Published : 09 Feb 2020 12:18 PM
Last Updated : 09 Feb 2020 12:18 PM

பெண்கள் 360: சமமான ஊதியம் அதுவே சரி

தொகுப்பு: ரேணுகா

உலகம் முழுவதும் ஒரே துறையில் பணிபுரியும் ஆண், பெண் இருவருக்கும் சமமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுவருகிறது. குறிப்பாக, விளையாட்டுத் துறையில் ஆண் வீரர்களுக்கு இனையாகப் பெண் வீராங்கனைகளுக்கும் சம ஊதியம், பரிசுத் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) 2019-2020 ஆண்டுக்கான கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த ஊதியப் பட்டியலை வெளியிட்டது.

அதில் ஆண் கிரிக்கெட் வீரர்களில் முதல் நிலையில் உள்ளவர்களுக்கு ரூ. 7 கோடி, இரண்டாம் நிலை வீரருக்கு ரூ.5 கோடி, மூன்றாம் நிலை வீரருக்கு ரூ.3 கோடி, நான்காம் நிலை வீரருக்கு ரூ.1 கோடி என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். ஆனால், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் உள்ள முதல் நிலை வீராங்கனைக்கு ரூ. 50 லட்சம், இரண்டாம் நிலை வீராங்கனைக்கு ரூ.30 லட்சம் மூன்றாம் நிலை வீராங்கனைக்கு ரூ.10 லட்சம் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆண் வீரர்கள் மற்றும் பெண் வீராங்கனைகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தொகை சமமாக இல்லாமல் இருப்பது குறித்து இந்திய முன்னணி கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் ‘‘ஆண் வீரர்களைப் போல் சமமான ஊதியம் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வேண்டும் என்றால் நாங்கள் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை வருமானம் ஈட்டும் வகையில் மாற்ற வேண்டும்.

அப்போதுதான் ஆண் வீரர்களைப் போல் எங்களுக்கும் சமமான ஊதியம் வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப முடியும்” என்றார். ஸ்மிருதி மந்தனாவின் இந்தக் கருத்து பெண் விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊதியம், பரிசுத்தொகை வழங்க வேண்டும் எனக் குரல் கொடுத்துவரும் டென்னிஸ் வீராங்கனைகள் பில்லி ஜீன் கிங், செரினா வில்லியம்ஸ், சானியா மிஸ்ரா மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியினர், அமெரிக்க வீராங்கனைகள் ஆகியோரின் கோரிக்கையைப் பின்னுக்குத் தள்ளுவதாக உள்ளது.

மேலும், ஆணாதிக்க சமுதாயத்தில் விளையாட்டு என்றால் அவை ஆண்களுக்கானது குறிப்பாக கிரிக்கெட், கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகள் ஆண்களுக்கு மட்டுமானது என்ற தோற்றம் நம் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் ஆண்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், விளம்பரங்கள் மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு வழங்கப்படுவதில்லை. பாலினப் பாகுபாடே இதற்குக் காரணமாகும்.

அதேபோல் விளையாட்டுப் போட்டிகளுக்கான வருவாயைப் பெருக்குவது அரசு மற்றும் கிரிக்கெட் வாரியத்தின் வேலையாகும். கிரிக்கெட் போட்டிக்கான வருவாயைப் பெருக்குவது வீரர்களின் வேலையல்ல. வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதே அவர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். பாலினப் பாகுபாடு காரணமாகப் பெண் விளையாட்டு வீரர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிட்டு அவர்களுக்கான ஊதியம் குறைக்கப்படுவதை ஏற்றுகொள்ள முடியாது. ஸ்மிருதி மந்தானாவின் கருத்து பிற்போக்குத்தனமானது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

மனநிலை மாற வேண்டும்

இந்திய ராணுவத்தில் ஆண் ராணுவ வீரர்கள் பெண்களை கமாண்டர்களாக ஏற்றுக்கொள்வதில் சிக்கல் உள்ளது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்துக்குப் பதிலளித்துள்ளது. நாட்டைப் பாதுகாக்கும் முப்படைகளில் பெண்கள் எத்தனை வருடங்கள் பணிபுரிந்தாலும், சாதனை படைத்திருந்தாலும் அவர்கள் குறுகிய காலம் மட்டுமே உயர் பொறுப்புகளில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

இதை எதிர்த்துக் கடற்படைப் பெண் அதிகாரி ஒருவர் பத்து வருடங்களுக்கு முன்பு உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை 2010-ம் ஆண்டு விசாரித்த உயர் நீதிமன்றம் கடற்படையில் பெண்களை உயர் பதவிகளில் பணியமர்த்துமாறு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரனையின்போது, ‘ கமாண்டர் போன்ற உயர் பதவிகளுக்குப் பெண்களை ஏன் தேர்வு செய்யக் கூடாது’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அறிக்கையைப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்தப் பதில் மனு மீதான விசாரணை சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆண்களை ஒப்பிடும்போது பெண்களின் உடல் வலிமை மிகவும் குறைவு, கர்ப்பக் காலங்களில் பெண்கள் நீண்ட விடுமுறையில் சென்றுவிடுவார்கள், குழந்தைகளைப் பராமரிப்பது, கணவர்களின் தேவையைக் கவனிப்பது உள்ளிட்ட பொறுப்புகள் பெண்களுக்கு உரியவை. இதனால் ராணுவத்தில் பெண்கள் கமாண்டர்களாகப் பணிபுரிவது மிகவும் சவாலானது.

மேலும், பெண்களை கமாண்டர்களாக ஆண் ராணுவ வீரர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பெண்கள் குறித்த பார்வை காலமாற்றத்துக்கு ஏற்றாற்போல் மாற வேண்டும். பெண்களுக்கு ராணுவ உயர் பதவிகளில் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்களுடைய திறமையை வெளிக்கொண்டுவர முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.

தந்தைகளுக்கும் விடுப்பு

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிப்பதுபோல் பின்லாந்து நாட்டில் தந்தைகளுக்கும் ஏழு மாதகால குழந்தை பராமரிப்பு விடுப்பு அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவாக, குழந்தையின் பாராமரிப்பு, தாய் உடல்நிலை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுவது இயல்பு.

ஆனால், குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பெண்களைப் போல் ஆண்களுக்கும் உள்ளது என்பதை வலியுறுத்தும் விதமாக பின்லாந்து நாட்டில் தந்தைகளுக்கு ஏழு மாதகால குழந்தை பராமரிப்பதற்கான விடுப்பு அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனால் பெற்றோர் இருவருக்கும் தலா ஏழு மாதங்கள் சம்பளத்துடன் கூடிய குழந்தை பராமரிப்பதற்கான விடுப்பு அளிக்கப்படும். அதேபோல் குழந்தை பிறப்பதற்கு ஒருமாத காலம் முன்னதாகவே பெண்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பேசிய அந்நாட்டு சமூகநலத் துறை அமைச்சர் ஐநோ கைசா,“ பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குழந்தையைப் பாதுகாத்துப் பராமரிக்கும் பொறுப்பு பெற்றோர் இருவருக்கும் உண்டு” எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x