Published : 26 Jan 2020 09:58 AM
Last Updated : 26 Jan 2020 09:58 AM
கடல்புறத்தில் வசிப்பதால் அதை மையமாக வைத்தே தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறார் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த ச.சுபைதா பேகம்.
அறுபதை நெருங்கும் வயது. கணவர் எம்.சம்சுதீன், படகு இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் தொழில் செய்து வருகிறார். குழந்தைகள் மூவருக்கும் மணம் முடித்துவைத்தாகிவிட்டது. கடமை முடிந்துவிட்டது என ஓய்வெடுக்காமல் சுறுசுறுப்புடன் இயங்கிவருகிறார் சுபைதா.
மகத்தான மகளிர் குழு
சிறு வயதிலேயே சமூக சேவையில் ஆர்வம்கொண்ட சுபைதா பேகம், திருமணம் முடிந்து திரேஸ்புரம் பகுதிக்கு வந்தார். இப்பகுதி பெண்களின் முன்னேற்றத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகச் சங்கு, சிப்பி போன்ற கடல் பொருட்களில் இருந்து கலைப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் ‘வளர்நிலா சிக்கன நாணய சங்கம்’ என்ற குழுவை 1999-ல் உருவாக்கினார். அந்தக் குழுவில் இப்பகுதியைச் சேர்ந்த 15 பெண்களை இணைத்துக்கொண்டு முதலில் சிறிய அளவில் தொழில் தொடங்கினார்.
இவரது கலைப்படைப்புகளுக்கு வரவேற்பு கிடைக்க, தொழில் விரிவடைந்தது. தற்போது 300-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறார். சென்னை, கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களுக்கும் இவை அனுப்பப்படுகின்றன. எங்கெல்லாம் மகளிர் குழுக்களின் உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனைக் கண்காட்சி நடைபெறுகிறதோ அங்கெல்லாம் கடை வைத்துவிடுகிறார் சுபைதா.
“சங்கு, சிப்பி, சோவி இவையெல்லாம் கடல்வாழ் உயிரினங்கள். இதில் நூற்றுக் கணக்கான வகைகள் உள்ளன. மீனவர்கள் வலை விரித்து இவற்றைப் பிடித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து நாங்கள் வாங்கி மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றி விற்பனை செய்கிறோம். சங்கு, சிப்பிகளின் ஓடுகளுக்கு உள்ளே சதைப் பகுதி இருப்பதால் துர் நாற்றம் வீசும். முதலில் அசௌகரிய மாகத்தான் இருந்தது. இப்போது பழகிவிட்டது. அந்தச் சதைப் பகுதிகளை அகற்றிவிட்டுச் சுத்தம் செய்து கலைப் பொருட்களாக மாற்றுகிறோம்” என்கிறார் சுபைதா.
விற்றுத்தீர்ந்த கலைப்பொருட்கள்
சங்குகளில் இருந்து வளையல், பிரேஸ்லெட், கம்மல், மோதிரம், பாசிமணி, முத்துமாலை, கீ செயின், பேனா எனப் பல பொருட்களைச் செய்கின்றனர். பெரிய சங்குகளைச் சுத்தம் செய்து அப்படியே விற்கின்றனர். ஒரு சங்கு 2,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விலை போகும். ஒளிப்படம், பெயர் போன்றவற்றைச் சங்கில் பொறித்துத் தருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் தலைவர்களின் படங்களைப் பொறித்துத்தரச் சொல்லிக் கேட்பார்கள் என்கிறார் சுபைதா. கண்ணாடி, ஒளிப்படம், கடிகாரம், விளக்குகள் போன்வற்றைச் சுற்றி வண்ண வண்ண சங்குகளையும் சிப்பிகளையும் ஒட்டி அழகுபடுத்தித் தருகிறார்கள்.
“நாங்கள் செய்யும் பொருட்களைப் பெரும்பாலும் கண்காட்சிகளில்தான் விற்போம். தூத்துக்குடி மட்டுமன்றி சென்னை உட்படத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெளிமாநிலங்களிலும் நடைபெறும் கண்காட்சிகளுக்குச் செல்வோம். அண்மையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்காட்சியில் எங்கள் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது” எனப் புன்னகைக்கிறார் சுபைதா.
மத நல்லிணக்கத்துக்குச் சான்றாகவும் இவர்களது குழு இருக்கிறது. அந்தப் பெண்களில் பலரும் மீனவச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். தங்களுக்குக் கிடைக்கும் வருமானத்தைப் பகிர்ந்துகொள்கின்றனர். இது தவிர, கருவாடுகளை பாக்கெட்டில் அடைத்து விற்கின்றனர். மாநகராட்சி மகளிர் குழுக்களின் சமுதாய மேம்பாட்டுச் சங்க தலைவியாக இருக்கிறார் சுபைதா. இவருடைய கட்டுப் பாட்டில் சுமார் 300 குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் கடன் வாங்கிக் கொடுப்பது, தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவது போன்றவற்றையும் இவர் செய்துவருகிறார்.
“பொதுவாகப் பலரும் இஸ்லாமியப் பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுமதிப்பதில்லை. ஆனால், என் கணவரும் குடும்பத்தினரும் என் முன்னேற்றத்துக்குப் பக்கபலமாக இருக்கின்றனர். அதனால்தான் வெளியூர்களுக்குச் செல்ல முடிகிறது. தொலைதூரக் கல்வியில் பி.ஏ. சமூகவியல் படிக்க முடிந்தது” என்று சொல்லும் சுபைதா, பெண்கள் எப்போதும் தற்சார்புடன் இருக்க வேண்டும் என்கிறார்.
படங்கள்: என்.ராஜேஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT