Published : 22 Dec 2019 10:00 AM
Last Updated : 22 Dec 2019 10:00 AM
அன்பு
கடல் கடந்து சென்றாலும், பல்வேறு மொழிகளைக் கற்றாலும் தன்னிகரகற்றது தாய்மொழி. அதனால்தான் தமிழகத்தைச் சேர்ந்த மீனா வெங்கடேசன், அபுதாபியில் வசித்தபோதும் ‘தமிழ் லேடீஸ் சர்க்கிள்’ என்ற அமைப்பை நிறுவி தமிழ்க் குடும்பங்களை ஒன்றிணைத்துவருகிறார்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் மீனா வெங்கடேஷ். சில காலம் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். திருமணத்துக்குப் பிறகு கணவருடன் மும்பைக்குக் குடியேறினார். பின்னர் அங்கிருந்து தம்பதி அபுதாபிக்குச் சென்றனர்.
மொழி தெரியாத ஊரில் என்ன செய்வது என்று புரியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார் மீனா. “மொழி தெரியாத ஊரில் இருப்பது என்பது தனித் தீவில் இருப்பதற்குச் சமம். விடுமுறை நாட்களில் கணவருடன் ஷாப்பிங், சுற்றுலாத் தளம் என எங்காவது சென்றால்தான் தமிழ்க் குடும்பங்களைப் பார்த்துப் பேச முடியும். இதுபோன்ற தருணங்களில் தமிழர்களைச் சந்திக்கும்போது பிறந்த ஊரில் இருப்பதுபோன்ற மகிழ்ச்சி ஏற்படும்.
ஆனால், அந்த மகிழ்ச்சி என்றைக்காவது ஒருநாள்தான். அதேநேரம் அரபு நாடுகளில் தமிழர்களைவிட மலையாளிகள் அதிகமாக உள்ளனர். அவர்கள் அனைவரும் சங்கமாக ஒன்றிணைந்து கலை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். அதில் தமிழர்களும் கலந்துகொள்வோம்.
அப்போதுதான் தமிழர்களுக்கு என்று தனிச் சங்கம் தொடங்கும் எண்ணம் தோன்றியது. குறிப்பாக, வீட்டில் முடங்கிக் கிடக்கும் தமிழ்ப் பெண்களை ஒன்றிணைக்கும் அமைப்பாக அது இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன்” என்கிறார் மீனா.
உறவுகளுக்கு உதவுவோம்
2001-ல் ‘தமிழ் லேடீஸ் சர்க்கிள்’ என்ற அமைப்பை மல்லிகா, செண்பகம், வள்ளி உள்ளிட்ட பத்துப் பெண்களுடன் தொடங்கியுள்ளார் மீனா. இந்த அமைப்பின்மூலம் தமிழ்ப் பெண்களுக்கான கலை நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, பரத நாட்டிய நிகழ்ச்சி எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துள்ளார்.
அதேபோல் அபுதாபியில் பிறந்த தமிழ்க் குழந்தைகளுக்காகத் தமிழ்ப் பயிற்சி வகுப்புகளையும் இந்த அமைப்பினர் நடத்திவருகிறார்கள். வருடத்துக்கு 50 மாணவர்களுடன் இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெற்றுவருகிறது. இதுவரை 500 மாணவர்கள் தமிழ் கற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்துப் பெண்களுடன் தொடங்கிய அமைப்பில் தற்போது இரண்டாயிரம் குடும்பங்களும் 200 பெண்களும் செயல்பட்டு வருகிறார்கள். இந்த அமைப்பின் பல நிகழ்ச்சிகள் அபுதாபியில் உள்ள இந்தியத் தூதகரத்துடன் இணைந்து நடத்தப்படுகின்றன. கலை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமி, சென்னைப் பெருவெள்ளம் போன்ற பேரிடர்களுக்கும் இந்த அமைப்பினர் நிதியுதவி வழங்கியிருக்கிறார்கள். மீனா வெங்கடேஷ்பிரகதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT