Published : 15 Dec 2019 10:29 AM
Last Updated : 15 Dec 2019 10:29 AM
த.சத்தியசீலன்
மதிய வேளை. கொட்டித் தீர்த்த கனமழைக்கு நடுவே சொட்டச் சொட்ட நனைந்தவாறு ஆதரவற்றவர்கள், முதியவர்கள், மாநகரில் சுற்றித் திரியும் யாசகர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கிக்கொண்டிருந்தார் பெண் ஒருவர்.
கோவை காந்திபுரம் புதிய மேம்பாலத்தின் அடியிலும் மாநகரின் சில பகுதிகளிலும் இருக்கும் ஆதரவற்றோருக்கு அவர் அன்றாடம் உணவளிப்பதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அந்தப் பெண் தினமும் தங்களுக்கு மதிய உணவளிப்பதுடன், கிழிந்த கந்தலான ஆடைகளை அணிந்திருப்பவர்களுக்குச் சேலை, லுங்கி, சட்டை போன்றவற்றை வாங்கித் தருவதாகவும் ஆதரவற்றோர் சிலர் சொன்னார்கள்.
அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கையில் பையுடன் அந்தப் பெண் வந்தார். நாம் பேச முயன்றபோது சில நிமிடங்களில் வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். “இன்னைக்குக் கொஞ்சம் தாமதமாகிடுச்சு. அவங்க பசியோடு காத்திருப்பாங்க. அதனாலதான், காத்திருக்கச் சொன்னேன்” என்று தன்மையுடன் சொன்னவரின் பெயர் வெண்ணிலா.
வெண்ணிலாவின் பூர்விகம் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை. கோவைக்குக் குடிபெயர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தற்போது கோவை கணபதி பகுதியில் குடும்பத்தினருடன் இருக்கிறார்.கோவையில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலைசெய்துவருகிறார்.
சிறு வயது முதலே மற்றவர்களின் கஷ்டத்தில் பங்கெடுத்துக்கொள்ளும் குணம்கொண்ட வெண்ணிலா தன்னால் முடிந்த அளவுக்குப் பிறருக்கு உதவுவது வழக்கம். கோவைக்கு வந்த பிறகு இங்குள்ள தன்னார்வலர்களுடன் இணைந்து, சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். “ஆதரவற்றவர்கள், முதியவர்கள், யாசகர்கள்னு நிறையப் பேர் பட்டினியால் வாடுவதைப் பார்க்க வருத்தமாக இருந்தது. அவர்களுக்கு ஒரு வேளையாவது உணவளிக்க நினைத்தேன். வீட்டிலேயே சமைத்து, பொட்டலம் கட்டிக் கொண்டுவந்து கொடுக்கத் தொடங்கினேன்” என்று சொல்லும் வெண்ணிலா இதைச் சில ஆண்டுகளாகச் செய்துவருகிறார். உணவோடு அவ்வப்போது ஆடைகளையும் தருகிறார். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பிரியாணி, இனிப்பு, காரம் போன்றவற்றைத் தருகிறார்.
நிறைவே நிம்மதி
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள், நோயாளிகள் என யாரையாவது பார்த்தால், தொண்டு நிறுவனங்களுக்குத் தகவல் தெரிவித்து, அங்கே சேர்த்துவிடுகிறார். நோய்வாய்ப்பட்டவர்கள் நிராதரவாக இருந்தால் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சேர்க்கிறார். வசதியில்லாத குழந்தைகளின் படிப்புக்குத் தன்னால் இயன்றவற்றைச் செய்துவருகிறார். தன் வருமானத்தில் இதற்கென்றே குறிப்பிட்ட தொகையை ஒதுக்கிவிடுகிறார் வெண்ணிலா.
“இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. இதனால் கிடைக்கிற நிம்மதியையும் நிறைவையும்விட வாழ்க்கையில் வேறென்ன வேண்டும்?” என்கிறார்.
'Beggerless City in India' என்ற பெயரில் முகநூல் குழு ஒன்றைத் தொடங்கி, அதன்மூலம் முகநூல் நண்பர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். ஒவ்வொரு நாளும் தான் சந்திக்கும் நபர்கள் பற்றிய அனுபவங்களையும் அதில் பதிவிட்டுவருகிறார். சிறு துளி நிச்சயம் பெருவெள்ளமாகி ஆதரவற்றோரின் துயர் துடைக்கும் என நம்புகிறார் வெண்ணிலா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT