Published : 22 Dec 2019 09:59 AM
Last Updated : 22 Dec 2019 09:59 AM
தொகுப்பு: ரேணுகா
“மக்கள் வன்முறையை விரும்புகிறவர்களாக உள்ளனர். அதனால், பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனையாக அவர்களைத் தூக்கிலிடுவது, அடிப்பது, ஆணுறுப்பைத் துண்டிப்பது, கொல்வது போன்றவற்றை மக்கள் விரும்புகிறார்கள்.
ஆனால், பெண்களைச் சமமாக நடத்த ஆண்களுக்குக் கற்றுத்தர வேண்டும், பெண் வெறுப்புச் சிந்தனை மரபுகளைச் சுட்டிக்காட்டி அதை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும், பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னால் அவர்கள் அதை விரும்ப மாட்டார்கள்”.
- எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொன்ற நால்வரை என்கவுண்டரில் காவல் துறையினர் சுட்டுக்கொன்றதைத் தொடர்ந்து தன் ட்விட்டர் பக்கத்தில் இப்படிப் பதிவிட்டிருந்தார் தஸ்லிமா.
பெண் கல்வியில் முதலிடம்
நாட்டிலேயே பெண் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக கேரளம் உள்ளது. இது குறித்து மத்திய அரசின் புள்ளியியல் துறை ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் கேரளத்தில் 3- 5 வயதுவரை மழலையர் வகுப்பு செல்லும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 60 சதவீதமாகவும் பல்கலைக்கழகங்கள்வரை செல்லும் பெண்களின் எண்ணிக்கை 99.5 சதவீதமாகவும் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் 54 சதவீதமாக உள்ளது. பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதில் பின்தங்கிய மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது. இங்கே பெண்களில் 22 சதவீதத்தினருக்குத்தான் கல்வி கிடைக்கிறது.
ஜாமியாவின் சிங்கப் பெண்கள்
நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ரத்துச் செய்யக்கோரி போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகமான ஜாமியா மிலியாவைச் சேர்ந்த மாணவர்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது மாணவர்களைக் காவல் துறையினர் தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் கேரளத்தைச் சேர்ந்த 22 வயதான ஆயிஷா ரென்னா, லதீதா பர்சானா ஆகிய இருவரும் தங்களுடைய நண்பர் ஷாஹீன் என்பவரைக் காவல் துறையினர் இழுத்துச் சென்றபோது அரணாக நின்று அவரைப் பாதுகாத்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலானது. மாணவிகளின் இந்தத் துணிச்சல் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய ஆயிஷாவும் லதீதாவும், “நீங்கள் பெண்கள், உங்களால் எதுவும் செய்ய முடியாது எனக் கூறினால் அதைப் பொருட்படுத்தக் கூடாது. பொதுவாக பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும், மெதுவாகப் பேச வேண்டும் என்று ஆண்கள் சொல்வார்கள். ஆனால், சமூகத்தில் எங்கு அநீதி நடந்தாலும் அதை எதிர்த்து வலிமையாகக் குரல் கொடுங்கள்.
ஏனென்றால், அது பெண்களாகிய நம்முடைய குரல். அதை யாரும் கட்டுப்படுத்த முடியாது. யாராலும் அதைத் தடுக்க முடியாது” என்றார்கள். காவல் துறையினர் பல்கலைக்கழகத்துக்குள் அத்துமீறி நுழைந்து மாணவ, மாணவிகளின் விடுதிகள், நூலகம், வகுப்பறை ஆகியவற்றைச் சூறையாடியதாகவும் மாணவர்களைத் தாக்கியுள்ளதாகவும் இதனால், காவல் துறையினர் மீது வழக்குப் பதிவுசெய்யப்போவதாகவும் பல்கலைக்கழக துணைவேந்தர் நஜ்மா அக்தர் தெரிவித்துள்ளார்.
மறைந்தார் லில்லி தாமஸ்
சுதந்திர இந்தியாவில் சட்டப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் பெண்ணும் உச்ச நீதிமன்றத்தின் முதல் வழக்கறிஞருமான லில்லி தாமஸ் டிசம்பர் 10 அன்று காலமானார் (91). திருவனந்தபுரத்தைச் சேர்ந்த லில்லி தாமஸ், இளநிலை சட்டப் படிப்பை 1955-ல் முடித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவுசெய்தார். பின்னர் 1959-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் எல்.எல்.எம். முதுநிலைப் பட்டம் பெற்றார். இதன்மூலம் சுதந்திர இந்தியாவில் சட்டப் படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
ஆண்டின் சிறந்த நபர்
பருவநிலை மாற்றம் தொடர்பான போராட்டங்களில் ஈடுபட்டுவரும் ஸ்வீடன் நாட்டுச் சிறுமி கிரெட்டா துன்பெர்க், 2019-ம் ஆண்டின் சிறந்த நபராக ‘டைம்’ இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘டைம்’ பத்திரிகை ஒவ்வோர் ஆண்டும் அந்த ஆண்டின் சிறந்த நபரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம்.
அந்த வகையில் பருவநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராடும் பதினாறு வயதுச் சிறுமி கிரெட்டா துன்பெர்க் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளிக்குச் செல்லாமல் பருவநிலைப் பாதிப்பு குறித்து #FridayforFuture என்ற பதாகையுடன் ஸ்வீடன் நாடாளுமன்ற வாசலில் அமர்ந்து தனிநபர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கிரெட்டாவின் இந்தப் போராட்டம் தற்போது நாடுகளைக் கடந்து உலக அளவில் பரவிவருகிறது. அண்மையில் ஐ.நா.வில் நடந்த பருவநிலை உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களை நோக்கி கிரெட்டா எழுப்பிய கேள்விகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
“இந்த ஆண்டு உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாகப் பருவநிலை மாற்றம் உள்ளது. இதற்கு எதிரான வலிமையான குரலாக கிரெட்டாவின் குரல் ஒலிக்கிறது” என ‘டைம்’ பத்திரிகையின் ஆசிரியர் எட்வர்ட் ஃபெல்செந்தல்
கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT