Published : 02 Aug 2020 09:20 AM
Last Updated : 02 Aug 2020 09:20 AM
சங்கர் வெங்கட்ராமன்
‘திருமதி ஒய்.ஜி.பி.’ என்று அனை வராலும் அன்பாக அழைக்கப்பட்ட ராஜலக்ஷ்மி அம்மையார் கல்வி யாளராகவும் கலா ரசிகராகவும் வாழ்வாங்கு வாழ்ந்தவர்.
1925 நவம்பர் 27 அன்று ஆர்.பார்த்த சாரதி, அலமேலு அம்மாள் தம்பதிக்கு மகளாகப் பிறந்தார் ராஜலக்ஷ்மி. திருச்சி செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி பள்ளியில் படித்து, ஹோலிகிராஸ் கல்லூரியில் உயர்கல்வி பெற்றார். வயலின் மேதை மருங்காபுரி கோபாலகிருஷ்ண அய்யரின் சீடர் ராஜாராமனிடம் வயலின் வாசிக்கக் கற்றுக்கொண்டார்.
நாடக மேதை ஒய்.ஜி.பார்த்த சாரதியை மணந்த பிறகு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பிரிவில் பட்டம் பெற்றார். புகுந்த வீடும் இசை, நாட்டியம், நாடகத் துறை சார்ந்த கலைஞர்கள் சங்கமிக்க எப்போதும் கலகலவென இருக்கும்.
லேடீஸ் கிளப்பின் உருமாற்றம்
அந்தக் காலத்தில் பிரபலமாக விளங் கிய ‘நுங்கம்பாக்கம் மாதர் சங்கம்’ ராஜ லக்ஷ்மி வசித்துவந்த வீட்டின் மொட்டை மாடியில்தான் நடந்தது. அதன்பின் கணவரது ஆலோசனைப்படி, அதைப் பள்ளிக்கூடமாக மாற்றினார். சென்னை மாநகரத்தின் அப்போதைய மேயர் தாரா செரியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பள்ளியைத் தொடங்கிவைத்தார். 13 மாண வர்களுடன் தொடங்கப்பட்ட அந்தச் சிறிய பள்ளிதான் இன்று பரந்துவிரிந்திருக்கும் ‘பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி’யாகி இருக்கிறது.
2000-ம் ஆண்டு ஜூனில் ‘Sri Ramanuja – His Socio Religious Thought’ என்ற ஆய்வுக்கு சென்னைப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியபோது, ராஜ லக்ஷ்மிக்கு 75 வயது. கல்வி கற்க வயது ஒரு தடையே அல்ல என்பதை அவர் நிரூபித்தார்.
கலை இயக்கம்
செம்மங்குடி சீனிவாச அய்யர் குத்து விளக்கேற்றித் தொடக்கிவைத்திட 1987-ல் ராஜலக்ஷ்மியால் தொடங்கப் பட்டது ‘பாரத் கலாச்சார்’ என்ற கலை இயக்கம். செம்மங்குடி சீனிவாச அய்யர், 'கல்விக்கும் கலைக்கும் பாலமாக இருக்கும், ராஜலக்ஷ்மி ஒரு கலாச்சாரத் தூதர்' என்று பாராட்டியிருக்கிறார்.
2010-ல் ராஜலக்ஷ்மியின் கல்விப் பணியைப் பாராட்டி மத்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருதை அவருக்கு வழங்கியது. 2012-ல் தமிழக அரசு ‘அவ்வையார்’ விருது வழங்கிச் சிறப்பித்தது.
(ஆகஸ்ட் 6: திருமதி. ஒய்.ஜி.பி.யின் முதலாமாண்டு நினைவு நாள்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT