Published : 12 Jul 2020 09:27 AM
Last Updated : 12 Jul 2020 09:27 AM

கரோனா காலம்: துயரத்தை மட்டுமே சுமக்கும் தூய்மைப் பணியாளர்கள்

கரோனா காலத்தில் நாம் நலமாக இருப்பதற்காக நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரித்துவரும் தூய்மைப் பணியாளர்கள் நலமாக இருக்கிறார்களா என்ற கேள்விக்கு எதிர்மறைப் பதிலைத்தான் பெரும்பாலும் பெற முடிகிறது. சென்னை போன்ற பெருநகரில் சுகாதாரக் களப்பணியாளர்கள் நாள்தோறும் நூற்றுக் கணக்கான வீடுகளுக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்கிறார்கள். உடல்நிலை சரியில்லை என்றாலும் விடுப்பு எடுக்க முடியாத நிலையில் பலர் பணிக்குத் தொடர்ந்து சென்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

நிவாரணமும் இல்லை நிம்மதியும் இல்லை

துப்புரவுப் பணியில் ஈடுபட்டுவந்த சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த மாநகராட்சி ஊழியர் சங்கர், ஜூன் 11 அன்று கரோனாவால் பலியானார். அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி வாடகை வீட்டில் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்துவருகிறார்.

“கரோனா காலத்தில் நாம்தான் மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று அவர் சொல்லுவார். போன மாசம் அவருக்குக் காய்ச்சல் வந்தது. இரண்டு நாட்களாகக் காய்ச்சல் இருந்ததால் கரோனாவாக இருக்குமோ என சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைக்குச் சென்றோம். ஆனால், அங்கே பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. சாதாரணக் காய்ச்சல்தான் என்று சொல்லி பாரசிட்டமால் மாத்திரை கொடுத்து அனுப்பிவிட்டார்கள். ஆனால், காய்ச்சல் அதிகமாக இருந்ததால் தனியார் பரிசோதனை மையத்துக்குச் சென்று டெஸ்ட் எடுத்தோம். பரிசோதனையில் அவருக்கு கரோனா உறுதியானது.

அடுத்த சில நாட்களில் அவர் இறந்துவிட்டார். பிறகு வீட்டிலிருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. என் பெண்ணுக்கும் கரோனா இருந்தது. அவளை முகாமுக்குக் கொண்டுபோய்விட்டார்கள். வீட்டையும் சீல் வைத்துவிட்டார்கள். கணவரை இழந்த நிலையில் ஆறுதல் சொல்லக்கூட யாரும் இல்லாமல் நான் மட்டும் தனிமையிலிருந்த நாட்கள் மிகக் கொடுமையானவை.

தனிமையிலிருந்தபோது ஏதாச்சும் செய்துகொள்ளலாம் என்றுகூடத் தோன்றியது. நானும் போயிட்டா பொண்ணுங்க என்ன செய்வாங்கன்னுதான் எல்லாத்தையும் தாங்கிக்கிட்டேன். என் கணவர் கரோனாவால் உயிரிழந்தால் நிவாரணம் தருவதாகச் சொன்னாங்க. ஆனால், இதுவரைக்கும் மாநகராட்சி சார்பாக ஒருத்தர்கூட எங்களை வந்து பார்க்கவில்லை. உழைப்பை மட்டுமே நம்பியிருந்த என் கணவரோட உயிர் போனதுதான் மிச்சம்” என வலி நிறைந்த குரலுடன் பேசுகிறார் தமிழ்ச்செல்வி.

மாநகராட்சி பதில் சொல்லுமா?

மாநகராட்சி நிரந்தர ஊழியர்களின் நிலையே இப்படி இருக்க, எவ்விதப் பணிப் பாதுகாப்பும் இல்லாத ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலையோ மிகவும் மோசமாக உள்ளது. சென்னை துறைமுகம் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளி நந்தகுமார். மாதம் ஒன்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக மருந்துத் தெளிப்பு ஊழியராகப் பணியாற்றிவந்துள்ளார். கரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மே 14 அன்று உயிரிழந்தார். அவருடைய குடும்பத்தினர் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் வசிக்கின்றனர்.

“இந்த கரோனா காலத்தில் லீவு போடாமல் வேலை செய்தால்தான், எதிர்காலத்தில் பணி நிரந்தரம் செய்வாங்க என்ற நம்பிக்கையுடன் அவர் வேலைக்குப் போனார். ஆனால், இப்போ அவர் எங்களோடு இல்லை. இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. எத்தனை நாளைக்குத்தான் மற்றவர்கள் உதவுவார்கள்? ஒவ்வொரு நாளையும் வேதனையுடனும் வறுமையிலும் கழித்துவருகிறோம்.

கரோனா பாதிப்பால் நாங்கள் அனைவரும் வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டோம். தனிமைப் படுத்தப்பட்ட மே 3-ம் தேதிதான் என் கணவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பிறகு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நானும் பிள்ளைகளும் தனிமைப்படுத்தப்பட்டதால் மே 7-ம் தேதிதான் என் கணவரைப் பார்க்க முடிந்தது. அப்போது மருத்துவர்கள், கணவரின் உடல்நிலை மோசமாக உள்ளது என்றார்கள். மே 8 நள்ளிரவு அவர் இறந்துவிட்டார்.

