Published : 26 Jul 2020 09:56 AM
Last Updated : 26 Jul 2020 09:56 AM
இப்படியோர் ஊரடங்கை, உள்ளிருப்பை, உள்ளும் வெளியும் தள்ளி இருத்தலை, சுய பராமரிப்பு மேற்கொள்வதை எந்தத் தலைமுறை சந்தித்திருக்கும் என்று தெரியவில்லை. இந்த உள்ளிருத்தலின்போதுதான், அதுவும் பத்துப் பதினைந்து நாட்கள் கழித்துத்தான், அதுவும் வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் ஆற்றுப்படுத்துவது எப்படி என்பதை அறிந்த பிறகுதான் சிரித்தவர்களுக்குச் சிரிப்பு, சிரிக்காதவர்களுக்கும் சிரிப்பு என எல்லோரையும் ஆசுவாசப்படுத்திய பின்பு, என் சம்பளம் வந்துவிட்டது என்ற நிம்மதியுடன் இருந்த அந்த நாளில்தான், என்னை நானே கண்ணாடியில் பார்த்தேன்.
என் முகத்தில் ஏன் இத்தனை சுருக்கங்கள், என் தோலில் செல்கள் இறந்துவிட்டனவா, நான் உயிரோடுதான் இருக்கிறேனா, கண்கள் ஏன் இப்படி ஒளியற்று இருக்கின்றன, கண்களுக்குள் சிறு கறையா, சதையா? மிகச் சிறிய ரத்தத் திட்டு. இது எப்போது உருவானது? நெற்றியில் எத்தனை கோடுகள், சுருக்கங்கள்? முகம் தளர்ந்து தொங்கிவிட்டது, கன்னங்கள் ஒட்டி வறண்டுள்ளன, உயிர்ப்பில்லாப் புன்னகை கொண்ட காய்ந்த இதழ்கள் நிறம் மாறிவிட்டன. என் கூந்தலில் பாதிக்கு மேல் என்னிடமிருந்து உதிர்ந்துவிட்டன. திடமற்ற, சத்தற்ற இம்முடிகள் பிறர் நகைக்கும் வகையில் எலிவால்போல் நீண்டிருக்கின்றன. நெற்றி ஏறிவிட்டது. முன்புறம் சற்றுக் குனிந்து பார்த்தால்தான், முடி இருப்பதே தெரிகிறது.
பகிர்ந்துகொள்ளாத புலம்பல்கள்
கழுத்தின் பக்கவாட்டில் வீங்கி இருக்கிறது. நிணநீர் சேர்தல், சளி, தைராய்டு என நானே எனக்கான நோயைக் கண்டறிகிறேன், பெயரிடு கிறேன், மருத்துவரிடம் செல்லும் நாளை மட்டும் தள்ளித்தள்ளிப் போடுகிறேன். வறுமை வாட்டியதைப் போல் கழுத்தெலும்புகள் துருத்தி நிற்கின்றன. அடடா, என் கனவுகள் சரிந்து கிடக்கின்றன இந்தத் தொங்கிய மார்பகங்கள்போல். இவற்றின் பயன்பாடு தீர்ந்துகொண்டிருக்கிறதா? கைகள் சூம்பியது போல் இருக்க, வயிறு மட்டும் ஏன் இவ்வளவு பெரிதாக மேடிட்டு இருக்கிறது? இது தொப்பை இல்லை. நீண்ட நாளாக வயிறு கல்லாகத்தான் இருக்கிறது.
சாப்பிடக்கூட நேரத்தைக் கண்டடைய முடிகிறது. குளிப்பதற்கும் மலம் கழிப்பதற்குமான நேரத்தைத்தான் கண்டடைய முடிவதில்லை. சரியாகச் சாப்பிடுவதில்லை. ஆனாலும், சில நேரம் மிஞ்சிய எல்லாவற்றையும் சாப்பிட்டு விடுகிறேன். மாதவிலக்கு நிற்கப்போகிறது போலிருக்கிறது. ஓராண்டாகப் படாத வேதனை, இப்போது. உடல் திடீரென்று எரிகிறது. மயக்கம், படபடப்பு, எரிச்சல், கோபம், மறதி, தனிமை ஏற்படுத்தும் பயம். இதையெல்லாம் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் இருக்கிறேனே, இந்த உணர்வுகள்தாம் வயிற்றில் கட்டியாக ஆகி விட்டனவோ? இல்லை, ஏதாவது புற்றுநோயோ?
என்னைத் தொலைத்துவிட்டேன்
இரண்டு கால்களில் ஒன்றுகூடச் சரியில்லை. நகங்களில் சொத்தை, பாதங்களில் பித்த வெடிப்பு. இது நானா? இந்தக் கண்ணாடியில் தெரிவது நானேதானா? உண்மை இவ்வளவு கூர்மையானதா? வலிமையாகத் தாக்குகிறது. உண்மைதான், நான் தொலைந்துவிட்டேன். என்னைத் தொலைத்துவிட்டேன். வெளியே இவ்வளவு சிதைந்திருக்கும் இந்த ஓவியம், உள்ளுக்குள் எவ்வளவு சிதைந்திருக்கும்? என் மூளை சரியாக இயங்குகிறதா? நான்தான் யோசிப்பதே இல்லையே.
வேலை செய்யாமலேயே அது வீணாகிப் போயிருக்குமோ? என்னால் எதையும் சரியாகப் பார்க்க முடியவில்லை. காதும் மந்தம் ஆகிவிட்டதோ? இதயம் மட்டும் எனக்கு வளர்ந்து கொண்டிருக்கிறதுபோல. என் உடலில் அதிகமாக இயங்குவது அதுதான். எப்போதும் துடித்துக்கொண்டே இருக்கிறது. இரவு படுக்கப்போகும்போதுகூட, காலையில் சீக்கிரம் எழ வேண்டும் எனத் துடிக்கிறது. பகல் முழுவதும் ‘லப்டப்’ என்று ஒலிப்பதில்லை, ‘படபட’வெனும் படபடப்பு மட்டும்தான் இருக்கிறது.
எனக்குக் கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் போன்றவை இருக்கின்றனவா? யோசித்ததே இல்லை. கருப்பை இருப்பதை, ஒரு மாதத்துக்குள்ளாகவே நாள் தவறி வந்துவிடும் பெரும்போக்கு சொல்லிவிடுகிறது.
யாரைக் காதலிப்பது?
இவ்வளவுக்கும் நடுவே எனக்குக் காதல் எங்கே இருக்கும்? யார் மீதும் அல்ல, என் மீதுதான். நான் என்னைக் காதலிப்பதை மறந்து பல்லாண்டுகள் ஆகின்றன. எனக்கு வயது நாற்பதுக்கு மேல் ஆகிறது. ஓடிக்கொண்டே இருக்கிறேன், வீட்டில் எல்லோரது தேவைகளையும் கைகளில் ஏந்தி நிற்கிறேன். அலுவலகம் வருமானம் கொடுக்கிறது. பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அந்த வேலையை நான் விழுந்துவிழுந்து செய்வதைப் பார்த்து, என்னை நானே பலமுறை பாராட்டிக்கொண்டிருக்கிறேன். நான் விழுந்தபோதெல்லாம், தொலைந்து இருந்தது என் ஆளுமைதான் என்பது எனக்கு உரைக்கவில்லை.
எவ்வளவு ஓடினாலும் நான் என்னைத் தூக்கிக்கொண்டு மருத்துவ மனைக்கு மட்டும் செல்வதில்லை. ஏன் இப்படி? யாராவது என்னைப் போக வேண்டாம் என்று தடுத்தார்களா, நேரம் இல்லையா, விடுமுறை எடுத்துக்கொள்ளக் கூடாதா, விடுமுறை நாட்களில் செல்லக் கூடாதா?
யாருக்காக ஓடுகிறேன்?
