Last Updated : 21 Apr, 2014 01:24 PM

 

Published : 21 Apr 2014 01:24 PM
Last Updated : 21 Apr 2014 01:24 PM

நேர்காணல்: தயக்கம் இல்லாமல் செயல்பட வேண்டும் - வீணை காயத்ரி

வீணை காயத்ரி என்றழைக்கப்படும் ஈச்சம்பட்டி காயத்ரியின் தந்தை ஜி. அஸ்வத்தாமா தெலுங்குத் திரைப்பட இசையமைப்பாளர். அம்மா கமலா அஸ்வத்தாமா வீணைக் கலைஞர்.

தனது ஆரம்ப கால இசைப் பயிற்சியைப் பெற்றோரிடம் கற்ற காயத்ரி, பிறகு சங்கீத கலாநிதி டி.எம். தியாகராஜனிடம் பயிற்சி பெற்றார்.

வீணையே வாழ்க்கையாகக் கொண்ட இவரின் முதல் மேடைக் கச்சேரி, 1968-ம் ஆண்டு தியாகராஜா விழாவில் நடந்தது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபாவினரால் நடத்தப்பட்ட இந்த விழாவில், தனது 9-வது வயதில் காயத்ரி, வீணை இசை நிகழ்ச்சியை வழங்கினார். 13-வது வயதில் முதுநிலைக் கலைஞராக (Senior Artiste) அனைத்திந்திய வானொலி அவருக்கு அங்கீகாரம் தந்தது. இன்று தமிழக அரசால் நடத்தப்படும் இசை, நுண்கலை பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக விளங்குகிறார். இதற்கு முன்பு தமிழக அரசு இசைக் கல்லூரிகளுக்கான இயக்குநராகவும் அரசு இசைக் கல்லூரியின் முதல்வராகவும் இருந்துள்ளார்.

தமிழக அரசின் கலைமாமணி விருது, தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் சங்கீத கலாசிகாமணி விருது, சங்கீத நாடக அகாடமி விருது, ரோட்டரி கிளப் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது, கிருஷ்ண கான சபா வழங்கிய ஆச்சாரிய சூடாமணி, சுவாமி தயானந்த சரஸ்வதி வழங்கிய அர்ஷ கலா பூஷணம் என இவரது விருதுகளின் பட்டியல் நீள்கிறது. ஜோதிடம், எண் கணித ஜோதிடம் ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்ற இவர் சமையலிலும் கை தேர்ந்தவர்.

நீங்கள் மழலை மேதை என்பது உலகறிந்த விஷயம். முதன் முதலில் வீணை உங்களை ஈர்த்தது நினைவில் இருக்கிறதா?

என் அம்மா வீணை இசையில் வித்தகர். அவர் பலருக்கு வீணையை இசைக்கக் கற்றுக் கொடுத்தார். அவர் வயிற்றில் நான் கருவாக உருவாகிய நாளில் இருந்தே வீணை இசை எனக்கு அறிமுகமாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பிறந்த பிறகும் என்னைச் சுற்றிப் பலர் வீணை இசைத்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஜீராவில் குலோப்ஜாமூன் ஊறுவது போல, வீணை இசைக்குள் நான் ஊறிவிட்டேன் போல் இருக்கிறது (கண்களில் ஆனந்தம் மின்ன வாய்விட்டுச் சிரிக்கிறார்).

உங்கள் இளமையின் ரகசியம் என்ன?

(மீண்டும் சிரிக்கிறார்.) அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். மனதில் நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் முகத்தில் பிரதிபலிக்கும். நான் எப்பவும் யூத்ஃபுல்லாதான் நினைப்பேன். குழந்தைத்தனமாகவும் யோசிப்பேன். ஆனால் நிர்வாகம் என்று வந்துவிட்டால் பத்து ஆண்கள் சிந்திப்பதைவிட அதிகமாக சிந்தித்து முடிவெடுப்பேன்.

இசை, நுண்கலை பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தர் என்ற முறையில் என்ன செய்திருக்கிறீர்கள்?

முடிவெடுப்பதிலும் முடிவைச் செயல்படுத்துவதிலும் தயக்கம் கூடாது. முதல்வர் அம்மா என்னைத் துணை வேந்தராக நியமித்த இந்த நான்கு மாதங்களில் நான் புரிந்துகொண்டது இது. வீணையை வாசிக்கும் பொழுது தயங்கித் தயங்கி வாசிப்பதில்லையே. இசைக்காகப் பல்கலைக்கழகம் வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் வைத்தேன். அவர் ஒப்புக்கொண்டார். இசை மாணவர்களுக்கான உதவித்தொகையை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் அனுமதி வழங்கினார்.

சில ஆண்டுகளுக்கு முன் நீங்கள் சந்நியாசி ஆகிவிட்டதாகச் செய்தி வந்ததே…

எனக்கு சாப்பாட்டு மேல ரொம்ப ஆசை. என்னால சந்நியாசியாக எல்லாம் ஆக முடியாது. நாங்கள் வித்யாரண்ய சுவாமிகளின் பக்தர்கள். அவரது சிலையை நண்பர் அளித்தார். பாலவாக்கம் பகுதி காடாக இருந்தபோது அங்கு இருந்த வீட்டில் குடியிருந்தோம். அந்த சிலாரூபத்திற்கு காவி உடையில் என் கணவர் பூஜைகள் செய்வார். இதனைப் பார்த்தவர் யாரோ திரித்து தவறாக வெளியிட்டுவிட்டார்.

தியானம், யோகம் பற்றியெல்லாம் உங்கள் பிளாக்கில் (jasmine strings) நிறைய எழுதியிருக்கிறீர்கள். தியானம் செய்வது எப்படி?

உள்ளிழுக்கும் மூச்சையும், வெளிவிடும் மூச்சையும் உற்று கவனித்து உணர வேண்டும். இந்த ஆழ்ந்த அமைதியே தியானத்திற்குள் நம்மைக் கொண்டு செலுத்திவிடும். மும்மூர்த்திகள் உள்பட வாக்கேயக்காரர்கள் கீர்த்தனைகளில் மந்திர சக்தி அதிகம் உண்டு. நிரவல் என்பது மீண்டும் மீண்டும் பாடப்படும் வாக்கியம். இந்த நிரவல் வாக்கியங்கள் அப்படியே பலிக்கும். அதனையே தவறாகப் பாடிவிட்டால் வேகமாகத் திருப்பித் தாக்கிவிடும். இசையை நிறையக் கேட்க வேண்டும். அது வாழ்வில் சகல செளபாக்கியத்தையும் கொண்டு தரும்.

உங்கள் கணவர் மெரைன் இன்ஜினியர் அல்லவா? அவருடனான கப்பல் பயண அனுபவம் ஒன்று சொல்லுங்களேன்.

கல்யாணமான புதிதில் அவருடன் கப்பலில் பல நாடுகளுக்குச் சென்றேன். அப்போது ஆஸ்திரேலியாவில் இருந்து மஸ்கட் போகும் வழியில் ஆஸ்திரேலியன் பைட் (Bight) என்ற இடத்தில் முரட்டுத்தனமான அலைகள் உள்ள கடற்பகுதியைக் கடந்து செல்ல வேண்டும். இந்த இடத்தில் ஏற்பட்ட மோசமான புயல் காரணமாக கப்பல் பயங்கரமாக ஆடியது. கரண்ட்டும் போய்விட்டது. கப்பல் முழுவதும் இருட்டு. இவர் முதன்மை இன்ஜினியர் என்பதால் கப்பலில் பழுது பார்க்கும் இடத்திற்குச் சென்றுவிட்டார். இரண்டு நாள் ஆகியும், வேலை பளு காரணமாக நாங்கள் தங்கியிருந்த அறைக்கு வரவே இல்லை. இருட்டும் கப்பலின் பயங்கர ஆட்டமும், எனக்கு பயமூட்டியது. இதோடு வாழ்வு முடிந்தது என்று நினைத்து அம்மாவையும், என் தங்கையையும் இனி பார்க்கவே முடியாதோ என்று எண்ணி அழுதுகொண்டிருந்தேன்.

திடீரென்று ஏதோ நினைவு வந்தாற்போல் பேக் செய்யத் தொடங்கினேன். அந்த நேரம் பார்த்து கரண்ட்டும் வந்தது; என் கணவரும் வந்துவிட்டார். இனி பயமேதுமில்லை என்று சொல்லிக்கொண்டே, என்ன பேக்கிங் என்று கேட்டுக்கொண்டே பையைப் பிரித்தார். அதில் எனக்கு ஒன்று, அவருக்கு ஒன்று என்று இரண்டு செட் டிரெஸ், ஒரு நைட்டி இருந்தது. கடலுக்குள் விழுந்தப்பறம் நைட்டியை எப்படி மாற்றிக்கொள்வாய் என்று கேட்டுக் கடகடவென்று சிரிக்கத் தொடங்கிவிட்டார். கல்யாணம் ஆகி முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னமும் அவரது கேள்வியும் சிரிப்பும் தொடர்கின்றன.

உங்களுக்குச் சமைக்கத் தெரியுமா?

பிரமாதமாகச் சமைப்பேன். ஆந்திராவில் மிகப் பிரபலமான கந்தா அட்டு எனக்கு சமைக்கவும் பிடிக்கும், சாப்பிடவும் பிடிக்கும்.

கந்தா அட்டு

`தி இந்து` வாசகியருக்காக காயத்ரி தரும் கந்தா அட்டு செய்முறை விளக்கம்

கந்தா என்றால் கருணைக் கிழங்கு மண்டை கருணை என்பார்களே அதுதான். அதனைத் தோல் சீவி, மண் போக நன்கு கழுவி மிக்ஸியில் போட வேண்டும். தேவையான அளவு காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்கு தோசை மாவு போல நைசாக அரைக்க வேண்டும். அதனை தோசைக் கல்லில், அடை போல தடிமனாக வார்க்க வேண்டும். இந்த தோசையின் இரு புறமும் மொறுமொறுக்க வேக விட்டபின் எடுத்து விட்டால் கந்தா அட்டு தயார். சூடான சாதத்தில் நெய் விட்டு கந்தா அட்டுவை உதிர்த்துப் போட்டு, பிசைந்து அப்பளத்துடன் சாப்பிடலாம். கந்தா அட்டுவை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள் என்கிறார் இரண்டு பேத்திகளைக் கொண்ட வீணை காயத்ரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x