Published : 09 Feb 2020 12:19 PM
Last Updated : 09 Feb 2020 12:19 PM

பாடல் சொல்லும் பாடு 03: போர்களால் பலியாக்கப்படும் பெண்கள்

கவிதா நல்லதம்பி

யுத்த பூமியில் இருந்து தப்பி வந்த சைனா கெய்ரெற்சி (China Keitetsi) என்னும் குழந்தைப் போராளி, தன் ராணுவத் தலைவனுக்கு எழுதிய கடிதத்தில் இடம்பெற்ற வரிகள் இவை:

“மேதகு முசேவென்! நீ உருவாக்கிவிட்ட ஆயிரமாயிரம் குழந்தைப் போராளிகளில் ஒருத்தியான சைனா கெய்ரெற்சி பேசுகிறேன். என்னைக் கண்ணாடியில் பார்க்கும்போது, அங்கே உனது முகம்தான் எனக்குத் தெரிகிறது. எனது கனவுகளில் நீ துப்பாக்கியை ஏந்தியபடியே என்னிடம் வருகிறாய்.

எனது கனவுகளில் இன்றும் உனது வசீகரக் குரல் கேட்கிறது. உனது அழகிய வசனங்கள் உனக்காக என்னை ரத்தம் சிந்த வைத்தன. நான் உனது விளையாட்டை விதிமுறைகளை அறியாமலேயே விளையாடினேன். அப்போது உனது முகம் ஒளிர, ஒளிர எனது ஆன்மா இருண்டுகொண்டே போயிற்று. நீ என் கைகளில் திணித்த துப்பாக்கியின் கனம் என்னை நிலைகுலைய வைத்தது”.

உகாண்டாவில் பிறந்த சைனா கெய்ரெற்சி, அரசுக்கெதிரான ராணுவ எதிர்ப்பு புரட்சிப் படையில் குழந்தைப் போராளியாக்கப்பட்டார். பின் அங்கிருந்து தப்பி, டென்மார்க்கில் அகதி வாழ்க்கை வாழ்ந்த அவர், தற்போது உகாண்டாவில் குழந்தைப் போராளிகளுக் கான மறுவாழ்வு மையத்தை உலகத் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து நடத்திவருகிறார்.

அவரது சுய வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெற்ற இவ்வரிகள், நமது வரலாற்றில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அதிகாரத்துக்கான போர்களில் தமது பால்யத்தைப் பலிகொடுத்த, குடும்பத்தை இழந்த எண்ணற்ற குழந்தைகளின் வலியைக் காட்டுகின்றன.

எதற்காக, யாருக்காக, விளைவு என்ன வென்று அறியாமலேயே விளையாட்டைப் போல போர்களில் ஈடுபடும் குழந்தைப் போராளிகளின் அப்பாவித்தனமே இங்கே தேவைப்படுகிறது. உலகம் முழுக்க இரண்டரை லட்சத்துக்கும் மேல் குழந்தைப் போராளிகள் இருப்பதாகவும், அவர்களில் நாற்பது சதவீதத்துக்கும் மேற்பட்டோர் சிறுமியர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

“ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை” என்னும் புறநானூற்று வரிகள், ஒருவருக்கொருவர் எதிர்நின்று போர் செய்வதும் அழிப்பதும் இந்த உலகத்தில் நடக்கிற புதிய செயல் இல்லை எனச் சொல்கிறது. இனக்குழு சமூகம், நிலவுடைமை சமூகம், இன்றைய முதலாளித்துவ சமூகம் எனக் கால மாற்றத்தில் வேறுவேறாக நம் சமூகம் உருக்கொண்டிருந்தாலும், போர்களை உருவாக்கி, எதிர்கொள்ளும் சமூகமாகவே எல்லாக் காலத்திலும் இருந்துவருகிறது.

விஷவாயுவைச் செலுத்திக் கூட்டம் கூட்டமாகக் கொன்றழித்ததும், அணு ஆயுதங்களால் கொத்துக்கொத்தாக மடியச் செய்ததும், வேலிகளுக்குள்ளே தாம் விளைவித்த நிலத்தில் தம்மையே ரொட்டித் துண்டுகளுக்காகக் கையேந்தச் செய்ததுமான செயல்களால் போர்கள் அற விழுமியங்களின் வீழ்ச்சியையே விதைத்திருக்கின்றன.

திணிக்கப்படும் கடமை உணர்வு

சங்க காலம் பேரரசுகள் உருவான காலமென்பதால், போரையும் வீரத்தையும் கொண்டாடுகிற காலமாகத் திகழ்ந்தது. ஈன்று புறந்தருதலைப் பெண்ணின் கடமை என்று சொல்கையில், எதிரிகளின் படை யானைகளை வீழ்த்தும் ஒளிபொருந்திய வாளினைக் கொண்டு போர் புரிதலை இளைஞ னின் கடமை என்கிறது புறப்பாடலொன்று.

எல்லோரையும் இழந்த பின்னும், போர் முரசின் சத்தம் கேட்டதும் மகனுக்கு என்ன நேருமோ என்று அஞ்சாமல், தனக்கென இருக்கும் அவன் ஒருவனையும் போருக்குச் செல் என அனுப்புகிறாளே அந்தத் தாயின் துணிவு கெட்டுப் போகட்டும் என்கிறது ஒக்கூர் மாசாத்தியாரின் பாடல். ‘வீரமிக்க மகனைப் பெற்ற என் வயிறு இதோ இருக்கிறது, புலி இருந்து நீங்கிய குகையினைப் போன்ற கம்பீரம் மிக்கதாக’ என்று சொல்லி கர்வம் கொள்கிறாள் ஒரு தாய்.

மற்றொருத்தியோ, தன் மகன் புறமுது கிட்டான் என்ற செய்தியைக் கேட்டதும் அவனுக்குப் பாலூட்டிய மார்பை அறுத்தெறிவேன் எனச் சினம் கொண்டு, வாளுடன் போர்க்களம் செல்கிறாள். சிதைந்து கிடக்கும் உடல்களுக்கு இடையே மகனின் வெட்டப்பட்ட உடலைக் காண்கிறாள். அதைக் கண்டதும் அவனைப் பெற்றெடுத்த நாளில் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகமான மகிழ்ச்சியை அடைகிறாள்.

இச்சங்கக் கவிதைகள் யாவும் தாய்மை உணர்வினும் மேம்பட்டதாக, தன் நாட்டைக் காக்க வேண்டிய கடமை உணர்வை ஒரு பெண் கொண்டிருக்கிறாள் எனக் காட்டுகின்றன. வீரம்செறிந்த பெண்களைக் காட்டுகின்ற வேளையில், போருக்குப் பிந்தைய வாழ்வில், கைம்மை நோன்பைத் தவிர அவள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகள் எதையும் பேசுபொருளாகக் கொள்ளவில்லை.

தன் தாய்நாட்டைக் காக்கும் கடமை மட்டுமே மேலானதெனக் கொள்ளும் பெண்ணாக அவளை வளர்த்தெடுத்த சமூகம், அவளுடைய தன்னிலை உருவாக்கத்தில் சமூகத்துக்கான தாய்மையை மட்டுமே முன்னிறுத்தியிருக்கின்றது; தனிப்பட்ட பெண்ணுக்கான அகத்தை அல்ல என்பதை உணர முடிகிறது.

முடக்கப்படும் வாழ்க்கை

வளங்களுக்காகவும் அதிகார வெறிக் காகவும் நடத்தப்படுகிற போர்களும், தமது உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் நடைபெறுகிற போர்களும் இறுதியில் நிராதரவான வாழ்வையே தம் மக்களுக்குப் பரிசளித்திருக்கின்றன. தர்மத்தை நிலைநாட்டிட நிகழ்ந்தது என்று தத்துவரீதியாகப் பார்க்கப் பட்ட குருஷேத்திரப் போர், லட்சக்கணக்கான கைம்பெண்களின் ஓலக்குரல் நிறைந்த நிலத்தில் பாண்டவர்களை ஆட்சியமைக்கச் செய்தது. கதையெனக் கொண்டாலும் அப் பேரிழப்பை நினைக்கையில் அச்சம் சூழ்கிறது.

இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக, 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 89 ஆயிரம் கைம்பெண்கள் இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 40 வயதுக்கும் கீழான பெண்கள். ஆனால், இத்தொகை முழுமையானதன்று. காரணம், தடுப்புக் காவலிலோ வதை முகாம்களிலோ தம் வீட்டு ஆண்கள் இருக்கலாம் என்று எண்ணிக் காத்திருக்கும் பெண்கள் மிகுதியாக உள்ளனர்.

இப்போர், தனித்துவிடப்பட்ட பெண்கள் தலைமைப் பொறுப்பேற்கும் குடும்பங்களை உருவாக்கியுள்ளது. இப்பெண்கள் உடலும் மனமும் ஊனமுற்ற மனிதர்களைப் பராமரிக்கும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். இவர்களைப் பொருளாதாரத் தற்சார்பு கொண்டவர்களாக, போதிய வாழ்வாதாரங்கள் கொண்டவர்களாகத் தகுதிப்படுத்தும் அரசின் முயற்சிகள் முழுமையடையவில்லை என்பதையே தடுப்பரண்களுக்குள் முடக்கப் பட்ட வாழ்க்கை காட்டுகிறது.

சித்தம் கலங்கியவர்களாக, வைத்திய சாலைகளில் கிடந்து, ராணுவத்தின் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, தம்மையே யாரென்று உணராத அளவுக்குப் பேதலித்துத் திரியும் பெண் போராளிகளும் இதில் அடக்கம். இவர்கள் போருக்குப் பின் இயல்பான குடும்ப வாழ்க்கைக்குத் திரும்ப வாய்ப்பற்றவர்களாக, கண்காணிப்புக்கும் வதைக்கும் ஆளாகும் துயரமான வாழ்க்கையை அனுபவித்துவருகிறார்கள்.

போருக்குப் பிந்தைய பெண்களின் வாழ்க்கை அவர்களை மட்டுமின்றி, குழந்தை களையும் ஆயுதம் ஏந்தச் சொல்வதுதான் பெருந்துயரம்.

தும்பியின் இறக்கையைப்
பிய்த்து எறிவதும்
தடியையும் பொல்லையும்
துப்பாக்கியாக்கி
எதிரியாய் நினைத்து
நண்பனைக் கொல்வதும்
எமது சிறுவரின் விளையாட்டானது
யுத்த கால இரவுகளின்
நெருக்குதலில்
எங்கள் குழந்தைகள்
‘வளர்ந்தவர் ஆயினர்’

என்கிற ஈழக் கவிஞர் சிவரமணியின் கவிதை, போர் குறித்த எண்ணம் குழந்தைகள் மனத்தில் விதைக்கப்படுவதையும் இளமையும் குழந்தைமையும் ததும்பும் பால்யம் போருக்கு இரையாகும் வலியையும் சொல்கிறது. பெண் வதைபடுகிறாள் என்றால், அவள் உருவாக்கித் தந்திருக்கும் சமூகமும் வதைக்குள்ளாகும் என்பதே காலம் சொல்லும் செய்தி.

(பெண் வரலாறு அறிவோம்)
கட்டுரையாளர், உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: janagapriya84@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x