சமத்துவத்தை வீடுகளில் எப்படிச் செயல்படுத்துவது என்றும் குடும்ப வன்முறைகளை எப்படிக் கையாள்வது என்றும் கேட்டிருந்தோம். குழந்தைப் பருவத்திலிருந்தே இருபாலருக்கும் பாலினச் சமத்துவத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று பலர் எழுதியிருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு:
தயக்கம் களைவோம்
வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் பலரும் புகார் கொடுக்கவும், சட்டத்தின் துணையை நாடவும் தயங்காது செயல்பட முயன்றாலே குற்றங்களின் சதவீதம் பெருமளவில் குறையும். பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள், அரசின் நலத் திட்டங்கள் போன்றவற்றைப் பற்றிகூடப் பெண்கள் பலருக்கும் தெரியாதிருப்பது மிகப் பெரிய பலவீனம். காலையில் சமையலுக்கு நிற்கக்கூட நேரமில்லாமல் மனைவி சுழன்றுகொண்டிருக்க, கணவனோ உதவ வேண்டும் என்கிற எண்ணமே சிறிதும் இல்லாமல், நிதானமாக ரசித்து ருசித்து காபி பருகியபடி செயதித்தாள் படிப்பதும்கூட வன்முறையே. இருவரும் சமமாக வேலைகளைப் பகிரும் சூழல் தேவை.
- இரா. பொன்னரசி, சத்துவாச்சாரி, வேலூர்.
தூபம் போடும் நெடுந்தொடர்கள்
பெரும்பாலான குடும்பங்களில் குழந்தை வளர்ப்பில் தொடங்கி முதுமைவரை ஆண் - பெண் பாகுபாடு பரவலாக உள்ளது. ஆண்கள்தாம் பெண்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்றால், பல குடும்பங்களில் பெண்களுக்குப் பெண்களே எதிராகச் செயல்படுவது வேதனைக்குரியது. மாமியார், நாத்தனார் தொடங்கி மற்ற உறவுகளின் வழியாகப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. குறிப்பாகத் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் நெடுந்தொடர்கள் இதுபோன்ற வன்முறைகளுக்குத் தூபம்போடுகின்றன. ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தை வளர்ப்பில் சமமான அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டும்.
- மா. கல்பனா பழனி, பெண்ணாகரம்.
பொறுப்புகளைப் பொதுவில் வைப்போம்
இன்றைய சூழ்நிலையில் ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் பெண்களுக்கு எதிரான கருத்துகளையே பரப்புகின்றன. ஆணாதிக்கம், சமூக வலைத்தளங்களில் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. ஆண் குழந்தைகளுக்குப் பெண்களை மதிக்கக் கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும். பெண் எந்தவிதத்திலும் ஆணுக்குத் தாழ்வில்லை என்பதை உணர்த்த வேண்டும். குடும்ப வேலைகளைப் பெண்களுடன் பகிர்ந்துகொள்ளப் பழக்க வேண்டும். சமைத்தல் முதலான வீட்டு வேலைகளை இயல்பாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஊடகங்களும் பெண்ணைக் காட்சிப்பொருளாக மட்டுமே காட்டாமல் சிறிதளவேனும் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். பெண்ணைப் புரிந்துகொண்டு நடக்க ஆரம்பித்தால் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் போன்ற வற்றை நாம் அனுசரிக்க வேண்டிய தேவையே இருக்காது.
- தேஜஸ், கோவை.
கருத்தடை உணர்த்தும் சமத்துவம்
ஆண், பெண் சமத்துவம் என்பது பெண்ணைப் பெண்ணாக மதித்தலில் இருந்து தொடங்குகிறது. வீடு - வெளிவேலைகள் இரண்டும் இருபாலருக்கும் பொதுவானவை என்பதைக் குழந்தைப் பருவத்திலேயே மனதில் விதைத்துவிட வேண்டும். என் வீட்டில் என் கணவர், மாமனார், தம்பி, என் மகன் என அனைவருமே சூழலுக்கு ஏற்ப எங்களுடன் வீட்டுவேலைகளைப் பகிர்ந்துகொண்டு எங்களுக்கு உற்றதுணையாக இருக்கின்றனர். எங்காவது ஆண்கள் வீட்டுவேலை செய்வதைக் கண்டால் ஆச்சரியப்படாமல், செய்யக் கூடாததைச் செய்ததுபோல் பார்க்காமல் அதைப் பாராட்டுச் செய்தியாக மாற்ற முயல்வதே பாகுபாட்டைக் களைவதற்கான தொடக்கப்புள்ளி.
நமது மாண்புகள், எண்ணங்களைக் குழந்தைகளுக்குள் திணித்துவிட நினைக்கிறோம், பாலினப் பாகுபாடு உள்பட. ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். குடும்பத்தில் குழந்தைகளின் முன்னிலையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பலரும் பேச்சுவாக்கில், பெண்பிள்ளைகள் அடுத்த வீட்டுக்குச் செல்பவர்கள்தானே என்கிற எண்ணத்தைக் குழந்தைகளின் மனத்தில் விதைத்துவிடுவார்கள். இதனாலேயே பல வீடுகளில் பெண்களுக்குக் கல்வி புகட்டுவதில் பாகுபாடு காட்டப்பட்டு அவர்களது கனவுகள் கருகிவிடுகின்றன. இதை முதலில் களைய வேண்டும்.
மாதவிடாய் காலத்தில் பெண்களது உடல், மனநலன் குறித்த தெளிவு இருபாலினருக்கும் வேண்டும். கர்ப்பத்தடை பெண்களுக்கு மட்டுமே என்கிற நிலைப்பாடு பெரும்பாலான குடும்பங்களில் நிலவுகிறது. அதைப் பெண்களைவிட ஆண்களுக்குச் செய்வதுதான் எளிமையானது என்கிற புரிதல் ஏற்படுத்தப்படுவதிலும் பாலினச் சமத்துவம் அடங்கியிருக்கிறது. குடும்ப வன்முறைகள் அதிகரிக்க முக்கியக் காரணியாக இருப்பது டாஸ்மாக். மனரீதியாகவோ உடல்ரீதியாகவோ ஒரு பெண் பாதிக்கப்படும்போது குறைந்தபட்சம் எதிர்ப்புணர்வைக் காட்டும் துணிவைப் பெண்களிடம் நாம் வளர்த்தெடுக்க வேண்டும். அண்டை அயலாரும் தம் கண்முன் நடைபெறும் பெண்கள் மீதான அத்துமீறல்களைத் தட்டிக்கேட்கத் தயங்கக் கூடாது. ஒரு பெண் தன்மீது நடைபெறும் அத்துமீறல்களைக் களையப் போதிய சட்ட விழிப்புணர்வை கிராமசபைகள் மூலமாகவும் ஊராட்சி மன்றங்கள் மூலமாகவும் பரவலாக்கப்பட வேண்டும்.
பெண்ணின் திருமண வயதில் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பிரச்சினைகளில் வயது முதிர்ச்சியின்மையும் முக்கியக் காரணமாக இருக்கிறது. பெண்களை வன்முறையிலிருந்து காக்கும் சட்டங்கள் குறித்தும், பெண்களுக்கான உதவி மைய எண் (1091) குறித்தும் பெண்கள் அறிந்துவைத்திருக்க வேண்டும். மன அழுத்தம், தற்கொலை எண்ணம் ஏற்படும்போது வழிகாட்டுதல் வழங்கும் உதவி எண்ணைத் (104) தொடர்புகொள்ளலாம். விழிப்புணர்வை ஆயுதமாக்கி, பாகுபாடற்ற, வன்முறையற்ற புதிய வரலாறை எழுதுவோம்.
- நா. ஜெஸிமா ஹீசைன், திருப்புவனம் புதூர், சிவகங்கை மாவட்டம்.
சமத்துவச் சமையல்
ஒரு ஞாயிற்றுக்கிழமை என் தம்பி எங்கள் வீட்டுக்கு வந்திருந்தான். அப்போது என் ௧ணவா் மீனைப் பொரிப்பதற்காக மசாலா தடவிக்கௌண்டிருந்தாா். தம்பி அதை ஆவலோடு பாா்த்தான். மதிய சமையல் முடியும்வரை என் ௧ணவா் என்னிடம், வேறு ஏதாவது செய்ய வேண்டுமா என்று கேட்டுக்கொண்டே சமையலறைக்கும் கூடத்துக்கும் நடந்துகொண்டிருந்தாா். இதை கவனித்துக்கொண்டிருந்த என் தம்பியும் சமையலறைக்கு வந்து, என்னிடமிருந்து கரண்டியைப் பிடுங்கி சாம்பாரைத் தாளித்தான். வீட்டில் ஆண் - பெண் சமத்துவத்தை எந்தெந்த வகையில் செயல்படுத்தலாம் என்கிற கேள்விக்கு என் வீட்டில் நடந்த இந்த நிகழ்ச்சி சரியான பதிலாக இருக்கும் என்று தோன்றுகிறது. உயிரின் அடிப்படைத் தேவையே உணவுதான்.
அதைச் சமையல் என்னும் வடிவத்தின் மூலம் தங்கள் உயிருக்கு மனிதர்கள் செலுத்திக்கொள்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண் - பெண் இருவரும் தங்கள் பதின் வயதிலிருந்தே தங்கள் அம்மாவுடனோ, அக்காளுடனோ, அப்பாவுடனோ அண்ணணுடனோ சேர்ந்து சமைக்கக் கற்றுக்கொண்டால் அல்லது கற்றுக்கொடுத்தால் அந்தப் புள்ளியில் சமத்துவம் தொடங்கும். இது சமூகத்திலும் அதைச் சார்ந்த மனிதர்களிடத்திலும் மாற்றத்தை உண்டாக்கும். அன்று சாம்பாரைவிட என் கணவர் பொரித்த மீன் சுவையாக இருந்தது என்று என் தம்பி என்னிடம் சொன்னான். சுவையைக் காட்டிலும் சமத்துவம்தானே முக்கியம்!
- ஜெஸ்ஸி சந்தோஷ், கேளம்பாக்கம்.
தயக்கம் களைவோம்
வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் பலரும் புகார் கொடுக்கவும், சட்டத்தின் துணையை நாடவும் தயங்காது செயல்பட முயன்றாலே குற்றங்களின் சதவீதம் பெருமளவில் குறையும். பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள், அரசின் நலத் திட்டங்கள் போன்றவற்றைப் பற்றிகூடப் பெண்கள் பலருக்கும் தெரியாதிருப்பது மிகப் பெரிய பலவீனம். காலையில் சமையலுக்கு நிற்கக்கூட நேரமில்லாமல் மனைவி சுழன்றுகொண்டிருக்க, கணவனோ உதவ வேண்டும் என்கிற எண்ணமே சிறிதும் இல்லாமல், நிதானமாக ரசித்து ருசித்து காபி பருகியபடி செயதித்தாள் படிப்பதும்கூட வன்முறையே. இருவரும் சமமாக வேலைகளைப் பகிரும் சூழல் தேவை.
- இரா. பொன்னரசி, சத்துவாச்சாரி, வேலூர்.
மமதையை ஒழிக்கத் தயாராவோம்
ஆரம்பத்தில் எழுத வந்தவர்கள் ஆண்களே என்பதால், அவர்களுக்குச் சாதகமாவே அனைத்தும் எழுதப்பட்டன. அது தொன்றுதொட்டு வழிவழியாய் வந்திருக்கிறது. 'அரண்மனை உறவு உறவல்ல, அடுக்களை உறவே உறவு' என்றொரு சொலவடை உண்டு. இதில் அரண்மனை ஆணையும், அடுக்களை பெண்ணையும் குறிக்கிறது. அந்த வீட்டு ஆண் அவளைச் சரிவர நடத்தினால் மட்டுமே சமத்துவம் சாத்தியம். ஆண்கள் தங்கள் மனைவியை, “உனக்கு ஒண்ணும் தெரியாது” என்று ஒதுக்காமல் வீட்டுப் பொருளாதாரம் தொடங்கி முக்கியமான விஷயங்கள் அனைத்திலும் கலந்தாலோசிக்கலாம்.
பெண்கள் அறிவோடும் தெளிவோடும் இருக்க வேண்டும். அதற்கு வாசிப்பு மிகவும் முக்கியம். நாம் இல்லையென்றால் அவளால் வாழ முடியாது என்கிற ஆணின் மமதையை ஒழிக்க வேண்டும். அதற்கு நாம் மனதளவிலும் உடலளவிலும் நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். எங்கே நம்மைவிட்டுப் போய்விடுவாளோ என்கிற எண்ணம் வந்தாலே அடங்கி ஒடுங்கிவிடுவார்கள். ‘ஓடுபவனைக் கண்டால் முடுக்குகிறவனுக்குத் தொக்கு’ என்பார்கள். நம் இயலாமையை அவர்கள் ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்வார்கள். அதற்கு நாம் ஒருநாளும் இடம்தரக் கூடாது.
- பி.ஜானகி, கோயம்புத்தூர்.
கல்வியால் விரியும் சிறகு
பெண்களுக்கு ஊதியத்தில் காட்டப்படும் பாகுபாடு குறித்தும் விவாதிக்க வேண்டும். வன்முறைகளை எதிர்க்கப் பெண்ணுக்குத் தேவை துணிச்சல். அதைப் பெறுவதற்குத் தேவை கல்வி. அது இல்லாததால்தான் பெரும்பாலான பெண்கள் தாயிடம்கூடத் தன் பிரச்சினைகளைச் சொல்வதில்லை. பெண்ணுக்கு இவ்வளவு நகை போட வேண்டும் என்பதில் பெற்றோர் காட்டுகிற அக்கறையைப் பெண்ணைப் படிக்க வைத்து சொந்தக் காலில் நிற்கச் செய்வதில் காட்ட வேண்டும். அப்போதுதான் அவர்கள் சிந்தனைச் சிறகு விரித்துப் பறப்பார்கள்.
- பார்வதி கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி.
நேர்மறை சிந்தனை வேண்டும்
‘வலிமை, கோபம், ஆளும் திறமை போன்றவை ஆணுக்கும் சாந்தம், அமைதி போன்றவை பெண்ணுக்குமான குணங்கள் என்பது ஆண், பெண்ணை அடக்கியாள உதவுமே தவிர, பெண்ணுக்கு ஒருநாளும் பயன்படாது’ என்கிற பெரியாரின் வார்த்தைகளைப் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். நெடுந்தொடர்களிலும் இணையத்திலும் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிப்பதை விட்டுவிட்டு, பெண்ணுரிமைக்காகப் போராடுபவர்கள், சாதித்த பெண்கள், ஆண் - பெண் சமத்துவம் போன்ற நேர்மறையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலாம். தங்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு எதிராகப் பெண்கள் புத்திசாலித்தனத்துடனும் விவேகத்துடனும் செயலாற்ற வேண்டும்.
- பு. பிரேமலதா, பருத்திப்பட்டு, சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT