Published : 04 Oct 2020 09:31 AM
Last Updated : 04 Oct 2020 09:31 AM

சமூக அவலம்: இடையறாது போராடினால் மட்டுமே விடியும்

கரோனா பெருந்தொற்றைவிட மிக மோசமான நோய்க்கூறுக்கு இந்தச் சமூகம் பன்னெடுங்காலமாகவே ஆளாகியிருக்கிறது. பச்சிளங் குழந்தை கள் முதல் வயது முதிர்ந்தோர்வரை வயது வித்தியாசம் இல்லாமல் பெண்கள் இங்கே வல்லுறவு செய்யப்படுகிறார்கள். மிக மோசமாகச் சிதைக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்கள் மீது சாதி இந்துகள் நிகழ்த்துகிற வன்முறையாகவே பெரும்பாலும் இது இருக்கிறது.

இப்படிச் சீரழிக்கப்பட்டுக் கொல்லப் படும் ‘இந்தியாவின் மகள்’கள் பட்டிய லில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண்ணின் பெயரும் தற்போது சேர்ந்திருக்கிறது. ‘பெண்களைத் தெய்வமாக மதிக்கும் நாடு’ என்று நாம் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் மாண்பை, உலக அளவில் கேள்விக்குறி ஆக்கியிருக்கின்றன திரும்பத் திரும்ப நடைபெறும் இதுபோன்ற வன்முறைகள்.

தலைக்கு மேல் கத்தி

சமூக, பொருளாதார, சாதிய ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நம் சமூகத்தில் ஒடுக்கப்படுவோர் வன்முறைக்கு ஆளாவது புதிதல்ல. ஒடுக்கப்பட்டோரிலும் பெண்களாக இருப்பதென்பது தலைக்கு மேல் கத்தி தொங்குவதைப் போன்றது. எப்போது வேண்டுமானாலும் அவர்களது வாழ்க்கை நிர்மூலமாக்கப்படலாம். வீட்டுக்கு வெளியே விளையாடுவது, கட்டிட வேலையோ, கழனி வேலையோ முடிந்து வீடு திரும்புவது, இயற்கை உபாதையைக் கழிக்க வெளியே செல்வது என்பது போன்ற ஏதோவொரு ‘குற்ற’த்துக்காகத்தான் பெண்கள் இங்கே தண்டிக்கப்படுகிறார்கள். இப்போது மாட்டுக்குப் புல்லறுக்கப் போன ஓர் இளம்பெண்ணின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது தலித் பெண், மாட்டுக்குப் புல்லறுக்கச் சென்றபோது செப்டம்பர் 14 அன்று நால்வரால் கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். அந்த நால்வரும் தன் சகோதரியின் கழுத்தைக் கயிறால் நெரித்து, முதுகெலும்பை உடைத்து, நாக்கை வெட்டியிருப்பதாக அந்தப் பெண்ணின் சகோதரர் தெரிவித்திருக்கிறார். மிக மோசமான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அந்தப் பெண், கடந்த புதன்கிழமை அதிகாலை உயிரைவிட்டார்.

அந்தப் பெண்ணின் உடலை அவசர அவசரமாக டெல்லி மருத்துவமனையிலிருந்து சொந்த கிராமத்துக்கு எடுத்துவந்த காவல் துறையினர், அந்தப் பெண்ணுடைய குடும்பத்தினரின் ஒப்புதலின்றி அன்று நள்ளிரவே தகனம் செய்ததைப் பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். தகனம் நடைபெற்றபோது தங்கள் குடும்பத்தினர் யாரையும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை என்று அந்தப் பெண்ணின் சகோதரர் தெரிவித்திருக்கிறார்.

மற்றொரு கொடுமை

ஹாத்ரஸ் பெண்ணுக்கு நடந்த கொடுமையின் கொதிப்பே அடங்காத நிலையில், எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியதைப்போல் மற்றொரு பெண்ணும் வல்லுறவுக்கு ஆளாக்கப் பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தக் கொடுமையும் அதே உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் நடந்திருக்கிறது. பல்ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது தலித் பெண், வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில் இருவரால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

பெண்கள் மீது கட்டுக்கடங்காத வன்முறைகள் நிகழ்த்தப்படும்போது அவை நடந்த ஊர், மாநிலம், பெண்ணின் சாதிய நிலை ஆகியவற்றைச் சேர்த்தே கணக்கில்கொள்ள வேண்டும். காரணம் இவையெல்லாம் சேர்ந்துதான் குற்றத்தின் தன்மையைக் கூட்டவோ குறைக்கவோ செய்கின்றன. சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் பெண்களுக்கு என்ன நிகழ்ந்தாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற மனநிலையும் இதுபோன்ற குற்றங்கள் அதிகமாக நிகழ்வதற்குக் காரணம். உத்தரப்பிரதேசத்தில் கடந்த இரண்டு மாதங்களில் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட ஐந்து பெண்களில் மூவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது எதேச்சையானது அல்ல. தேசியக் குற்றப்பதிவு அமைப்பின் புள்ளிவிவரங்கள் இந்தக் கருத்துக்கு வலுசேர்க்கின்றன.

வன்முறையில் முந்தும் மாநிலங்கள்

தேசியக் குற்றப்பதிவு அமைப்பில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் குற்றங்களின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம் வகிக்கும் ‘பெருமை'யைப் பெற்றிருக்கிறது உத்தரப்பிரதேசம். பெண்களை வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொன்றழிப்பதில் மகாராஷ்டிரத்துக்கு முதலிடம். மத்தியப்பிரதேசமும் உத்தரப்பிரதேசமும் அடுத்தடுத்த இடங்களைப் பெறுகின்றன. பெண்களுக்கு எதிரான வல்லுறவு வழக்குகளில் ராஜஸ்தான் மாநிலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. 2019 புள்ளிவிரத்தின்படி இந்தியா வில் ஒவ்வொரு நாளும் 87 பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். பெண்கள் மீதான வன்முறை 2018-ம் ஆண்டைவிட 2019-ல் ஏழு சதவீதம் அதிகரித்திருக்கிறது.

இவற்றை வெறும் புள்ளிவிவரங்களாகவும் ஆண் - பெண் உறவு சார்ந்த குற்றங்களாகவும் மட்டுமே சுருக்கிவிட முடியாது. இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் மிக மோசமானது. அதிகாரத்தில் யார் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் இந்தக் குற்றச்செயல்களை நாம் மதிப்பிட்டாக வேண்டியிருக்கிறது. பெண்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்குப் பின்னால் ஆதிக்கவெறியும் அதிகார உணர்வும் இருப்பதைத்தான் இந்தப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. நாம் என்ன செய்தாலும் நம்மைக் காப்பாற்ற ஒரு கூட்டம் இருக்கிறது என்கிற துணிச்சலே, சிலரைக் குற்றச்செயல்களில் இயல்பாக ஈடுபட வைக்கிறது. காஷ்மீரத்தின் கதுவாவைச் சேர்ந்த எட்டு வயது சிறுபான்மையின சிறுமி 2018-ல் கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப் பட்டபோது, குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை ஆதரித்துப் பேரணி நடத்தப்பட்ட அவலமெல்லாம் நம் நாட்டில் மட்டுமே சாத்தியம்.

குற்றவாளிகளின் பின்னணி

வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்களின் பின்னணி எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு வன்முறையில் ஈடுபட்டவர்களின் பின்னணி குறித்து ஆராய்வதும் முக்கியம். பாதிக்கப்படுகிறவர்களில் எப்படிப் பெரும்பான்மையான பெண்கள் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்களோ, அவர்களை வன்முறைக்கு ஆளாக்கு பவர்கள் சாதி இந்துக்களாகவே இருக்கிறார்கள். இந்த இடத்தில் இன்னொரு அம்சத்தையும் கவனிக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடும் சாதி இந்துக்கள் அனைவருமே பொருளாதார பலத்துடன் இருப்பதில்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறவர் களிடமும் சாதி என்கிற ஆணவமும் அகந்தையும் எந்த அளவுக்கு வெளிப்படும் என்பதற்கு அவர்கள் நிகழ்த்துகிற வன்முறைகளே சான்று.

தமிழகம் விதிவிலக்கல்ல

தேசியக் குற்றப்பதிவு அமைப்பின் புள்ளிவிவரத்தின்படி முதல் மூன்று இடங்களை வைத்து வட இந்திய மாநிலங்களில் மட்டும்தான் பெண்கள் மீதான வன்முறை அதிக அளவில் நடைபெறுகிறது என்று நம்ப வேண்டியதில்லை. நம்மிடையேயும் சாதியப் படிநிலை கோலோச்சும்போது, வன்முறை மட்டும் நிகழாமல் இருக்குமா? சிறுமிகளை வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொல்வதும், மாணவியின் கருவில் இருக்கும் குழந்தையை வெளியே எடுத்து எரிப்பதும், பெற்றவரின் கண் எதிரிலேயே அவருடைய மகளின் தலையைத் துண்டிப்பதுமான குலைநடுங்கச் செய்யும் வன்முறைகளுக்குத் தமிழகத்திலும் குறைவில்லை.

ஊரறிய நடக்கும் பெண்களுக்கு எதிரான இதுபோன்ற அநீதிகளைக் கண்டித்துப் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறாமல் இல்லை. உத்தரப்பிரதேச வழக்கில் விரைந்து நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பிரதமர் தன்னைக் கேட்டுக்கொண்டதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ட்விட்டரில் சொல்லியிருக்கிறார். இதற்குமுன் நடந்த பல்வேறு வழக்குகளிலும் அப்போதைய முதல்வர்களும் இப்படித்தான் சொன்னார்கள். ஆனாலும், பெண்கள் மீதான வன்முறைகள் சற்றுகூடக் குறையவில்லையே ஏன்? காரணம், நீதியை வழங்கும் அமைப்புகளின் செயல்பாடு.

‘தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி' என்கிற சிந்தனை முளைவிடாத அளவுக்கு அந்த அமைப்புகளின் செயல்பாடு இருந்திருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்திருக்காது. ஆனால், வெளியாகும் தீர்ப்புகள் எல்லாம் அந்த அமைப்பின் மீதான நம்பிக்கையைத் தகர்ப்பவையாகவே இருக்கும்போது நாம் இன்னும் உறுதியுடனும் தீவிரமாகவும் செயல்பட்டாக வேண்டிய தேவை எழுகிறது.

இடையறாத போராட்டம்

அநீதியைக் கண்டு கொதித்து எழுகிறவர்கள்கூட, சட்டமும் நீதியும் தன் கடமையைச் செய்யும் என்று அமைதியாகிவிடுகின்றனர். அதையும் மீறி நீதி கேட்டு நிமிர்ந்து எழுகிறவர்களின் குரல்வளையை நசுக்கக் காத்திருக்கும் கரங்கள் இங்கே ஏராளம். தன்னை வல்லுறவு செய்தவர்களுக்குத் தண்டனை வாங்கித்தர நீதிமன்றத்துக்குச் சென்ற பெண்ணைப் பலர் பார்க்க பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற வரலாறு நமக்கு இருக்கிறது.

பெண்ணைச் சக உயிராக மதிக்கத் தெரியாத, பெண்ணைப் பண்டமாக மட்டுமே பார்க்கிற கீழான சிந்தனையின் வெளிப்பாடுதான் பெண்கள் மீதான வன்முறையாக வெடிக்கிறது. இருந்தபோதும், வன்முறையை நிகழ்த்துகிறவர்களின் பின்புலத்தையும் சேர்த்தே கணக்கில்கொண்டுதான் நாம் சிக்கல்களை அணுக வேண்டும். பாலினப் பாகுபாட்டைக் களைவது மட்டு மல்ல, இதற்கான தீர்வு. நேர்மையாக நடத்தப்படும் விசாரணையும் விரைந்து கிடைக்கிற நீதியுமே வன்முறைகளைப் பெருமளவு குறைக்கும். பெருந்தொற்றுக் காலத்திலும் சற்றும் குறையாத வன்முறை என்னும் நிரந்தர நோய்த்தொற்றை நீக்க நாம் போராடித்தான் ஆக வேண்டும். காரணம், நாம் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கும் அனைத்துமே போராட்டத்தின் பலனாகப் பெற்றவையே. அழுதால் வராது நீதி என்கிறபோது, இடைவிடாத போராட்டத்தைக் கைகொள்வதுதானே ஒரே தீர்வாக இருக்கும்.

கட்டுரையாளர், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x