Published : 24 Nov 2019 10:08 AM
Last Updated : 24 Nov 2019 10:08 AM

பெண்கள் 360: தீட்சிதரின் தகாத செயல்

தொகுப்பு: ரேணுகா

கோயிலுக்கு அர்ச்சனை செய்யவந்த லதா என்பவரை சிதம்பரம் நடராஜர் கோயிலைச் சேர்ந்த தீட்சிதர் தர்ஷன் அறைந்ததால், அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் லதா (51). இவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணிபுரிந்துவருகிறார். நவம்பர்16-ம் தேதி தன் மகன் பிறந்தநாளையொட்டி நடராஜர் கோயிலுக்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்குள்ள விநாயகர் சந்நிதியில் பணியாற்றிவந்த தீட்சிதர் தர்ஷனிடம் அர்ச்சனைப் பொருட்களை லதா கொடுத்துள்ளார். மகனின் பெயர், ராசி, நட்சத்திரம் ஆகியவற்றைச் சொல்வதற்கு முன்பாகவே அர்ச்சனை முடிந்துவிட்டதாக் கூறி அர்ச்சனைப் பொருட்களைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.

அது குறித்து லதா கேட்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் தர்ஷன் கோயில் வளாகத்திலேயே தகாத வார்த்தைகளால் லதாவைத் திட்டி கன்னத்தில் அறைந்து கீழே பிடித்துத் தள்ளியிருக்கிறார்.

இதைப் பார்த்த பக்தர்கள் அந்தக் காட்சியை வீடியோ எடுத்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் லதா புகார் அளித்துள்ளார். இதையடுத்து தர்ஷன் மீது பெண்களைத் துன்புறுத்துதல், அவதூறாகப் பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மேலும், சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் பொதுச்சபை தர்ஷனை இரண்டு மாதங்கள் பணி இடைநீக்கம் செய்ததுடன் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. வழக்குப் பதிவுசெய்யப்பட்டதையடுத்து தர்ஷன் தலைமறைவாகியுள்ளார். அவரைத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

வேண்டும் சுதந்திரம்

அன்றாடப் பள்ளி வாழ்க்கையால் தன்னுடைய சுதந்திரமே பறிபோய் விட்டதென ஒன்றாம் வகுப்பு மாணவி ருஹி ஷா பேசியுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. குஜராத்தில் உள்ள காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ருஹி ஷா, “காலையில் எழுந்து பல் துலக்கி, குளித்து, பால் குடித்து, பள்ளிக்குச் சென்று படித்து, மீண்டும் வீட்டுக்கு வந்து டியூஷன், ஓவிய வகுப்பு, ஸ்கேட்டிங் வகுப்பு, மீண்டும் வீட்டுக்கு வந்து ஓவியம் வரைவது, ஹோம் வொர்க் எழுதுவது, இதற்கிடையில் அப்பா, அம்மா, அக்காவின் திட்டு என ஆண்டு முழுவதும் இதேதான் நடக்கிறது.

பள்ளியைக் கண்டுபிடித்தவர் மட்டும் என் கையில் கிடைத்தால் அவரைத் துவைத்து இஸ்திரி போட்டுவிடுவேன். ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் அனைவரையும் அறையில் போட்டுப் பூட்டிவிட வேண்டும். அப்புறம் எல்லாக் குழந்தைகளும் எவ்வளவு நாட்கள் வேண்டுமோ அவ்வளவு நாட்கள் தூங்க வேண்டும்” என உணர்வுபொங்கப் பேசியுள்ளார். குழந்தையின் இந்தப் பேச்சு ஆறு வயது குழந்தை மீதான கல்விச் சுமையை வெளிப்படுத்துகிறது.

ஒரே ஆண்டில் இரண்டு தங்கம்

சீனாவில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்களை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றுள்ளார். பத்து மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அவர் 250.8 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். கடந்த சில மாதங்களுக்கு முன் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற போட்டியிலும் இளவேனில் தங்கம் வென்றார். ஒரே ஆண்டில் இரண்டாம் முறையாக சர்வதேசப் போட்டிகளில் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனைபடைத்துள்ளார்.

வீடியோ எடுக்கும் விவசாயப் பெண்கள்

விதைக்கும் கைகள் கேமராவை இயக்கத் தொடங்கியிருக்கின்றன. தெலங்கானாவில் உள்ள செஞ்சு பழங்குடியினக் கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயிகள், தங்களது அன்றாட வாழ்வை வீடியோவாகப் பதிவுசெய்துவருகின்றனர். ‘டெக்கன் மேம்பாட்டு அமைப்பு’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் 30 ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள தலித், பழங்குடியினப் பெண்கள் மத்தியில் பணியாற்றிவருகிறது.

அதன் ஒரு பகுதியாக அப்பகுதி மக்களுக்கான ஊடகத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த ஊடகத்தின் நிருபராகப் பழங்குடியினப் பெண்களே செயல்பட்டுவருகிறார்கள். விதைப்பது, அறுவடைசெய்வது போன்ற சாகுபடி பணிகளோடு தங்களது அன்றாட வாழ்க்கை முறை, அரசிடம் மக்கள் எதிர்பார்க்கும் கோரிக்கை போன்றவற்றையும் பதிவுசெய்கிறார்கள்.

இந்த வீடியோக்களைப் பார்க்கும் அடுத்த தலைமுறையினர் எளிதாக விவசாயம் செய்ய கற்றுக்கொள்ள முடியும் என்கிறார்கள். செஞ்சு பழங்குடி விவசாயிகளின் இந்த முயற்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது.

தாய்க்கு மகள் எழுதிய கடிதம்

“தத்தெடுக்கப்படும் ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ்வதற்கான உரிமை உண்டு. தத்தெடுக்கப்படும் குழந்தைக்கு வாழ்க்கை கொடுப்பதால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் களிமண் போன்றவர்கள். தங்களிடம் யார் அன்பு செலுத்துகிறார்களோ அவர்களிடம் சர்க்கரைபோல் கரைந்துவிடுவார்கள். அன்பு கிடைக்கப்பெறாத குழந்தைகளைத் தத்தெடுப்பதன்மூலம் அன்பு கிடைக்க வழிசெய்யலாம். சுஷ்மிதா சென் இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளார்.

அவரைப் போல் மற்றவர்களும் செயல்பட வேண்டும். கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு அன்பை வழங்க வேண்டும். நான் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்பதை வெளிப்படையாகச் சொல்லக் கஷ்டப்பட்டிருக்கிறேன். அதனால்தான் இதை எழுதினேன்”

- அலிஷா. பத்து வயதாகும் இவர், நடிகை சுஷ்மிதா சென் தத்தெடுத்த இரண்டாம் பெண்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x