Published : 02 Feb 2020 10:32 AM
Last Updated : 02 Feb 2020 10:32 AM
சாலை செல்வம்
ஒரு பள்ளியில் பெற்றோருடன் பேச அழைத்திருந்தார்கள். பேச்சாளர் போல் பேசுவதைவிட உரையாடலை மேற்கொள்வது என முடிவெடுத்தோம். பெற்றோரைச் சந்திப்பதற்கு முன் அவ்வகுப்பு மாணவர்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் இணைத்துக்கேட்டேன்; ஒப்புக்கொண்டனர். மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்புக் குழந்தைகள்.
“உங்கள் பெற்றோர்களிடம் நான் பேசப் போகிறேன். அதைப் பற்றி உங்களுடன் பேசுவதற்காக வந்திருக்கிறேன். எதைப் பற்றிப் பேசலாம்?” என்று கருத்துக் கேட்டேன். அமைதியாக இருந்தனர். அவர்களுக்குப் புரியும்படி, “உங்களுக்கு ஏதாவது கஷ்டம், பிரச்சினைகள் இருந்தால் சொல்லுங்கள், அதைப் பற்றிப் பேசலாம்” என்று கேட்டதுதான் தாமதம் மடமடவென்று சொல்லத் தொடங்கினர்.
அவர்களுக்குத் தேவையான பொருட்களை மட்டும்தான் வாங்குவார்கள். நாங்கள் கேட்பதை வாங்கித்தர மாட்டார்கள்.
அவர்கள் டி.வி. பார்ப்பார்கள்; நாங்கள் பார்த்தால் படி என்பார்கள்.
செல்போன் வீடியோவை அவர்கள் பார்ப்பார்கள். அப்போது எங்களுக்கும் சில வீடியோவைக் காட்டுவார்கள். ஆனால், சில நேரம் அதற்காக ரொம்பத் திட்டுவார்கள்.
என்னையவே அதிகம் வேலை செய்யச் சொல்வார்கள்.
விளையாடப் போனால் அடிப்பார்கள்.
பிரண்ட்ஸ் வச்சிக்கக் கூடாது என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
எப்ப பார்த்தாலும் அறிவுரை சொல்வார்கள்.
மற்ற வீடுகளில் ஆண் பிள்ளைகளைத் தண்ணி எடுப்பது, சோறாக்குவது என வேலைகளைச் செய்யச் சொல்வதில்லை. என்னைச் செய்யச் சொல்வதால் எனக்கு அழுகையாய் வரும்.
பொம்பளை புள்ளதான, வீட்டுக்குள்ளேயே இரு என்பார்கள். வெளியே போனால் அடிப்பார்கள்.
பிடிச்சதைச் சாப்பிடக் கொடுக்க மாட்டாங்க.
- இப்படி முடிவில்லாமல் அவர்களின் பேச்சு நீண்டுகொண்டே போனாலும், இங்கே இவ்வளவு போதும். அவர்கள் பேசப் பேச எனக்குப்
புதுத் தெளிவு கிடைத்த உணர்வு. ஒரு விஷயத்தைச் சொல்லும்போது தெளிவாகக் காரணத்துடன் சொல்லவும் விளக்கவும் அவர்களால் முடிகிறது. பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதைக்கூட அவர்களிடம் கேட்கும்போதுதான் புரிகிறது. ஒரு குழந்தை வந்து, “நான் சொன்னதாக அம்மாவிடம் சொல்ல வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டாள். தலைவணங்கி ஒப்புக்கொண்டேன்.
‘என்ன செய்யலாம்’ என்று அவர்களிடமே கேட்டேன். அமைதியாக இருந்தார்கள். பின் அவர்களே தீர்வையும் சொன்னார்கள்.
எங்களைப் படிக்கச் சொல்லிட்டு அவுங்க டி.வி. பார்க்கக் கூடாதுன்னு சொல்லணும்.
கொஞ்ச நேரம் விளையாட அனுமதிக்கணும்.
எங்கள் பிரண்ட்ஸைக் குறைசொல்லக் கூடாது.
- இப்படிச் சிலவற்றைச் சொன்னார்கள்.
பெற்றோர்கள் எதிர்பார்ப்பில் உள்ள நியாயங்கள் பற்றிக் குழந்தைகளுக்குச் சொன்னோம். பள்ளி முடிந்து வீட்டுக்குப் போனதும் சிறிது நேரம் படிக்கணும். அதன் பிறகே விளையாடிவிட்டு வரட்டுமா எனப் பெற்றோரிடம் கேட்பது, இவ்வளவு நேரம் விளையாடுகிறேன் என்று கணக்கு வைத்துக்கொள்வது எனச் சிலவற்றைப் பேசினோம்.
