Published : 02 Aug 2020 09:20 AM
Last Updated : 02 Aug 2020 09:20 AM
ப்ரதிமா
யாரேனும் நம்மை மீட்டுவிட மாட்டார்காளா எனத் தவம்கிடப்பதைவிட நம்மை முடக்கிவைத்திருக்கும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து நம்மை மீட்பதே சிறந்தது. ஆர்த்தி டோக்ராவும் அதைத்தான் செய்தார்.
மூன்றரை அடி உயரமிருக்கும் பெண்ணால் வாழ்க்கையில் எந்த உயரத்தையும் அடைய முடியாது என்று நினைத்தவர்களின் பிற்போக்குத் தனத்தைத் தன் வானுயர்ந்த வெற்றியின்மூலம் மாற்றியிருக்கிறார் ஆர்த்தி. காவலர்கள் சூழ கம்பீரமாக நடந்துவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆர்த்தி, உடலாலும் மனத்தாலும் குறைபட்டுப்போன எத்தனையோ பேர் வெளிச்சத்தை நோக்கி நகரக் காரணமானவர்.
புரிந்துகொண்ட பெற்றோர்
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் பிறந்தவர் ஆர்த்தி. அப்பா ராஜேந்திர டோக்ரா, இந்திய ராணுவத்தில் கர்னலாகப் பணியாற்றியவர். அம்மா கும்கும், பள்ளித் தலைமையாசிரியர். வளர்ச்சிக் குறைபாடு இருப்பதால் ஆர்த்தியால் பொதுப்பள்ளியில் படிக்க முடியாது என்று சொன்ன மருத்துவர்கள் அவரைச் சிறப்புப் பள்ளியில் சேர்க்கச் சொன்னார்கள். ஆனால், எந்தவிதத்திலும் தங்கள் மகளின் திறமையைக் குறைத்து மதிப்பிட விரும்பாத அந்தப் பெற்றோர் ஆர்த்தியைப் பொதுப்பள்ளியிலேயே சேர்த்தனர். பெற்றோரின் நம்பிக்கை பொய்க்கவில்லை. பள்ளி, கல்லூரிப் படிப்பை மிகச் சிறந்த முறையில் முடித்தார் ஆர்த்தி. முதல் முயற்சியிலேயே இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றிபெற்றார்.
அதிகாரத் தோரணையும் மிடுக்கும் கொண்டவர்களையே ஆட்சியராகப் பார்த்துப் பழகியவர்களுக்கு ஆர்த்தியின் வருகை ஆச்சரியமாகவும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருந்தது. பெரும்பாலான முடிவுகள் புறத்தோற்றத்தையும் உருவத்தையும் வைத்துத்தானே கட்டமைக்கப்பட்டி ருக்கின்றன? ஆனால், திறமை மட்டுமே வெற்றிக்கான தகுதி என்பதை நிரூபித்த ஆர்த்தி, ‘ஜோத்பூர் டிஸ்காம்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். இப்படியோர் உயர்ந்த பதவியில் அமர்ந்த முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற பெருமையைப் பெற்றார் ஆர்த்தி. கடனே என்று செயல்படாமல் கடமையை உணர்ந்து செயல்பட்ட ஆர்த்திக்கு மத்திய, மாநில விருதுகள் வழங்கப்பட்டன.
தேர்தல் சாதனை
பிறகு அஜ்மீர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டவர், 2018 ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலின்போது மாவட்டத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மக்கள் அனைவரும் சமம் என்றாலும் அவர்களது உடல்குறைபாட்டையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்தார் ஆர்த்தி. அதனால்தான் அந்தத் தேர்தலின்போது மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக வாகனங்கள், மூன்று சக்கர நாற்காலிகள், உதவியா ளர்கள் எனச் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துதந்தார். இதனால், 17,000 மாற்றுத்திறனாளிகள் அந்தத் தேர்தலில் வாக்களிக்க முடிந்தது. ஆர்த்தியின் இந்தப் பணியைப் பாராட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கிக் கவுரவித்தார். முதல்வர் அசோக் கெலாட், தன் ட்விட்டர் பக்கத்தில் ஆர்த்தியின் சாதனை குறித்து குறிப்பிட்டுத் தன் வாழ்த்தைத் தெரிவித்திருந்தார்.
தற்போது ராஜஸ்தான் முதல்வரின் இணைச் செயலாளராகச் செயலாற்றி வரும் ஆர்த்தி, தன் உயரக் குறைபாடு காரணமாகப் பள்ளி நாட்களிலிருந்தே அவமானத்தையும் புறக்கணிப்பையும் எதிர்கொண்டவர். ஆனால், எது தன்னைப் பாதிக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். உடல் குறைபாடெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று நினைத்தவர் கல்வி மட்டுமே தன்னை அனைத்திலிருந்தும் மீட்டுவிடும் என்பதைப் புரிந்து கொண்டார். அறிவையும் திறமையையும் பெருக்கிகொண்டார். அது அவருக்கு வெற்றியின் வாயில்களைத் திறந்து விட்டபடி இருக்கிறது.
இப்போதும்கூடத் தன் தோற்றத்தை வைத்து யாராவது கேலியாகப் பேசக்கூடும் என்பதை ஆர்த்தி உணர்ந்தே இருக்கிறார். ஆனால், அது பேசுகிறவர்களின் சிக்கல்தானே தவிர வாழ்க்கையில் தான் அடைந்திருக்கும் உயரத்தை அந்தப் புறணியால் ஒன்றும்செய்துவிட முடியாது என்கிற உறுதியுடன் இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT