Published : 22 Dec 2019 09:55 AM
Last Updated : 22 Dec 2019 09:55 AM

தானத்தில் சிறந்தது: தாய்ப்பால் தேவதை

ரேணுகா

உலகில் பெரும்பாலான குழந்தைகளுக்குப் போதுமான அளவு தாய்ப்பால் கிடைப்பதில்லை. போதுமான தாய்ப்பால் கிடைக்காததால் பல குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் ஆண்டர்சன் சியரா (Elisabeth Anderson-Sierra), தனக்குச் சுரக்கும் தாய்ப்பாலைத் தாய்ப்பால் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்குத் தானமாக வழங்கிவருகிறார்.

எலிசபெத், அமெரிக்காவில் உள்ள பீவர்டன் பகுதியில் தன் இரண்டு மகள்களுடன் வசித்துவருபவர். கடலோரப் பாதுகாப்புப் படை வீராங்கனையான இவர், பிறருக்கு உதவுவதையே நோக்கமாகக் கொண்டவர். கருவுற்றதால் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். 2014-ல் முதல் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே எலிசபெத்துக்கு அதிகமாகப் பால் சுரக்கத் தொடங்கிவிட்டது.

எலிசபெத்தின் குழந்தை இசபெல்லா, தாய்ப்பால் நன்றாகக் குடித்தாலும் அவருக்குத் தொடர்ந்து பால் வழிந்துகொண்டே இருந்தது. இதனால் அவர் கடும் மார்பக வலியால் பாதிக்கப்பட்டார். பின்புதான் எலிசபெத்துக்கு ஏற்பட்டிருப்பது ‘ஹைப்பர் லாக்டேஷன் சிண்ட்ரோம்’ என்பது கண்டறியப்பட்டது. ஆனால், இது தனக்குக் கடவுள் கொடுத்த பரிசு என மகிழ்ந்தார் எலிசபெத். ஒவ்வொரு நாளும் அவருக்கு ஐந்து லிட்டர் அளவுக்குத் தாய்ப்பால் சுரக்கத் தொடங்கியது.

பெற்றால்தான் பிள்ளையா?

தனக்குச் சுரக்கும் பாலைத் தினமும் சேகரித்து, குளிர்சாதனப்பெட்டியில் பதப்படுத்திவருகிறார். தன் வீட்டுக்கு அருகே தாய்ப்பால் தேவையுள்ள குழந்தைகளுக்கும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் அதைத் தானமாக அளித்துவருகிறார். இந்நிலையில் போர்டோரிகோ தீவில் புயலால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்றுக்குத் தாய்ப்பால் தேவை என்ற செய்தி எலிசபெத்துக்குக் கிடைத்தது. தான் சேகரித்து வைத்திருந்த 80 லிட்டர் தாய்ப்பாலைப் பாதுகாப்பான முறையில் அனுப்பிவைத்தார் எலிசபெத். “ஜோக்குயின் என்ற குழந்தைக்குதான் தாய்ப்பாலை அனுப்பி வைத்தேன்.

அவன் பிறக்கும்போது அவனுடைய அம்மா இறந்துவிட்டார். புயலுக்கு முன்புவரை தாய்ப்பால் மையத்தில் சேகரித்துவைத்திருந்த பாலை அவனுக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், புயலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுத் தாய்ப்பாலைப் பதப்படுத்த முடியாமல் போய்விட்டது. ஜோக்குயினுக்கு ஓராண்டாகத் தாய்ப்பால் அனுப்பினேன். நாங்கள் இருவரும் ஒரு முறை சந்தித்துக்கொண்டபோது அவன் என்னை இறுக்கமாக அணைத்துக்கொண்டான். அந்தத் தருணத்தை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்கிறார் எலிசபெத்.

ஜோக்குயின்போல் தாய்ப்பால் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார் எலிசபெத். இதையடுத்து ‘One Ounce at a Time’ என்ற தாய்ப்பால் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். Pumping கருவிமூலம் ஒரு நாளைக்கு ஆறு முறை தாய்ப்பால் சேகரித்துவருகிறார்.

நான்கு ஆண்டுகளாக இதைச் செய்துவருகிறார் எலிசபெத். இதுவரை ஐந்து கோடி லிட்டர் தாய்ப்பாலை ஆதரவற்ற குழந்தைகள், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்களின் குழந்தைகள், திருநங்கைகள் வளர்க்கும் குழந்தைகள், தொண்டு நிறுவனங்களில் இருக்கும் குழந்தைகள் போன்றோருக்குத் தானமாக வழங்கியிருக்கிறார்.

200-க்கும் மேற்பட்டவர்கள் எலிசபெத்தின் வாடிக்கை யாளராக உள்ளனர். “ஹைப்பர் லாக்டேஷன் சிண்ட்ரோமை மருத்துவ உதவியுடன்தான் நிறுத்த முடியும். ஆனால், அதைப் பற்றிய எண்ணம் இப்போதுவரை இல்லை” என்கிறார் எலிசபெத்.

திரவத் தங்கம்

அமெரிக்காவில் தாய்ப்பால் விற்பனை செய்வது குற்றமல்ல. இதனால், பல இடங்களில் தாய்ப்பால் மையம் செயல்படுகிறது. ஆனால், அங்கே கால் லிட்டருக்கும் குறைவான தாய்ப்பால் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எலிசபெத் தன்னுடைய வீட்டில்தான் தாய்ப்பாலைப் பதப்படுத்திவைத்துள்ளார். அதைப் பதப்படுத்த ஆகிற செலவுக்கு மட்டும் அமெரிக்க மதிப்பில் ஒரு டாலர் கட்டணமாக வசூலிக்கிறார்.

தங்கம், வைரம் போன்ற பொருட்களைத் திருடுவதுபோல் திரவத் தங்கமான தாய்ப்பால் திருட்டும் அவர் வீட்டில் அரங்கேறியுள்ளது. இதற்காகக் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளார். தாய்ப்பாலைத் தானமாக வழங்குவதற்காக எலிசபெத்துக்குப் பாராட்டுகள் குவிகின்றன. ஆனால், அதேநேரம் கீழ்மை எண்ணம் படைத்தவர்கள் சிலர் தரமற்ற தகவலை அவருக்கு அனுப்புகிறார்கள்.

“இது போன்ற தவறான செய்கையால் வருத்தப்பட வேண்டியவர்கள் அவர்கள்தாம். என்னுடைய செயல் மிகவும் புனிதமானது. தாய்ப்பால் வழங்கும் தேவதையாகவே என்னைக் கருதுகிறேன். இந்த உலகம் எலிசபெத் என்ற பெண்ணை அப்படித்தான் அறிந்துகொள்ள வேண்டும்” என்று சொல்கிறார் எலிசபெத். தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்துவிடும் என்பது போன்ற கற்பிதங்களுக்கு மத்தியில் எலிசபெத் உயிர்காக்கும் தேவதைதான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x