Published : 11 Oct 2020 09:34 AM
Last Updated : 11 Oct 2020 09:34 AM

விவாதக் களம்: தொடர் போராட்டம் மூலம் பாலினப் பாகுபாட்டைக் களைவோம்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது தலித் பெண், கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதையொட்டியும் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும் ‘இடையறாது போராடினால் மட்டுமே விடியும்’ என்கிற தலைப்பில் அக்டோபர் 4 அன்று வெளியான ‘பெண் இன்று’வில் எழுதியிருந்தோம். பெண்கள் மீது ஆண்களால் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்றும் ஆபத்தும் அச்சுறுத்தலும் நிறைந்த இந்தச் சமூகத்தில், வன்முறையைக் களைவது எப்படி என்றும் கேட்டிருந்தோம். பாலினப் பாகுபாட்டைக் களைவதே தீர்வின் தொடக்கப்புள்ளியாக இருக்கும் என்று சிலர் எழுதியிருந்தனர். எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் சாதியப் படிநிலைகள் குறித்தும், விரைந்தும் நியாயமாகவும் கிடைக்க வேண்டிய நீதி குறித்தும் பெரும்பாலான வாசகர்கள் எழுதியிருந்தனர். அவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்கள்:

செயலி, வீடியோ கேம்களுக்கு தடை போட்டால் போதுமா?

மன்னராட்சி காலத்திலிருந்தே ஒரு நாட்டை அல்லது ஒரு சமூகத்தை அவமானப்படுத்த வேண்டுமென்றால் அங்கிருக்கும் பெண்களை அவமானப்படுத்துவது அல்லது வல்லுறவுக்கு ஆட்படுத்துவது என்றுதான் இந்த ஆணாதிக்கச் சமூகம் செயல்பட்டுவந்திருக்கிறது. இன்றைய ‘சாதிய’ திரைப்படங்கள்கூடப் பெண்களை அவமானப்படுத்துவதுதான் பழி தீர்க்கும் வழி என்று கற்பிக்கின்றன. மாடுகளைக் காக்கப் போராட்டம் நடத்துகிற இந்தப் புண்ணிய பூமியில்தான் பெண்களை மிக மோசமாக நடத்துகிறார்கள். வெளியே தெரியாத எத்தனையோ கொடூரங்கள் அந்தக் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட பெண்களுடன் சேர்த்து எரிக்கப்பட்டும் புதைக்கப்பட்டும் உள்ளன.

சாதிவெறி தழைத்தோங்கும் இந்நாளில் சட்டம் தன் கடமையைச் செய்வதற்குள், இன்னும் எத்தனை பெண்களைப் பலிகொடுக்க வேண்டுமோ? ‘டிக் டாக்’, ‘பப்ஜி’ போன்ற இணைய செயலிகளுக்கு ஒரே நாளில் முற்றுப்புள்ளி வைக்க விறுவிறுவென்று செயல்பட முடிகிற அரசால், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரமில்லை. தண்டனைகள் கடுமையாக்கப்படுவதும் குற்றங்களைக் குறைக்கும். எங்கோ, யார் வீட்டிலோ நடக்கிற கொடுமை என்று நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது. அண்டை வீட்டில் பற்றியிருக்கும் நெருப்பை நாமும் சேர்ந்து அணைக்கத் தவறினால், அது நாளை நம் வீட்டையும் எரித்துவிடும்.

பெண் பலவீனமானவள் என்கிற நினைப்பை முதலில் அகற்ற வேண்டும். பெண் என்பவள் வெறும் சதைப்பிண்டமல்ல என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அநீதிகளைக் கண்டித்து முகநூலில் பதிவு போட்டுவிட்டு, அடுத்த நிலைத்தகவல் போடுவதற்கு ஆயத்தமாகக் கூடாது. இடைவிடாத களப் போராட்டமும் அவசியம்.

- செ.சு.தேஜஸ்வினி, காளப்பட்டி.

சிந்திக்க, செயல்பட கற்றுக்கொடுப்போம்

நம் நாட்டில் ஆண்களுக்கு ஒழுக்கப் பயிற்சி அவசியம். வீடும் பள்ளியும் அதற்குப் பொறுப்பேற்றுச் செயல்படுத்த வேண்டும். அப்போது தான் பெண்ணை வெறும் பண்டமாக நினைக்கும் கீழான ஆணாதிக்கச் சிந்தனை மறையும். அதேபோல் பள்ளிகளில் மாணவிகளுக்கு கராத்தே போன்ற தற்காப்புக் கலைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். பெண்கள் துணிச்சல் மிக்கவர்கள் என்கிற வித்து ஆண்களின் மனத்தில் விழுந்தாலே போதும். தவறு செய்ய நினைக்கிறவர்கள்கூடத் தள்ளி நிற்பார்கள்.

பெண்கள் மீதான பாலியல் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களை ஊரறிய அம்பலப்படுத்துவது அவசியம். அவர்கள் செய்த கொடுமையைப் பலர் முன் வெட்டவெளிச்சமாகும்போது, தவறு செய்யும் எண்ணமே பிறருக்குத் தோன்றாது. தட்டிக்கேட்க ஆள் இல்லாததால்தான் இங்கே பல பிரச்சினைகள் பெருகுகின்றன. நீதிமன்றம் விரைந்து செயல்பட்டால் குற்றம்செய்யும் எண்ணம் சிறிதளவாவது குறையும். குற்றம் செய்துவிட்டு வாழும் ஒவ்வொரு நாளும் தாங்கள் செய்த குற்றத்தை நினைத்து வேதனைப்படுகிற அளவுக்குத் தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும்.

பண்பாடு என்கிற பெயரில் பெண்களை நாம் படுத்தும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. அவர்களை வெளியே விடாமல், சுய சிந்தனையை அறுத்துப் போட்டு, சொன்னதைச் செய்யும் ரோபாட்டாக இருக்கத்தான் பெண்களுக்கு நம் சமூகம் கற்றுத்தருகிறது. பெண்ணைச் சுயமாக சிந்திக்க விடுவதே அவர்களைத் தனித்த ஆளுமையாக வளர்த்தெடுக்கும். நம் குடும்ப அமைப்புக்கும் இதுபோன்ற பெண்கள் மீதான வன்முறைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அறம் வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். வன்முறையைத் தூண்டும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டைக் குறைப்பதும் இதுபோன்ற கொடூரங்களைக் குறைக்கும் வழி.

- ஜே. லூர்து, மதுரை.

அனைத்து வகையிலும் போராட வேண்டும்

பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்று 2012-ல் நடைபெற்ற நிர்பயா கொடூரச் சம்பவத்திலிருந்து திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இன்னும் விவாதம் ஓய்ந்தபாடாக இல்லை என்பதே நமது சமூகத்தின் அவல நிலையைக் காட்டுகிறது.

ஹாத்ரஸ் பெண்ணுக்கு நிகழ்ந்ததைப் போன்ற கொடூரச் செயல்களில் ஆண்கள் ஈடுபடும்போதெல்லாம் ‘இந்தியாவின் மகள்களைக் காப்போம்’ என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திக்கொண்டு ஊர்வலம் செல்வதுடன் நமது கடமை முடிவதில்லை. நமது சமூகப் பொறுப்புணர்வு அதன் நீட்சியாக இந்தியாவின் ஒவ்வொரு மகளையும் சாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி பாதுகாப்பதில் அல்லவா இருக்கிறது. நம் குடும்பத்தில் யாருக்காவது இப்படியொரு அநீதி நடந்திருந்தால், நாம் எப்படித் துடித்தெழுந்து செயல்படுவோமோ அதே உணர்வைத்தான் யார் வீட்டுப் பெண்ணுக்கு நடந்தாலும் நாம் வெளிப்படுத்த வேண்டும். பெண்ணுரிமை பேசிய பெரியாரின் கருத்துகள் நாடு முழுவதும் விதைக்கப்பட வேண்டும்.

- நா. ஜெஸிமா ஹுசைன், மேலூர்.

களையப்பட வேண்டிய சாதி உணர்வு

சிறு வயது முதலே ‘நம்ம ஆளுங்க’ என்று சொல்லிச் சொல்லியே சாதியத் தீயை மூட்டி வளர்க்கிறார்கள். இப்படி ஊட்டப்படும் சாதியப்பற்று குழந்தைகள் பெரியவர்களானதும் சாதிவெறியாக மாறி வன்முறைக்கு வழிகோலுகிறது.

நாம் என்ன குற்றம் செய்தாலும் யாரும் எதுவும் செய்ய முடியாது என்கிற மெத்தனப்போக்கும் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம். தண்டனையிலிருந்து விடுபட பண பலம், சாதிய பலம், அரசியல் பலம் என்று ஏகப்பட்ட வழிகள் இருப்பதால், தவறுகள் இங்கே இயல்பாகிவிட்டன. பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டால் நமக்கு எதிர்காலமே இல்லை என்பது போன்ற அச்சத்தை விதைக்கிற அளவுக்குத் தண்டனைகள் இருக்க வேண்டும். அவை விரைந்து வழங்கப்படவும் வேண்டும்.

பெண்களும் காலத்துக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். தகாத எண்ணம்கொண்ட ஆண்களிடம் இருந்து தன்னைத் தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை பெண்கள் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். கயவர்கள் மத்தியில் வாழ்வதற்கு ஏற்ப பெண்கள் தங்களைத் தகவமைத்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

- எஸ்.பிரபு, தேனி.

ஆண்களும் இணைய வேண்டும்

விடியும் விடியும் என்று காத்திருந்தால் பெண்ணுக்கு விடியாது; கடும் போராட்டம் வேண்டும். பெண்ணுக்கு எதிராக அநீதி நடைபெற்றால், உடனே அந்தப் பகுதியில் இருக்கும் பெண்கள் அனைவரும் ஒன்றுதிரள வேண்டும். ஆண்கள் முன்வந்தால் அவர்களையும் போராட்டத்தில் இணைத்துக்கொள்ளலாம். நம்மிடையே இருக்கும் வேற்றுமைகளை மறந்து, பெண்ணுக்கு நீதி கிடைக்க ஒற்றுமையாகப் போராட வேண்டும். வன்முறையில் ஈடுபட்ட ஆண்களை அம்பலப்படுத்துவதுடன், அவர்களைக் காவல் துறையினரிடம் ஒப்படைக்கவும் வேண்டும். குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை கிடைக்கும்வரை போராட்டத்தைக் கைவிடக் கூடாது. எந்த வகையிலும் குற்றவாளிகள் தப்பித்துவிட அனுமதிக்கக் கூடாது. ஒருவருக்கு வழங்கப்படும் தண்டனை, தவறு செய்ய நினைக்கும் அடுத்தவருக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாகப் பாலினப் பாகுபாட்டைக் களைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

- தங்கவேல் பழனிச்சாமி, பெரிய கள்ளிவலசு.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து அக்டோபர் 4 அன்று வெளியான 'பெண் இன்று' கட்டுரை சிறப்பாக இருந்தது. பெண்கள் மீது தொடர்ச்சியாக வன்முறை நிகழ்த்தப்படும் சூழலில். இதுபோன்ற கட்டுரை வெளியாவது பாராட்டுக்குரியது. தொடர் செயல் பாடுகள் மூலமே பெண்கள் மீதான வன்முறையைக் களைய முடியும். அந்த வகையில் காலம் கருதி இப்படியொரு கட்டுரை வெளியாகியிருப்பது வரவேற்கத்தக்கது.

- ஆர். நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்.

ஹாத்ரஸ் கொடுமையை மையமாக வைத்து எழுதப்பட்ட, ‘இடையறாது போராடினால் மட்டுமே விடியும்’ கட்டுரை நன்றாக இருந்தது. ஹாத்ரஸ் வன்முறையுடன் சேர்த்து தமிழகத்திலும் மற்ற மாநிலங்களிலும் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் குறித்தும் கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தது சிறப்பு. பாலினப் பாகுபாட்டை மட்டும் குறிப்பிடாமல் பல பரிமாணங்களிலும் வன்முறைகளை அணுகியிருந்தது பாராட்டுக்குரியது.

- இரா. ஜவஹர், மூத்த பத்திரிகையாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x