எனது ஓட்டத்தை எங்கே நான் நிறுத்துவது? எனது ஒவ்வொரு நாளின் பயணத்திட்டத்தில் ஒரு நாழிகையைக்கூட எனக்காகக் கண்டடைய முடியவில்லை. எனது வீட்டின் அடுப்பு எரிந்துகொண்டே இருக்கிறது. நான் பிறரது பசியாற்றிக்கொண்டே இருக்கிறேன். ஒரு பெண்ணைச் சரியாகப் பதிலீடு செய்வதற்கு, எந்த இயந்திரமும் இங்கே கண்டுபிடிக்கப்படவில்லை. வீட்டின் சில்லறை வேலைகளுக்காகத்தான் பெண் பெரிதாகத் தேடப்படுகிறாள். சில்லறை வேலைகள் சேர்ந்து சேர்ந்து என்னை மூழ்கடித்துவிட்டன.
நான் வருமானம் ஈட்டுகிறேன். அது எனக்காக என நான் எப்போதும் உணர்ந்ததில்லை. சில விளம்பரங்கள், சில பட்டிமன்றங்கள், சில வாட்ஸ்அப் செய்திகள், ‘பெண்களும் நகைகளும்’, ‘பெண்களும் புடவைகளும்’ எனச் சிறுமைப்படுத்துகின்றன. இது பெண்மீது நிகழ்த்தப்படும் இன்னொரு வகையான வன்முறை, அபாண்டமான பழிசுமத்துதல். எனது சட்டை எனக்கு வேண்டிய அளவைவிடச் சிறியதாக இருக்கிறது. ஆனால், புடவை எனக்கு வேண்டாத வகையில் பெரிதாக இருக்கிறது. முரண்பாடுகள்தாம் என்னைச் சுற்றியுள்ளன. அவை உங்களுக்குப் புரியுமா? நகைகளை நான் அணிவதைவிடவும், அவை அடகுக் கடைகளில் இருந்த நேரமும் மகளுக்கு, மருமகளுக்கு எனக் காத்திருந்த நேரமும்தான் அதிகம்.
எதையும் இழக்கத் தேவையில்லை
யாரோ ஒருவர் மிக எளிதாக விமர்சிக்கலாம், இத்தனை சிரமங்கள் இருக்கும்போது, பெண்களுக்கு ஏன் கல்வி, எதற்கு வேலை என்று. அலுவலகம், வீடு ஆகிய இரண்டும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏன் சமமாக இருப்பதில்லை என்ற கேள்வியைத்தான் உங்கள் பணிவான கவனத்துக்குக் கொண்டுவர வேண்டியிருக்கிறது. இங்கே எல்லாம் மாறிவிட்டன. தொழிற்சாலைகள், பள்ளிக் கூடங்கள், திரையரங்குகள், பெரிய கடைகள், அலுவலகங்கள் எல்லாம் மூடப்பட்டுள்ளன. அவரவர் தனித்து இருக்கிறோம்.
இந்த நேரம்தான் என்னை நான் பார்க்கிறேன். என்னில்தான் எத்தனையெத்தனை இழப்புகள்! விழியோரத்தில்கூடக் கனவுகளின் ஈரமில்லாத ஒருத்தியாகிவிட்டேன். என்னை நேசிப்பதை, நான் இழந்துவிட்டேன். என்னைக் காதலிப்பதை, நான் இழந்துவிட்டேன். எனக்கு மரியாதை தருவதை, நான் இழந்துவிட்டேன். என்னை உணர்வதையே, நான் இழந்துவிட்டேன். இதையெல்லாம் இழந்து எதைப் பெறப் போகிறேன், எதை மீட்கப்போகிறேன் என்றுதான் தெரியவில்லை. நன்றி கரோனா, நீ வந்துசேர்ந்ததற்கு.
நான் என்னை நேசிக்கத் தொடங்க வேண்டும். நான் என்னைக் காதலிக்கப்போகிறேன். இனி எனக்கு நான் மரியாதை தருவேன். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, என்னை நான் மெதுவாக இப்போதுதான் உணரத் தொடங்கியுள்ளேன்.
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: nerkunjam@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT