Published : 22 Dec 2019 10:00 AM
Last Updated : 22 Dec 2019 10:00 AM
பாரததேவி
சிறுபிள்ளைகளிலிருந்து பெரியவர்கள்வரை வேப்பமுத்து பெறக்குவார்கள். வேப்ப எண்ணெய் மருந்துக்கு ஆகும். வேப்பம் புண்ணாக்கு வயலுக்கு உரமாகும். நிலந்தூந்து உதிர்ந்துகிடக்கும் புளியம்பழங்களைப் பெறக்குவார்கள். அவற்றின் ஓடுகளை உடைத்துச் சாணி உருண்டையோடு எரு தட்டவைத்துக் கொள்வார்கள்.
கொட்டை எடுத்து, புளியைக் கொண்டுபோய் விற்றுவிடுவார்கள். புளியின் நார் விருந்தாளிகள் வந்தால் குழம்புவைக்க உதவும். இவர்களுக்குப் புளியம்பூவே போதுமானது. புளியங்கொட்டை அந்தக் காலத்தில் நல்ல தின்பண்டமாக இருந்தது.
அதாவது புளியங்கொட்டையை வரையோட்டில் போட்டு நன்றாக வறுப்பார்கள். வறுக்கும்போதே அதன் மணம் வீட்டைச் சுற்றிச் சுற்றி வரும். வறுத்ததுமே உரலிலிட்டுக் குத்துவார்கள். புளியங்கொட்டையின் மேல்தோலெல்லாம் நீங்கி கொட்டை மட்டும் வெள்ளையாக இருக்கும்.
அதை முதல் நாள் இரவே தண்ணீரில் நனையப்போட்டுவிட்டால் விடியற்காலை மெல்லுவதற்குத் தோதாக நனைந்துவிடும். அதில் உப்புப் போட்டுப் புரட்டி ஓலைக் கொட்டானில் போட்டுப் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டால் அவர்களுக்குச் சந்தோசம் தாங்காது. கொட்டானைத் தூக்கிக்கொண்டு மந்தைக்கு ஓடுவார்கள். பெரியவர்களும் தங்கள் மடியில் அள்ளிப்போட்டுத் தின் பண்டமாகத் தின்பார்கள்.
சாம்பலும் உப்பும் பற்பொடி
கிணற்றைச் சுற்றிலும் கோவைக் கொடிகள் படர்ந்திருக்கும். அவற்றில் சிவப்பு சிவப்புத் துணுக்குகளாய்ப் பழம் பழுத் திருக்க அவர்கள் கஞ்சி கொண்டுபோன ஈயப்போனிகளில் அவை நிரம்பி வழியும். பிஞ்சைக்குள் இருக்கும் மிதுக்கம் செடிகளில் மஞ்சளாய்ப் பழுத்துக்கிடக்கும் பழங்களும் தின்பண்டம்தான். பிள்ளைகளுக்குத் தின்னு மாளாது.
இப்படிப் பல தின்பண்டங்களைத் தின்றாலும் யாருக்கும் எந்தப் பற்பசையும் பிரஷ்ஷும் கிடைக்காது. நெல் உமி கருக்கிய சாம்பலோடு சேர்த்த உப்புதான் பற்பொடி. ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் இந்தச் சாம்பலைப் பழைய கலயத்தில் கயிறுகட்டித் தொங்கவிட்டிருப்பார்கள்.
சிறு பிள்ளைகள் அதை அள்ளிக்கொண்டு ஓடுவார்கள். ஆண்களுக்கும் காலை நேரத்தில் அடுப்பு வேலையில் மூழ்கிக் கிடக்கும் பெண்களுக்கும் இப்படி உமியை அள்ளிப் பல் விளக்க நேரமிருக்காது. அவர்கள் பிஞ்சைக்குப் போகிற போக்கில் ஆலங்குச்சியையோ வேப்பங்குச்சியையோ ஒடித்துப் பல்லைத் தேய்த்துக்கொள்வார்கள்.
வெண்ணெய் மிதக்கும் மோர்
யாருக்கும் அப்போது காபியோ டீயோ குடித்துப் பழக்கமில்லை. நுரையோடு கறந்த பாலைத்தான் பிள்ளைகளுக்குச் சொம்பில் கொடுப்பார்கள். அவர்கள் விளையாட்டு வேகத்தில் அவசரமாய்க் குடித்துவிட்டு உதட்டின் மீது சிறு வெள்ளையாய் முளைவிட்ட மீசையைத் துடைத்துக் கொண்டே ஓடுவார்கள். இளைஞர் களுக்குப் பெரிய சொம்பு நிறையப் பால். பெரியவர்களுக்கு இன்னும் நன்றாகக் கடையாமல் சிறு சிறு புள்ளி களாக முகம்காட்டும் வெண்ணெய்த் துணுக்குகள் கலந்தமோர்.
பெண்கள் முக்கியமாகச் சுக்கு காப்பிதான் குடிப்பார்கள். சுக்குடன் கொத்தமல்லி, நாலு மிளகு, ஒரு கைப்பிடி துளசி, ஒரு கைப்பிடி தூதுவளை இத்தனை வகையோடு கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பானை நிறையப் பால் காய்ந்துகொண்டிருந்தாலும் வெறும் காப்பியைத்தான் குடிப்பார்கள். லேசான தலைவலி, காதடைப்பு, தொண் டையில் சளிக்கட்டு எல்லாம் காணாமல்போக, உடம்பு சொடக்குவிட்டதுபோல் சுறுசுறுப்பாக இருக்கும்.
மேமுந்தியை ராத்திச் சொருகிக் கொண்டு வேலையில் இறங்கி விடுவார்கள். இளவட்டங்கள் மந்தையில் கிடக்கும் கல்லை யார் அதிகமாகத் தூக்கித் தோள் வழியே போடுவதென்று போட்டிக்கு ஆயத்தமாவார்கள். சிறுவர்கள் ஓலைக் காத்தாடி செய்து அது காற்றில் சுற்றச் சுற்ற ஓடுவார்கள். இன்னும் சிலர் பனங்காயில் வண்டி செய்து ஒருவரை ஒருவர் மிஞ்சுவதற்காக ஓடுவார்கள்.
நோய் நீக்கும் வெஞ்ஞனம்
யாரும் உயரமாக, அறிவு வளர, சுறு சுறுப்புடன் இருக்க என்று சொல்லிக் கொண்டு செயற்கையான ஊட்டச்சத்து பானங்களையெல்லாம் குடிக்கவில்லை. ஆனாலும், வளர்ந்தார்கள். திடமாக வளர்ந்தார்கள். யாரும் அவர்களுக்குச் சோறு ஊட்டவில்லை. அன்றைய அம்மாக்களுக்குச் சோறு ஊட்ட நேரமில்லை. குழந்தைகளுக்கு அம்மா சோறு ஊட்டுவதுபோல் தூக்கத்தில் கனவுதான் காணமுடிந்தது. அதைக்கூட நிறைவாகக் காணமுடியாமல் சாமக்கோழி கூவி அர்களை எழுப்பிவிட்டது.
அப்போதெல்லாம் சில பெண்களுக்கு வெஞ்ஞனம் வைக்கக்கூட நேரமிருக்காது. கமலத்தண்ணி வாய்க்காலுக்கு வந்துவிடுமே அல்லது பருத்தி எடுத்தவர்கள் ‘கூறு’ வைப்பதற்காகக் காத்துக்கொண்டு இருப் பார்களே என்று அவசரமாய் வீட்டைச் சுற்றி இருக்கும் பிரண்டைத் தண்டு, தூதுவளை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சிறு இஞ்சித் துண்டு, பூண்டு, சிறு புளி உருண்டை ஆகிய வற்றை வத்தலோடு வரையோட்டில் வறுத்து, ஆட்டுக்கல்லில் ஆட்டித் துவையலாகக் கஞ்சிக்கு வைத்துவிடுவார்கள். வெஞ்ஞனத் துக்கு வெஞ்ஞனம் மருந்துக்கும் மருந்து. வயிற்றிலிருக்கும் நோயெல்லாம் நீங்கிவிடும்.
இப்போதுள்ள நோய்களெல்லாம் அப்போது வெகு தொலைவில் நின்று ஏக்கத்தோடு அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன. கருக்கலிலேயே காட்டுக்காய் பறிக்கப் போகிறவர்கள் வீட்டிலிருக்கும் கஞ்சி வர நேரமாகிவிட்டால் பச்சையாயிருக்கும் பிஞ்சுக் கத்தரிக்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் என்றும் பழுத்த தக்காளி யென்றும் வயிறு நிறையத் தின்றுவிடுவார்கள். அதோடு தாயைப் பழித்தாலும் தண்ணியைப் பழிக்க கூடாதென்று ஆற்றில், ஓடையில், வாய்க்காலில் ஓடும் தண்ணீரைக் குடித்துச் சிறு ஏப்பம் விடும்போது அவர்களின் வயிறு மட்டுமல்ல, மனமும்கூட நிறைவுபெற்றுவிடும்.
தண்ணீர்தான் ஆதாரம்
மலையில் தரகு (மஞ்சம்புல் போன்று ஒருவகைப் புல்) அறுத்து முடித்துக் கட்டுக்கட்டிக் கல்லிடுக்குகளில் பதனமாகக் கால் வைத்து இறங்கும் அந்த நேரத்தில்கூட, ‘இந்தத் தரகைப் பக்கத்து ஊர்களில் கொண்டுபோய் விற்றால் எப்படியும் எட்டணா கிடைக்கும்; நல்ல செழும்பா செலவழிக்கலாம். புள்ளைக ரொம்ப நாளா மாம்பழமும் சீனிமிட்டாயும் கேட்டுக்கிட்டுக் கெடக்குக.
வாங்கிக் கொடுக்கலாம். ஆனா, நம்ம கூர ஒளுவுதே. மழ பெய்யிற நேரமெல்லாம் அங்கங்கே சட்டியையும் பொட்டியையும் தூக்கி வைத்தாலும் மழைத்துளி விழுந்து குமிழ் வெடித்து வெடித்துச் சிதறும் தண்ணீரில் சாணி மெழுகிய மண்தரை எல்லாமே ஈரமாகத்தான் போகிறது’ என மனத்துக்குள் நினைப்பு ஓடும்.
அந்த ஈரத்தரையில் பிள்ளைகளைப் படுக்கப்போட்டால் காய்ச்சல் வந்துவிடு மென்று படப்பில் தட்டையயோ கூளத்தையோ பிடுங்கி வீட்டுக்குள் நிரத்தி, அதன் மீது பழைய சேலையை விரித்துப் படுக்கவைப்பார்கள். நல்ல மழைபெய்தால்கூடக் காட்டுக்குப் போய்தான் ஆகவேண்டும்.
அப்போதெல்லாம் குடை கிடையாது. தானியச் சாக்கில் ‘கொங்காணி’, பனையோலையில் செய்யும் ‘கொங்காணி’ போன்றவற்றைப் போட்டுக் கொண்டுதான் காட்டுக்குப் போக வேண்டும். மழைகாலங்கள் மனிதருக்கு ரொம்ப தொந்தரவுதான் கொடுக்கின்றன.
ஆனால், அந்த மழைதானே மனிதர்களை வாழவும் வைக்கிறது. அதனால், மழை வேண்டும். மழைநீர் கிடைக்கும். அதை வீணாக்காமல் சேகரிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால், எந்த எந்த உயர்வகை பானங்கள் இருந்தாலும் காலையில் எழுந்ததும் தண்ணியைத்தான் தேடுகிறோம். அதேநேரம், இரவில் படுக்கப்போககும் போதும் தண்ணிதான் தேவைப்படுகிறது.
(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT