Published : 30 Aug 2020 07:59 AM
Last Updated : 30 Aug 2020 07:59 AM

சட்டமும் துணை: குடும்பச் சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டு

ப.சு.அஜிதா

‘பெண் குழந்தை பிறந்தாலே செலவு' என்று நினைக்கிற சமூகத்தில் பெண்ணுக்குச் சொத்தில் உரிமையை எதிர்பார்ப்பதெல்லாம் பெருங்கனவாக இருந்தது. ஆஸ்தியே இல்லையென்றாலும்கூட, அதை ஆள்வதற்கு ஆண் குழந்தை வேண்டுமென்று எண்ணி அடுத்தடுத்துப் பெண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறவர்களும் நம்மிடையே உண்டு. இப்படியான சங்கடங்களில் இருந்து பெண்களை மீட்டு, குடும்பத்தில் அவர்களுக்கென்று உரிமையை ஏற்படுத்தித்தரும் விதத்தில் சீர்திருத்தப்பட்டதுதான் ‘பெண்ணுக்கான சொத்துரிமைச் சட்டம்'.

திருமணத்தின்போது பெண்களுக்குச் சீர்செய்வ தாலும் நகைகளைப் போடுவ தாலும் பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் பெரும்பாலான குடும்பங்கள் பங்கு தருவதில்லை. அது பூர்விகச் சொத்தாக இருந்தால், கேட்கவே தேவையில்லை. தாத்தா சொத்து பேரனுக்கு என்று ஒரே வரியில் முடித்துவிட்டுப் பேத்தியைக் கைகழுவிவிடுவார்கள். இந்த நிலையில் பூர்விகச் சொத்தில் பெண்களுக்கு உரிமை உண்டு என்று 2005-ல் சட்டம் வந்தது. அதன் அடிப்படையில், 2020 ஆகஸ்ட் 11 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பெண்களின் சொத்துரிமை குறித்த விவாதங்களில் பெண்களுக்குச் சாதகமாக சில விடைகளை அளித்திருக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அப்துல் நசீர், எம்.ஆர்.ஷா ஆகியோரைக் கொண்ட அமர்வு ‘வினிதா சர்மா எதிர் ராகேஷ் சர்மா மற்றும் பலர்' என்ற வழக்கில் இந்துப் பெண்களுக்குப் பரம்பரைச் சொத்தில் பங்கு உண்டு என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சில தடைகளை நீக்கித் தீர்ப்பளித்திருக்கிறது.

பெண்ணும் குடும்ப உறுப்பினரே

‘பெண்களுக்கான சொத்துரிமை சீர்திருத்தச் சட்டம் 2005'-ன்படி பெண்களும் தங்கள் குடும்பத்தின் ‘பங்காளிகளே’ என்றும் ஒருவேளை தந்தை 9/9/2005-க்கு முன்னரே காலமாகிவிட்டிருந்தாலும் தங்கள் பிறப்பின் காரணமாகவே பெண்கள் குடும்பத்தில் பங்காளிகள் ஆகிறார்கள் என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருக்கின்றனர். பெரும்பாலான குடும்பங்களில் ‘வாய்மொழிப் பாகப்பிரிவினை' என்ற பெயரில் பெண்களுக்கு இழைக்கப்பட்டுவந்த அநீதிக்கும், இந்தத் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்தி ருக்கிறது. பாகப்பிரிவினை வழக்குகளில் முதல் நிலைத் தீர்ப்பு தரப்பட்டிருந்தாலும் இறுதித் தீர்ப்பில் பெண்களுக்கும் சேர்த்தே பாகப்பிரிவினை செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதன்படி இன்றுவரை நிலுவையில் இருக்கும் வழக்குகளைக் கையாள்வது குறித்தும் இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், வாய்மொழி பாகப் பிரிவினை இந்து கூட்டுக் குடும்பங்களில் சட்டப்படி ஏற்புடையது என்றபோதும், பெண்களுக்குச் சொத்தில் பங்கு தரக் கூடாது என்ற எண்ணத்தில் பல குடும்பங்கள் செயல்படுவதால், அதற்கும் இந்தத் தீர்ப்பு ஒரு வழியைச் சொல்லியி ருக்கிறது. சிலர் தங்கள் பெண்களிடம் வாய்மொழியாகப் பாகப்பிரிவினை நடந்துவிட்டதாகக் கூறி, மகன்களுக்கு மட்டும் சொத்தைப் பிரித்துக்கொடுத்து விடு வார்கள். தாங்கள் விரும்பும் வகையில் சொத்தைப் பிரித்துக்கொடுப்பது என்பது தந்தையின் சுயசம்பாத்திய சொத்துக்கு மட்டுமே பொருந்தும். பரம்பரைச் சொத்துக்கு இந்த நடைமுறை செல்லாது. திருமணம் ஆன பெண்ணோ ஆகாத பெண்ணோ, பரம்பரைச் சொத்தில் பங்கு என்பது அவர்களின் பிறப்புரிமை எனவும் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சொல்கிறது.

பரம்பரைச் சொத்தில் பெண்களுக் கான சொத்துரிமையை மறுப்பதை ஏற்றுக்கொள்ளக் கூடாது எனவும் பாகப்பிரிவினை பதிவுசெய்யப்பட வேண்டும் என்றும் சட்டம் உள்ளது. மேலும், வாய்மொழியாகப் பிரிக்கப்பட்ட பாகங்களின் உடைமையாளர்களின் பெயர்கள் அரசு ஆவணங்களில் மாற்றப்பட்டு உண்மையாகவே பாகப் பிரிவினை நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். இப்படி வாய்மொழிப் பாகப்பிரிவினை நடந்ததாகக் கூறுவதை நீதிமன்றங்கள் பரிசீலித்த பின்னரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம் கூறுகிறது.

பழைய நடைமுறை செல்லாது

‘பிரகாஷ் எதிர் புலாவதி' என்கிற வழக்கில் உச்ச நீதிமன்றம் பெண்களுக்கான சொத்துரிமை நடைமுறைக்கு வந்த நாளான 9/9/2005 அன்று தந்தையும் பங்குகோரும் மகளும் உயிருடன் இருந்தால் மட்டுமே பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் பங்கு உண்டு என்கிற உரிமை உறுதிப்படுத்தப்படும் என்று ஏற்கெனவே தீர்ப்பளிக்கப் பட்டிருந்தது. ஒரு பெண் அந்தக் குடும்பத்தில் பிறந்ததால், பிறப்பின் மூலமாகவே சொத்தில் பங்குதாரராக ஆகிறார் என்றும், தந்தை உயிரோடு இருந்தால்தான் பெண்ணின் பங்கு உறுதியாகிறது என்ற கருத்து தவறானது என்றும் உச்ச நீதிமன்றம் தற்போது குறிப்பிட்டிருக்கிறது.

தமிழகம் முன்னோடியே

இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் 1989-ம் ஆண்டு தமிழகத்தில் ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்பே ஆந்திரம் 1986-ல் இதே போன்ற ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. பின்னர் கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் 2005-க்கு முன்பே மாநிலத் திருத்தங்கள் அமலுக்கு வந்ததாக அறியப்பட்டது. தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தமானது பென்களுக்கு மூதாதை சொத்தில் பங்குண்டு என்றாலும் 26/03/1989-க்கு முன்பு திருமணமான பெண்களுக்கு அது பொருந்தாது எனக் கூறியது.

தமிழகத்தில் இந்தச் சட்டம் 1989-ல்நடைமுறைக்கு வந்ததால் அந்த ஆண்டுக்கு முந்தைய வழக்கு களுக்கு இந்தத் தீர்ப்பு செல்லாது. அதாவது 1989-க்கு முன்னரே பாகம்பிரிக்கப் பட்டுவிட்டால் பெண்ணுக்கு அதில் உரிமை இல்லை. அப்படிப் பிரிக்காத சொத்தில் பங்கு கேட்க மகள் உயிருடன் இல்லை என்கிறபோது அவருடைய வாரிசுதாரரான மகள்/மகள் உள்ளிட்டோருக்குப் பங்கு உண்டு.

நடைமுறையில் திருமணமாகாத பெண் தனது குடும்பச் சொத்தைப் பாகம் பிரித்துத்தர வேண்டும் என்று கோர முடியாது. நம் சமூகத்தில் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்தல் என்பது சமூக அந்தஸ்து, பொருளாதாரம், பாதுகாப்பு ஆகிய வற்றை உள்ளடக்கியது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே, 1989 – 90-களில் திருமணத்துக்கு முன்னரே மகள்களிடம், ‘விடுதலைப் பத்திரம்’ எழுதி வாங்கும் குடும்பங்கள் பெருகின. மகள்களோடு மகன்களுக்குச் சொத்து பிரிக்கப்படுவது நியாயமானது, சமத்துவமானது என்று கருதிய குடும்பங்கள் மட்டுமே பெண்களுக்கான சுதந்திரம், கல்வி, வேலைசெய்வதற்கான ஒப்புதல் போன்ற பெண்களின் அடிப்படை உரிமைகளையும் உத்தரவாதப் படுத்தின.

ஆனால், பெண்களைத் திருமணம் செய்துகொடுப்பதே பெருஞ்சுமையாக நினைத்து பெரும் விலை கொடுத்து திருமணச் சந்தையில் பெண்களை மணம்முடித்த குடும்பங்கள் ஆண்களுக்குச் சமமாகப் பெண்களுக்குச் சொத்துகளைத் தருவதில்லை. அதையும் மீறி வழக்கு களைத் தொடுத்தாலும் சட்டத்தில் உள்ள வாய்ப்புகளைக் கொண்டு பெண்களுக்குச் சொத்து கொடுக்க மறுப்பதும் நடந்துவந்தது. இந்த நிலையை மாற்றியமைக்கும் விதமாகத் தற்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. பெண்களுக்கான சொத்துரிமை விஷயத்தில் பெண்களின் நிலை ஓரடி முன்னால் சென்றுள்ளது. அந்த வகையில் பெண்களுக்கு உற்சாகம் அளிப்பதுடன் அவர்களின் உரிமையை உறுதிப்படுத்தும் தீர்ப்பாகவும் இது இருக்கிறது. எனவே, குடும்பத்தில் சொத்துரிமை மறுக்கப்படும்போது பெண்கள் தங்கள் உரிமையை விட்டுத்தரக் கூடாது. அதற்கேற்ப கல்வி - மற்ற விஷயங்களில் பெண்கள் தங்களை அதிகாரப்படுத்திக்கொள்வதுதான், இந்தச் சொத்துரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வழிவகுக்கும்.

கட்டுரையாளர், வழக்கறிஞர்.

தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x