Published : 05 Jul 2020 08:56 AM
Last Updated : 05 Jul 2020 08:56 AM
மேற்படிப்பு காரணமாகப் பிரிந்திருந்த பிள்ளைகளுடன், சேர்ந்திருக்கக் கிடைத்த பெரிய வாய்ப்பாகவே இந்த ஊரடங்கைக் கருதுகிறேன். இரண்டு ஆண்டுகளாகக் காலை ஒரு மணி நேரம் செய்துவரும் யோகா பயிற்சி மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவுகிறது. முன்பு நள்ளிரவுவரை நீ்ண்டிருந்த செய்தித்தாள் வாசிப்பு, இப்போது சிற்றுண்டியுடன் முடிந்துவிடுகிறது. நீண்ட காலமாகப் படிக்க நினைத்திருந்த புத்தகங்களை இப்போது நிதானமாக வாசிக்க முடிகிறது. ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, கி. ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்லபுரத்து மக்கள்’, சுஜாதாவின் ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ போன்றவை அவற்றில் சில.
சென்னை அரும்பாக்கம் அரசு யோகா மருத்துவமனையில் உள்ளது போன்று, வீட்டிலேயே அக்குபங்சர் நடைபாதை அமைத்து மாலையில் நடைபயில்கிறோம். அலைபேசிக்கு முந்தைய காலத்தில் எடுத்த ஒளிப்படங்களைக் கணினிமயமாக்கவும் முடிந்தது. ஒன்பது ஆண்டுகளாகத் தேங்கிக் கிடந்த தட்டச்சு செய்ய வேண்டிய புத்தகத்தைத் தட்டச்சு செய்துமுடித்தேன். பாராமுகமாக இருந்துவிட்ட தோட்டச் செடிகளைப் பொறுமையாகக் கவனித்துக்கொள்ள முடிகிறது.
என் குழந்தைகளுக்குப் படிப்பினூடே நூல் வாசிக்கும் பழக்கமும் உண்டு. வீட்டில் உள்ள சுமார் 200 புத்தகங்களையும் ஆவணப்படுத்த முடிந்தது. மாலையில் இறகுப் பந்து விளையாட்டு, இடையிடையே தாயம், கேரம் எனப் பொழுது இனிமையாகக் கழிகிறது. கரோனா பற்றிய செய்திகளை அறிய மட்டுமே தொலைக்காட்சியைப் பார்க்கிறோம். 15 ஆண்டுகளாகப் பார்க்கத் தவித்திருந்த ‘ராஜராஜ சோழன்’, ‘பூம்புகார்’ போன்ற வரலாற்றுத் திரைப்படங்களைப் பார்த்துக் களித்தோம். இயந்திரத்தனமாக வாழ்ந்துவந்த நாங்கள், ஆத்மார்த்தமாக வாழ வழிவகுத்துக்கொண்டோம்.
- புவனேஸ்வரி முருகன், திருநின்றவூர்.
உங்கள் வீட்டில் எப்படி? வாசகிகளே, உங்கள் வீட்டில் நிலைமை எப்படி? நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்கும் குழந்தைகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்? உங்கள் அனுபவத்தை எங்களுடன் மின்னஞ்சலில் பகிர்ந்துகொள்ளுங்கள். அது மற்றவர்களுக்கும் உதவும். மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT