Published : 29 Dec 2019 10:09 AM
Last Updated : 29 Dec 2019 10:09 AM

முகங்கள்: கூழால் குளிரும் மனங்கள்

கே.சுரேஷ்

குறைதீர்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறவர்கள், தங்கள் குறையைச் சொல்லும் நேரத்தை நீட்டித்து அவர்களின் வாட்டத்தைப் போக்கிவருகிறார் தேவி. புதுக்கோட்டையில் மாதந்தோறும் நடைபெற்றுவரும் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், “மதிய உணவுக்கான நேரம் கடந்துகொண்டிருக்கிறது.

சர்க்கரையால் பாதிக்கப்பட்ட அலுவலர்கள் பலரும் சிரமத்தோடு அமர்ந்திருப்பதால் கூட்டத்தை விரைவாக முடிக்க வேண்டியிருக்கிறது. எனவே, விவசாயிகள் தாங்கள் தெரிவிக்க வரும் கோரிக்கைகளை மிகவும் சுருக்கமாகத் தெரிவிக்க வேண்டும். மனுவாகக் கொடுத்தால் கூடுதல் மகிழ்ச்சி” என வேளாண் துறை அலுவலர்கள் ஒலிபெருக்கியில் இடையிடையே அறிவித்துக்கொண்டே இருப்பார்கள்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் காலை பத்து மணிக்குத் தொடங்கும் அந்தக் கூட்டம், சில நேரம் பிற்பகல் மூன்று மணிவரைகூட நீண்டுவிடும். விவசாயம் தொடர்புடைய துறைகளில் வட்டார அளவிலான அலுவலர்கள்கூடக் கலந்துகொள்ள வேண்டும் என்பதால் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் இருந்தும் அலுவலர்கள் பங்கேற்பர். இதனால், காலை உணவை அரைகுறையாகவோ சாப்பிடாமலோகூட வருவதுண்டு.

சர்க்கரையால் பாதிக்கப்பட்ட அலுவலர்கள் உரிய நேரத்துக்கு மதிய உணவு சாப்பிட முடியாத நிலை ஏற்படுவதால் பலர் இந்தக் கூட்டத்துக்கு வராமல் இருப்பர். கூட்டத்தில் கலந்துகொள்ளும் விவசாயிகளுக்கும் அலுவலர்களுக்கும் டீயும், ஓரிரு பிஸ்கட்டுகளும் வழங்கப்படும்.

நேரத்தை நீட்டிக்கும் மந்திரம்

அலுவலர்கள் படும் அவதியை உணர்ந்த அப்போதைய ஆட்சியராக இருந்த சு.கணேஷ், விவசாயிகளின் ஆலோசனையோடு கூட்டத்தில் பங்கேற்போருக்குக் கேழ்வரகுக் கூழ் வழங்க வேண்டும் என ஒரு உத்தரவை போட்டார். இந்த உத்தரவை உடனே செயல்படுத்துவதாகத் தெரிவித்த வேளாண் அலுவலர்களுக்குப் பெரிய சவாலாக இருந்ததே, யார் கூழ் காய்ச்சிக் கொடுப்பது என்பதுதான்.

அப்போது அடையாளம் காணப்பட்டவர்தான் ‘அக்ரி’ எஸ்.தேவி. அதன்பிறகு, இன்றுவரை கூட்டம் தொடங்கி 12 மணியைக் கடந்ததும் கூட்ட அரங்கில் இருப்போருக்குப் புத்துணவு அளிக்கும் வகையில் தேவியின் கையால் தயாரான ஏலக்காய் மணக்கும் கூழ்தான் கொடுக்கப்படுகிறது. “மூணு வருஷத்துக்கு மேல விவசாயிகள் கூட்டத்துக்குக் கூழ் காய்ச்சிக் கொடுத்துட்டு இருக்கேன்.

கலெக்டர், அதிகாரிகள், விவசாயிகள்னு எல்லாரும் முக்கியமானவங்களாக இருக்கறதால தரமாகக் கூழ் காய்ச்சணுமே. அதுக்காகக் கேழ்வரகை வாங்கிப் பக்குவமா அரைத்து, சுகர் இருக்கறவங்களும் குடிக்கணும் என்பதற்காக வெல்லத்தைச் சேர்க்கிறேன். மணமாவும் சுவையாவும் இருக்கறதுக்காக ஏலக்காய்ப் பொடியையும் தேங்காய்ப் பாலையும் சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்கிறேன்” என்கிறார் தேவி. கூழுக்கு மாறிய பிறகுதான் கூட்டத்தை அவசரகதியில் முடிக்க வேண்டும் என்ற அலுவலர்களின் குரல் ஓரளவுக்கு மட்டுப்பட்டுள்ளது.

விவசாயத்தில் விருது

தெட்சிணாபுரத்தில் பிறந்த தேவி, நான்காம் வகுப்புவரை படித்திருக்கிறார். “சின்ன வயசுல இருந்தே எனக்கு விவசாயத்துல ஆர்வம் அதிகம். நெல், காய்கறி, பயறு வகை, சிறுதானியங்கள்னு எல்லா சாகுபடியையும் செய்வேன். பயிர் நல்ல முறையில் விளைந்ததால் அக்கம் பக்கத்தினர் என்கிட்ட ஆலோசனைகளைக் கேப்பாங்க. கல்யாணம் முடிந்து குப்புடையான்பட்டிக்கு வந்தேன்.

இங்கே வந்தும் விவசாயத்தை விடவில்லை. என்னைச் சிறந்த விவசாயியாகத் தேர்வு செஞ்சாங்க. குஜராத்தில் முதல்வராக இருந்த மோடியைச் சந்தித்துப் பாராட்டுப் பெற்றேன்” என்கிறார் தேவி. புதுக்கோட்டை உழவர் சந்தையில் உள்ள இவரது கூழ் கடைக்குப் பெரும் கூட்டமே திரள்கிறது. நடைப்பயிற்சிக்கு வருகிறவர்களில் பெரும்பாலானோர் இவரது கடையின் வாடிக்கையாளர்கள்தான்.

“கூழ் வியாபாரத்துல பெருசா வருமானம் கிடையாது. ஆரோக்கிய பானமா இருக்கறதால அதிகாரிங்க, பொதுமக்கள்னு எல்லாரும் இந்தக் கூழை விரும்பிக் குடிக்கிறாங்க. என்னைப் பாராட்டுறாங்க. அதைக் கேட்கும்போது ஏற்படுற மன நிறைவு போதும்” எனப் புன்னகைக்கிறார் தேவி.

அக்கறையும் பக்குவமும் கலந்திருப்பதால் விவசாயிகள் கூட்டம் மட்டுமின்றி, பல்வேறு அரசு விழாக்களிலும் கூழ் விநியோகிக்கும் வாய்ப்பு தேவிக்குக் கிடைத்திருக்கிறது. செய்வதைச் சிறப்புடன் செய்தால் முன்னேற்றத்துடன் மன நிறைவும் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறார் தேவி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x