Published : 18 Oct 2020 09:27 AM
Last Updated : 18 Oct 2020 09:27 AM
கடந்த வாரத்தில் நடந்த இரு நிகழ்வு களில் ஒன்று பெருமிதத்தையும் மற்றொன்று வேதனையையும் ஏற்படுத்தியிருக்கின்றன. உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான சௌமியா பாண்டே, காசியாபாத் மாவட்டத்தின் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்கான வழிகாட்டு அதிகாரியாக ஜூலை மாதம் நியமிக்கப் பட்டார். இரு வாரங்களே ஆன தன் பச்சிளங்குழந்தையுடன் அவர் பணிக்குத் திரும்பிய வீடியோ கடந்த வாரம் வைரலானது.
“ஐ.ஏ.எஸ். அதிகாரியான எனக்கு கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நிறைய வேலை இருக்கிறது. இந்தியாவில் கிராமப்புறப் பெண்கள், கருவுற்றிருக்கும்போது எல்லா வேலைகளையும் செய்வார்கள். பிரசவம் நெருங்கும் நாள் வரையிலும் வேலைக்குச் செல்வார்கள். குழந்தை பிறந்த சில நாள்களிலேயே குழந்தையையும் கவனித்துக்கொண்டு வெளி வேலைகளையும் செய்யத் தொடங்கிவிடு வார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு மன உறுதி இருக்கிறது. நானும் அப்படித்தான் மூன்று வார மகளுடன் வேலைக்குத் திரும்பியிருக்கிறேன்” என்று கூறுகிறார் சௌமியா பாண்டே.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பெருநகராட்சியின் ஆணையரான ஸ்ரீஜனா, மூன்று வாரங்களே ஆன தன் குழந்தையுடன் கடந்த ஏப்ரல் மாதம் பணிக்குத் திரும்பியதும் குறிப்பிடத்தக்கது. வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆறு மாதம்வரை மகப்பேறு விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று சட்டம் சொல்கிற நிலையில், பெருந்தொற்றுக் காலப் பணியை மனத்தில் கொண்டு மகப்பேறு விடுப்பு எடுத்துக்கொள்ளாமல் பணிக்குத் திரும்பியிருக்கும் சௌமியா பாண்டேயைப் பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், இதுபோன்ற நெருக்கடியான காலத்தில், தவிர்க்க இயலாத சூழலில் பெண்கள் பணிக்குத் திரும்புவதைக் காரணமாக வைத்து, எல்லாப் பெண்களும் மகப்பேறு விடுப்பு எடுத்துக்கொள்ளக் கூடாது என்று சிலர் நினைப்பது தவறானது எனவும் சமூக வலைத் தளங்களில் எதிர்க்குரல்கள் எழுந்துள்ளன.
குறையாத வன்முறை
பணி சார்ந்த பெண்களின் பொறுப்பு உணர்வு குறித்துப் பெருமைப்படும் அதேநேரம் உத்தர பிரதேச மாநிலம் பக்சா கிராமத்தைச் சேர்ந்த மூன்று தலித் சிறுமிகள் மீது அமிலம் வீச்சப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது. மூவருமே 8 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள். பெண்கள் மீதான வன்முறையைத் தடுக்கப் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கும் நிலையில், அமில வீச்சைத் தடுக்கவும் நிறைய வழிமுறைகளை அரசு பரிந்துரைத்திருக்கிறது. இருப்பினும் பெண்கள் மீது வன்முறையை நிகழ்த்தும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருப்பது பெண்களின் பாதுகாப்பு குறித்த வலுவான கேள்வியை எழுப்புகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT