Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM
பெண்ணுக்கு மட்டுமேயான உடலியல் நிகழ்வுகளில் ஒன்று மாதவிடாய். அதேபோலத்தான் மாதவிடாய் நிற்றல் என்பதும். என்றபோதும், அது இன்னலின்றி நிகழ்வதில்லை. மனச்சோர்வு, மனப்பிறழ்வு, மனத்தளர்ச்சி, தற்காலிக மறதி, தன்னம்பிக்கை இழப்பு, இரவில் அதிக வியர்வை, தூக்கமின்மை, படபடப்பு, பயம் என்பது போன்ற பிரச்சினைகளோடு தாங்கொணா வலியைக் கொடுக்கக்கூடியதுதான் ‘மெனோபாஸ்’ எனப்படும் மாதவிடாய் நிற்றல்.
பெண் பருவமடைந்ததை, ‘பூப்படைதல்’ என்று கொண்டாடும் சமூகங்களில் மட்டுமல்ல, உலகமெங்கும் ‘பூ மாறுதல்’ எனப்படும் மாதவிடாய் நிற்றலின்போது பெண்கள் ஆதரவின்றிக் கைவிடப்படுகிறார்கள். தீட்டு என்கிற போர்வைக்குள் பெண் தன்னையும் தன் பிரச்சினைகளையும் மறைத்துக்கொள்ளும் நிலையே இன்றும் உள்ளது. தீட்டு என்பது பொது வெளியில் பிறரிடத்தில் பேசக்கூடிய பொருளல்ல என்கிற சமூகக் கட்டமைப்பின் நீட்சியாகவே இன்னும் பெரும்பாலான பெண்கள் உள்ளார்கள். பாரம்பரியத்தைத் தூக்கிப் பிடிப்ப தற்கும் மரபை வழிநடத்தி அழைத்துச் செல்வதற்கும் இச்சமூகத்தில் பெண்கள் கடத்திகளாக கையாளப்படுகிறார்கள் என்பதும் மறுக்க முடியாதது.
போராட்டம் நிறைந்த காலம்
வீட்டிலிருக்கும் அல்லது வேலைக்குச் செல்லும் பெண்கள் யாராக இருந்தாலும் ஐம்பது வயதுக்குள்ளாக இந்நிகழ்வை எதிர்கொண்டே ஆக வேண்டும். வயது முதிர்வால் சோர்ந்து போயிருக்கும் பெண்கள் இக்காலகட்டத்தைச் சவாலான போராட்ட காலகட்டமாக கடந்து போகிறார்கள் என்பது வெளித்தெரிவதில்லை.
மாதவிடாய் நிற்றலின் முன்பான காலகட்டம், மாதவிடாய் நிற்றல் நிலை, அதற்குப் பின் உள்ள காலகட்டம் என மூன்று காலகட்டங்களைப் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த மூன்று நிலைகளிலும் பெண்கள் மனத்தாலும் உடலாலும் வெவ்வேறு வகையான துன்பச் சவால்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்தக் காலகட்டத்தில் பெண்களின் தேவை என்பது பல்வேறு விதமானதாகவும் இயல்பான தேவைகளிலிருந்து வேறுபட்டதாகவும் உள்ளது.
குறைந்தது ஒரு வருடத்தில் இருந்து அதிகப்படியான ஆண்டுகள்வரை பெண்கள் தங்கள் உடல் தகுதிக்கு ஏற்றவாறு இப்பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறார்கள். மாதவிடாய் நிற்றல் தொடர்பான பிரச்சினைகள் நம்மைச் சூழ்ந்துகொண்டுள்ளன என்பதை உணரக்கூடிய நிலையில் இல்லாமல் அவற்றைச் சுமந்து கடந்து போவதைப் பெண்கள் பலர் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இப்பிரச்சினைகள் தொடர்பாக மருத்துவர்களை அணுகும் பெண்கள் குறைவு. அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு இயங்க முடியாத சூழ்நிலையில், கருப்பை அகற்றப்படும் நிலையி லேயே பெண்கள் மருத்துவரை அணுகு கின்றனர். நீண்ட நாட்கள் நீடிக்கும் இந்த அதிக ரத்தப்போக்கு தொடர்பாகவோ அது தரும் இன்னல்கள் தொடர்பாகவோ உடலளவிலும் மனதளவிலும் தங்களைத் தயார் செய்துகொள்ளும் திறன் அற்றவர்களாகவும், கால ஓட்டத்தில் தங்கள் பிரச்சினைகள் கரைந்துவிடும் என நம்புபவர்களாகவும் பெண்கள் பலர் உள்ளார்கள்.
பேசப்படாத பிரச்சினைகள்
பூப்படையும்போது ஒரு பெண்ணை சமூகம் பயன்படும் பொருளாக எதிர்கொள்ளும் விதமும் பூ மாறுதல் எனப்படும் மாதவிடாய் நிற்றலின்போது கவனிப்பாரற்ற பொருளாக மாற்றப்படும் பெண்களைச் சமூகம் எதிர்கொள்ளும் விதமும் வெவ்வேறு விதமாக உள்ளன என்பது மட்டும் அல்ல, அவளது பிரச்சினை ஒரு பொருட்டாகக்கூட எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. தாங்க முடியாத வலியும் அதிகமான ரத்தப்போக்கும் உடல் பலவீனத்தையும் சோகையையும் தருவதோடு அவளுள் ஒரு வெறுமையை உருவாக்குகிறது. முதுமையின் தொடக்கத்தில், சோர்வின் முதுமையில் அவளுள் உருவாக்கப்படும் அநாதிநிலை சமூகத்தால் பேசப்படு வதில்லை, உணரப்படுவதில்லை. ஆனால், அவளது அநாதிநிலை பெரு வெளியாகிக்கொண்டே இருக்கிறது.
பெண்ணைச் சுற்றி இருக்கும் குடும்ப உறுப்பினர்களும், அவள் பணியிடத்தில் இருப்பவர்களும் இது குறித்த விழிப்புணர்வு அற்றவர்களாக உள்ள நிலையில் பணிக்குச் செல்லும் பெண்களோ வீட்டில் இருக்கும் பெண்களோ தனக்கு மாதவிடாய் நிற்பதை முன்வைத்து எந்தச் சலுகை யையும் கோர முடியாது. பெண்களின் இத்தகு வலிகள் இதுவரையிலும் கேட்கப்படாதவை அல்ல செவிமடுக்கப்படாதவை.
ஒரு பெண் தனக்கு மாதவிடாய் நிற்பதைத் தன் கருவில் இருந்து உதித்த மகனிடம்கூட மறைப்பதற்குப் பெரும் முயற்சிகளை மேற்கொள்கிறார். ஒரு பெண் தன் வலியை மட்டுமல்ல வியர்வையை, படபடப்பை, பயத்தை, மறதியை, தன்னிலை இழப்பதை மட்டுமல்ல அந்த நிகழ்வையே குடும்ப உறுப்பினர்களிடமிருந்து மறைக்கக் கற்பிக்கப்பட்டு உள்ளாள். எந்தப் பெண்ணும் இதைக் காரணமாகச் சொல்லி வீட்டுப் பணிகளில் இருந்து விடுபடப் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை.
குடும்ப ஆதரவோடு அரவணைப்போடு மாதவிடாய் நிற்றலை கடந்து செல்லும் பெண்கள் மிகக் குறைவே. இந்நிலையில் உழைப்பையே தினம் தினம் வாழ்வாதாரமாக் கொண்டு தினக் கூலிகளாக ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள் இக்காலகட்டத்தை எப்படிக் கடந்து போகிறார்கள் என்பதை நாம் சிந்திப்பதே இல்லை. “உழைச்ச ஒடம்பு, நாட்டுக்கட்ட, எதுவானாலும் தாங்கும்” என்று சமூகத்தின் மனசாட்சி அவர்களின் பின் பேசுகிறது.
பணியிடச் சிக்கல்கள்
பணிக்குச் செல்லும் பெண்களுக்குப் பணியிடம் பாதுகாப்பானதாக உள்ளதா என்பதை மட்டுமல்ல, அப்பெண்ணின் மாதந்தோறான மற்றும் மாதவிடாய் நிற்றல் தொடர்பான பிரச்சினைகளையும் எதிர்கொள்ளக்கூடியதாக, அரவணைத்து செல்லக்கூடியதாக, தகுந்த வசதிகள் உடையதாக உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால், அப்படியான சூழல் பெரும்பாலும் இருப்பதில்லை. இக்காலகட்டத்தில் ஏற்படக்கூடிய பணிச்சுணக்கம், தற்காலிக மறதி, படபடப்பு, சோர்வு, தடுமாற்றம் போன்றவை சக பணியாளர்களாலும் உயரதிகாரிகளாலும் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகின்றன என்பதிலேயே பணியிடத்தில் பெண்களின் நிலைப்பாடு என்பது அடங்கியுள்ளது.
ஏனெனில், சமூகத்தில் மாதவிடாய் நிற்றல் என்பது குறித்த தெளிவற்ற புரிதல் என்றுகூடச் சொல்ல முடியாமல் புரிதலற்ற நிலையே உள்ளது. இந்நிலையில் இந்நிகழ்வை எதிர்கொள்ளும் ஒரு பெண் அலுவலகத்தில் சக பணியாளர்களால் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகிறாள் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். போதுமான கழிப்பறை வசதி இல்லாமையும், நீர்வரத்தற்ற சுகாதாரமற்ற கழிவறைகளும் பணியிடத்தில் ஒரு பெண் எதிர் கொண்டுவரும் முக்கியப் பிரச்சினை. அதிக நாட்கள் நீடிக்கும் அதிகமான ரத்தப்போக்கோடு, சக ஊழியருக்குத் தெரிந்துவிடக் கூடாது என்கிற படபடப்போடு அடிக்கடி கழிவறை சென்று திரும்பும் பெண்னை மற்ற பணியாளரிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய தார்மீக தேவையுள்ளது.
பெண்களின் இந்தப் பிரச்சினையைப் பேசுவதன் வாயிலாக, பெண்களை அவர்கள் எட்டிப் பிடித்திருக்கும் தற்போதைய இடத்திலிருந்து பின்னுக்கிழுப்பதாக மரபுவழி கருத்துடையவர்கள் சொல்லக்கூடும். இதனால்தான் பெண்கள் வீட்டுக் குள்ளேயே வைக்கப்பட்டார்கள், இது இயற்கையான ஒன்று, பெண்கள் விளையாட்டுத் துறைகளில் பரிணமித்து வரும் காலகட்டத்தில் இது பொருட்படுத்த வேண்டிய ஒன்றல்ல என்பது போன்ற குரல்களும் எழக்கூடும். உண்மையில் இவற்றைப் பொதுவெளியில் பேசினால் பெண்கள் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள், அவர்களைப் பற்றிய மதிப்பீடு குறையும் என்பதல்ல, ஒரு உடலும் உயிரும் அதன் உணர்வுகளும் சமூகத்தில் மதிக்கப்பட வேண்டும் என்பதே அடிப்படையான வேண்டுகோள்.
சுருக்கப்படும் பெண்கள்
பல்வேறு துறைகளில் தலைமைப் பொறுப்புகளில் அதிக எண்ணிக்கை யிலான பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக அவர்களுக்குள்ள இடர்பாட்டை- பேசாமல் இருப்பதும், தீர்வைத் தேடாமல் இருப்பதும் சக உயிர் மீது கொள்ள வேண்டிய மனித நேயம், அக்கறை ஆகியவற்றின் தோல்வியையே காட்டுகிறது. நாற்பது வயதைத் தாண்டி பணிக்குச் செல்லும் ஒரு பெண் குடும்பத்தின் பெயராலும் வருமானத்துக்காகவும் தன்னைப் பலியிட்டுக் கொண்டிருக்கிறாள். தாய்மை, மனைவி என்கிற சொற்களுக்குள் அவள் சுருக்கப்பட்டுள்ளாள். இந்நிலையில் நாற்பது வயதுக்கு மேல் அவள் தன்னுடலையும் அது தரும் இன்னல்களையும் கூடுதலாகச் சேர்த்து சுமக்க வேண்டியவளாக இருக்கிறாள்.
சமூகத்தின் எதிர்கால சந்ததிகளை உருவாக்கித் தருவதில் பெரும் பங்களிப்பு செய்துவரும் பெண்ணுடல் என்பது ஆணிலிருந்து வேறுபட்டது. இருவருக்கும் அறிவு சமமானது என்றபோதும், பெண்ணுடல் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வேறு பட்டதாயும், நுணுக்கமானதாயும் ஆணுக்கு அந்நியப்பட்டதாயும் உள்ளன. அவ்வுடலும் மனமும் தனக்கான கூடுதலான ஓய்வையும், அணுசரனையையும், கவனிப்பையும் கேட்டுப் பெறத் தகுதியுடையவையே. அது நியாயமானதும்கூட.
அரிதாகச் சில தனியார் நிறுவனங்கள் இந்தக் கோரிக்கைக்குச் செவிசாய்க்கத் தொடங்கியுள்ளன. உலகின் பல நாடுகளில் மாதவிடாய் நிற்றல் விடுப்பு வேண்டி பெண்களின் குரல் நாடாளுமன்றத்திலும் பொதுவெளி யிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. சமூகத்தில் இன உற்பத்தி வழியாகப் பெரும் பங்களிப்பை ஆற்றிவரும் பெண்களுக்கான பேறுகால விடுப்பு வழங்குவதில் உள்ள நியாயத்தையும் நீதியையும் விட, தனது பங்களிப்பின் வழியாகப் பலனைச் சமூகத்துக்குக் கொடுத்துவிட்டு வலியைச் சுமந்து நிற்கும் பெண்ணுக்கு மாதவிடாய் நிற்றல் விடுப்பு வழங்குவதில் கூடுதலான நியாயம் உள்ளது.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: nerkunjam@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT