Last Updated : 04 Oct, 2020 09:20 AM

 

Published : 04 Oct 2020 09:20 AM
Last Updated : 04 Oct 2020 09:20 AM

தயக்கம் போக்கும் உதவி

மார்பகப் புற்றுநோயால் மார்பை நீக்க வேண்டிய அவசியம் ஏற்படும்போது, உடல் ரீதியாகப் பாதிக்கப்படுவதைவிட உளவியல்ரீ தியாகத்தான் பெண்கள் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். மார்பகத்தை அகற்றியபிறகு, வசதி உள்ளவர்கள் மார்பக மறு சீரமைப்பு அறுவைசிகிச்சை செய்து கொள்கின்றனர். சிலர் செயற்கை யான சிலிக்கான் மார்பகங்களைப் பொருத்திக்கொள்கின்றனர்.

இதுபோன்ற வசதியும் வாய்ப்பும் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஆடைபோன்று எளிதாக அணிந்துகொள்ளும் வகையில் நூலால் ஆன செயற்கை மார்பகங்களைத் தயாரித்து, 2018 முதல் இலவசமாக வழங்கி வருகின்றனர் ‘சாயிஷா' தன்னார்வ அமைப்பினர்.

அந்த அமைப்பின் நிறுவனர் ஜெய்ஸ்ரீ கூறும்போது, “நூலால் ஆன மார்பகங்களை அணிந்து கொண்ட பிறகு வெளித்தோற்றத்தில் வேறுபாடு தெரியுமோ என்கிற சங்கடம் இல்லாமல் இயல்பாக இருக்கலாம். மிருதுவான நூலால் உருவாக்கப்படுவதால், இவற்றைத் துவைத்து ஒன்றரை ஆண்டுகள் முதல் இரண்டு ஆண்டுகள்வரை பயன்படுத்தலாம். இதனால், தோலுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. பெண்களின் உடல் அமைப்புக்கு ஏற்ப வெவ்வேறு அளவு, நிறங்களில் நூலால் மார்பக வடிவத்தில் உருவாக்கி அளிக்கிறோம். எங்கள் அமைப்பில் தற்போதுவரை நாடு முழுவதும் 150 தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். அவர்களில், சிலர் ஏற்கெனவே மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் மூலம் இதுவரை 1,650 நூல் மார்பகங்களைத் தயாரித்து வழங்கியிருக்கிறோம்” என்றார்.

வீட்டுக்கே விநியோகம்

‘சாயிஷா’ அமைப்புடன் இணையும் தன்னார்வலர்களுக்கு நூலால் மார்பகம் தயாரிக்கத் தேவையான ஆலோசனை களையும் வழிகாட்டுதல்களையும் அளிக்கின்றனர். பின்னர், இதற்குத் தேவையான நூல் உள்ளிட்ட பொருட்களைத் தன்னார்வலர்கள் தங்கள் சொந்தச் செலவில் வாங்கி, நேரம் கிடைக்கும்போது வீட்டில் இருந்தபடியே செய்துகொடுக்கின்றனர். தன்னார்வலர்கள் தயாரித்து அனுப்பும் மார்பகங்கள் சரிபார்க்கப்பட்டு, தேவையான வர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

அனுப்பிய பிறகு அதை அணிந்துகொள்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கைபேசியில் தொடர்புகொண்டால் விளக்கம் அளிக்கின்றனர். இதுபோன்ற மார்பகம் தேவைப்படுவோர், தன்னார்வமாக செய்துதர விருப்பம் உள்ளவர்கள், மார்பகப் புற்றுநோயாளிகளுக்கு மனநல ஆலோசனை வழங்குபவர்கள் ஆகியோர் இந்த அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீவித்யா (9840462708), ஜெய்ஸ்ரீ (9820042953) இருவரையும் தொடர்புகொள்ளலாம். கூடுதல் விவரங்களை www.saaishaindia.org என்கிற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x