Published : 14 Jun 2020 09:37 AM
Last Updated : 14 Jun 2020 09:37 AM

இப்படித்தான் சமாளிக்கிறோம்: தொலைக்காட்சி இல்லாத இனிமையான நாட்கள்

நான் ஆசிரியப் பணியில் இருக்கி றேன். என் கணவர் விற்பனைப் பிரதிநிதி. அவர் வீட்டிலிருந்தபடியே அலுவலகப் பணியை மேற்கொண்டுவருகிறார். அதனால் பிள்ளைகள் என்னுடன் அதிக நேரம் செலவழிக்கும் வகையில் அமைந்தது. முதல் பத்து நாட்களிலேயே அவர்கள் அலுப்படைந்துவிட்டார்கள். அதனால், என்னுடைய பயிற்சிகளுக்குள் அவர்களைக் கொண்டு வருவதற்காகப் பல வழிகளிலும் முயன்றேன்.

அவர்களுக்குக் கையெழுத்துப் பயிற்சி கொடுத்துவிட்டுக் காய்கறிகளை நறுக்குவேன். எழுதியதை வாசிக்கச் சொல்லிவிட்டுச் சமையலறை வேலைகளை முடித்துவிடுவேன். கரையக் கூடியது- கரையாதது, மிதத்தல் விதி, இலையில் சுவாசம் நடைபெறும் விதம் போன்ற சிறு சிறு அறிவியல் ஆய்வுகளை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே செய்வோம். அன்றாடம் ஒரு ஆய்வு என்பதால் என் பிள்ளைகள் உற்சாகமாகி, செய்முறைகளால் ஈர்க்கப்பட்டனர். சிறிது நேரம் ஓவியம் வரைவார்கள். மதிய வேளையில் நல்ல திரைப்படம் ஒன்றைத் தேர்வுசெய்து மடிக்கணினியில் பார்ப்போம்.

மாலையில் என் கணவரும் பிள்ளைகளும் ஏதாவது ஒரு நொறுக்குத் தீனியைச் செய்வார்கள். சுண்டல், அல்வா, கேக் என அவர்களாகவே செய்து அசத்தத் தொடங்கினார்கள். அவர்கள் சமைத்ததை மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்று சாப்பிட்டுக்கொண்டே உரையாடுவோம். படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, ரசித்த நகைச்சுவைகள், நெகிழ்ந்த காட்சிகள் போன்றவற்றைக் குழந்தைகள் எங்களிடம் பகிர்ந்துகொள்வார்கள். தாங்கள் வாசித்த கதைகளை நடித்துக்காட்டுவார்கள். அன்று நடந்த நிகழ்வுகளைச் சுவாரசியமாக எழுதுவார்கள். எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இல்லாததுதான் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் அனைத்துக்கும் அடித்தளமாக அமைந்தது. தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்க்க முடியவில்லையே என்ற குறையை ‘இந்து தமிழ்’ நாளிதழ் போக்குகிறது.

- மீனாட்சி முருகானந்தம், திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x