அவருடைய சடலத்தைக்கூட எங்களுக்குக் கொடுக்கவில்லை. மாநகராட்சி ஊழியர்களே மயானத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டார்கள். என் மகனுக்குப் பாதுகாப்பு உடை கொடுத்தார்கள். ஆனால், பிணவறைக்குக் கொடுக்கப்பட்ட மருத்துவச் சான்றிதழில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என எழுதியுள்ளனர். என் கணவருக்கு கரோனா இல்லையென்றால் ஏன் எங்களிடம் சடலத்தை ஒப்படைக்கவில்லை? ஏன் மாநகராட்சி ஊழியர்களே அடக்கம் செய்தார்கள்? ஒருவரின் உயிரே போன பிறகு ஏன் இப்படிப் பொய் பேசுகிறார்கள்?” என அழுகையுடன் நந்தகுமாரின் மனைவி வடிவு கேட்கும் கேள்விகளுக்கு யாரிடம் பதில் இருக்கிறது?

மனைவி தமிழ்ச்செல்வியுடன் சங்கர்

கேள்விக்குறியாகும் ஊழியர்களின் பாதுகாப்பு

தமிழகம் முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் ஐம்பதாயிரத்துக்கும் குறைவானவர்களே நிரந்தர ஊழியர்கள். சென்னையில் உள்ள 22,430 துப்புரவுத் தொழிலாளர்களில் 6,401 பேர் மட்டுமே நிரந்தர ஊழியர்கள். மற்றவர்கள் தற்காலிக, மதிப்பூதிய, ஒப்பந்த ஊழியர்கள். தற்போது வீடுவீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளும் களப்பணியாளர்களாக 13,000 பேரைத் தமிழக அரசு தற்காலிகமாக நியமித்துள்ளது. கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை, களப்பணியாளர் ஒருவருக்கு நாளொன்றுக்கு ஒரு முகக்கவசமும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கையுறையும் வழங்கப்படுவதாக அரசு கூறுகிறது.

ஆனால், பெரும்பாலான ஆண் தூய்மைப் பணியாளர்கள் கைக்குட்டையையும் பெண் பணி யாளர்கள் துப்பட்டாவையுமே முகக்கவசமாக அணிகிறார்கள். மேலும், சிலர் எந்தப் பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் பணியாற்றுகின்றனர். குப்பையை அள்ள வழங்கப்பட்டுள்ள கையுறையை ஒரு நாள் பயன்படுத்தினாலே, அதன் நிலை எப்படியிருக்கும் என்பது நமக்குத் தெரியும். இந்நிலையில் பதினைந்து நாட்களுக்கு ஒரு கையுறை மட்டுமே வழங்கப்படும் நிலையில், அந்தக் கையுறை நோய்த்தொற்றைத் தடுப்பதற்குப் பதிலாக நோய்த்தொற்றின் கூடாரமாக அல்லவா மாறிப்போயிருக்கும். கரோனா நோய்த் தடுப்புப் பணிக்காக சென்னை மாநகராட்சியில் மட்டும் ரூ.300 கோடிவரை செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மனைவி வடிவுடன் நந்தகுமார்

பாதுகாப்பும் நிவாரணமும் தேவை

மாநகராட்சி செலவு செய்ததாகச் சொல்லும் தொகையில் சில லட்சங்களை முறையாகப் பயன்படுத்தியிருந்தாலே தூய்மைப் பணியாளர்களுக்கான முகக்கவசம், கையுறை, சானிடைசர், சோப்பு போன்ற அத்தியாவசியப் பாதுகாப்பு வசதிகளை வழங்கியிருக்க முடியும் என்கிறார் சென்னை மாநகராட்சியின் ‘செங்கொடி சங்க’ப் பொதுச்செயலாளர் பி.சீனிவாசுலு.

இது குறித்துப் பேசிய அவர், “தூய்மைப் பணியாளர்களுக்காகக் கைதட்டினால் மட்டும் போதுமா? இந்தக் கைத்தட்டல், இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ஒரு வேளை உணவைக் கொடுக்குமா? துப்புரவுத் தொழிலாளர்களைப் பாதுகாக்க இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சென்னையில் மட்டும் முப்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை ஒன்பது தூய்மைப் பணியாளர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இத்தனை உயிரிழப்புகளுக்குப் பிறகும் மாநகராட்சியோ அரசோ மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் இதுவரை எத்தனை பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலைக்கூடச் சேகரிக்காமல் அலட்சியத்துடன் உள்ளன.

துப்புரவுத் தொழிலாளர்களின் மரணம் குறித்து சில பத்திரிகைகள் கேள்வியெழுப்பிய பிறகுதான், பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களைத் திரட்டும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. கரோனா தொற்றுத் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால் ரூபாய் இரண்டு லட்சம் வழங்கப்படும், கரோனாவால் இறந்த தொழிலாளர்களுக்கு ரூபாய் ஐம்பது லட்சம் நிவாரணமும், வீட்டில் ஒருவருக்குப் பணியும் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அரசாணை எண் 180 தெரிவிக்கிறது. ஆனால், தற்போதுவரை இந்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட பெரும்பாலான தொழிலாளர்களுக்குக் கிடைக்கவில்லை.

கரோனா நோய்த் தொற்றுக்கு எளிதில் பலியாகும் மாநகராட்சி ஊழியர்களுக்கு அரசு - மாநகராட்சி மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளக் கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்வாகமே இப்படிச் செயல்பட்டால், காற்றில் பரவும் கரோனாவை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? கரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா காலத்தில் பணியாற்றியதைக் கருத்தில் கொண்டு தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவியை வழங்க வேண்டும். கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த தூய்மைப் பணியாளர்களுக்குக் கட்டாயப் பரிசோதனை மேற்கொண்டு, அவர்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்துகிறார் சீனிவாசுலு.

கட்டுரையாளர் தொடர்புக்கு: renugadevi.l@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x