பெற்றோர் சந்திப்பு தொடங்கியது. தங்கள் பிள்ளை களைப் பற்றிப் பேசுவது பெற்றோ ருக்கு எவ்வளவு பிடித்தமான விஷயம். புகழ்வதென்றாலும் குறை கூறுவதாக இருந்தாலும் சரளமாக வருகிறது அவர்களுக்கு. அதிலும் மருத்துவர் மாத்திரை கொடுப்பதுபோல் அவர்கள் பிள்ளைகளின் பிரச்சினைக்கு ஒரே வரியில் உடனடித் தீர்வை எதிர்பார்க்கும் பெற்றோர்களே அதிகம். குழந்தைகளின் வளர்ச்சி என்பது நாம் வாழும் வாழ்க்கையில் அவர்களுக்கு நம்மால் வழங்கப்படும் வாய்ப்புகள், குழந்தையின் இயல்பு, விருப்பு, வெறுப்புகள் எனப் பலவற்றை உள்ளடக்கியது என்பதைப் பெற்றோருக்கு எளிதில் புரியவைத்துவிட முடியுமா என்ற சந்தேகத்துடன்தான் தொடங்கினோம்.
உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் பிரச்சினையாகக் கருதும் விஷயங்கள் என்னென்ன என்று கேட்டதும் பிள்ளைகளைப் போலவே பெற்றோரும் பலவற்றை அடுக்கினர்.
வீட்டுக்கு வந்து புத்தகத்தை எடுத்துப் படிப்பதே இல்லை.
எப்பயும் இதை வாங்கு அதை வாங்கு எனக் கேட்பது.
டி.வி.தான் எப்பயும்.
செல்போன் வேணும்னு அடம்பிடிக்கிறது.
வீட்டு வேலை செய்யச் சொன்னா, செய்றதே இல்லை.
எப்பவும் விளையாட்டு.
பசங்களோட சேர்ந்துகிட்டு ஊர்சுத்துறது.
எல்லாத்தையும் தொலைச்சிட்டு வர்றது.
பெற்றோர் சொல்லி முடித்ததும், ‘என்ன செய்யலாம்’ என்று அவர்களிடமே கேட்டோம். “நீங்க பள்ளிக்கூடத்துல சொல்லி திருத்தி அனுப்புங்க” என்றனர். சரி, அத்துடன் வேறு என்ன செய்யலாம் என்றதற்கு அமைதியாகவே இருந்தனர்.
தங்கள் குழந்தைகளின் மீது நம்பிக்கை யற்று இருக்கும் பெற்றோரை யோசிக்கச் செய்வது அத்தியாவசியமானது. “நம் பிள்ளை களுக்காக நாம் வாழ்கிறோம். அப்படித்தான் பலரும் சொல்லிக்கொள்கிறோம். உங்களில் எவ்வளவு பேர் உங்கள் பிள்ளைகளுக்காக வாழ்கிறீர்கள்?” எனக் கேட்டபோது ஏறக்குறைய அனைவருமே கை தூக்கினர். நமது செயல்பாடுகளில் சிலவற்றைக் குழந்தைகளுக்காக மாற்றிப் பார்க்க முடியுமா என யோசிப்போம்.
நாம் சிக்கலாக நினைக்கும் விஷயங்கள் பற்றிப் பேசலாமா?
குழந்தைகள் படிக்கும் நேரத்தில் நாம் டி.வி. பார்க்காமல் இருப்போமா?
குழந்தைகளுடன் இணைந்து வீட்டு வேலைகளைச் செய்வோமா?
வேலைகளைத் தண்டனையாக, படிப்பு வராததால் செய்யச்சொல்வதாக இல்லாமல் தினசரி வேலைகளில் மகிழ்வுடன் ஈடுபட உதவுவோமா?
விளையாட்டு நேரம் என ஒதுக்கி நண்பர் களுடன் விளையாட அனுமதிக்கலாமா?
-இப்படிக் குழந்தைகளுக்குச் சில விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் முன்மாதிரியாக நாம் இருக்க வேண்டும் என்று விளக்கியபோதும், புதிதாகக் கேட்பதுபோல் அமைதியாகக் கவனித்தனர். நம்முடைய குழந்தைகளை வளர்க்க நாம் கற்றுக்கொள்ள வேண்டியதும் செயல்பட வேண்டியதும் அவசியம்.
(சேர்ந்தே கடப்போம்)
கட்டுரையாளர், கல்விச் செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT