Published : 27 Oct 2019 11:16 AM
Last Updated : 27 Oct 2019 11:16 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 29: சோம்பேறி செல்லச்சாமி

பாரததேவி

நல்ல தின்பண்டமில்லாமல் நாக்கு செத்துக்கிடக்கும் தன் நான்கு பிள்ளைகளைக் கூப்பிட்டுக்கொண்டு துளசி கடலை ஆய்வதற்கு வந்திருந்தாள். கல்யாணம் முடித்த புதிதில் எல்லாப் பெண்களையும்போல் தனக்கென்று ஒரு ஓட்டு வீடு கட்டிக்கொள்ள வேண்டும், ஒரு பால் மாடும் இரண்டு ஆடுகளும் பிடித்துக்கொள்ள வேண்டும், அள்ள அள்ளக் குறையாமல் அடுக்குப்பானை, குலுக்கை நிறைய தானியங்களும் பயறு பச்சைகளும் இருக்க வேண்டும் என்று பல கனவுகளோடு செல்லச்சாமியைக் கைப்பிடித்தாள். அந்தக் காலத்தில் இப்படியான வாழ்க்கைதான் எல்லாப் பெண்களின் கனவாகவும் இருந்தது.

கல்யாணமாகி வந்துவிட்டால் போதும். மூன்று மாதங்கள் பெண் வீட்டில் விருந்தென்றால் மறுவீடு வந்த பிறகு தாய், புள்ளைகள் என்று வீட்டுக்கு வீடு மட்டுமல்ல; கிராமம் கிராமமாகக் கூட்டிப்போய் விருந்தான விருந்து வைப்பார்கள். அதில் முதல் விருந்து வட்டில், கும்பாவில்தான் இருக்கும். வெஞ்ஞனம் வைப்பதற்குச் சிறு கொட்டுக்கூடைகள் என்று கும்பா போலவே இருந்தது. எல்லாமே வெண்கலத்தில்தான் இருக்கும். பித்தளையில் இருந்தாலும் உள்ளே ஈயம் பூசி இருப்பார்கள். இதற்குக் காரணம் இரண்டு படி, மூன்று படி ஆக்குவதால் சோறு கெட்டுப் போகக் கூடாதென்று புளிச்ச தண்ணி வைத்துத்தான் சோறாக்குவார்கள். அதனால்தான் பித்தளைப் பாத்திரங்களை அப்படியே யாரும் புழங்குவதில்லை.

நல்லெண்ணெய்ச் சோறு

வீட்டுக்கு முக்கியமான விருந்தாளிகள் வந்தாலும் சரி, கல்யாணமாகி இளஞ்சோடிகள் வந்தாலும் சரி முதலில் சோறு வைத்து, கைநிறைய நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு அரை வட்டுக் கருப்பட்டியைத் தட்டிப்போட வேண்டும். இதுதான் முதல் விருந்து. அதன் பிறகு கோழி அடிப்பது, முட்டை பொரிப்பது, பருப்பு, காய் என்று வைப்பதெல்லாம். கருப்பட்டி தட்டிப்போட்டு எண்ணெய் ஊற்றிச் சாப்பாடு வைக்காவிட்டால் அவர்களைக் காடுகளிலும் கரைகளிலும் கேவலமாகப் பேசுவார்கள். “எண்ணெ ஊத்திக் கருப்பட்டிப் போட்டுச் சோறு வைக்கத் துப்பில்லாதவ எல்லாம் எதுக்கு விருந்துக்குக் கூப்பிடுதா?” என்று பொறணி பேசுவார்கள்.

ஐந்தாம் மாதம்வரை விருந்து சாப்பிட்ட செல்லச்சாமி அதன் பிறகும் வேலைக்குப் போகாமல் ருசியான சாப்பாட்டுக்காகவே அலைந்தான். முதலில் துளசி பிரியமாகவும் அன்பாகவும் அவனை வேலைக்குப் போகச் சொல்லி அனுப்பிவைத்தாள். போன கொஞ்ச நேரத்தில், “எனக்கு வவுத்து வலி பொறுக்க முடியல. அதேன் வந்துட்டேன்” என்று வந்துவிடுவான். துளசியும் மூன்று நாள் ஓசி தயிர் வாங்கி அதில் வெந்தயத்தை அரைத்துக் கலக்கி அவனைக் குடிக்கச் செய்வாள். பிறகும் வேலைக்குப் போக மாட்டான்.

போகப் போகத்தான் அவன் குணம் தெரிந்தது. அவன் சுத்த சோம்பேறி என்று புரிந்துகொண்டாள்.

காயத்தைப் போக்கும் ஆவாரை

வக்கனையாகவும் ருசியாகவும் சாப்பிட்டுவிட்டு மந்தையில் போய் உட்கார்ந்துகொண்டு தாயக்கட்டம், ஆடு புலி ஆட்டம் போன்றவற்றை ஆடுவானே தவிர வேலைக்கென்று போகவே மாட்டான். துளசி இவனுக்குச் சாப்பாடு கொடுத்துத் தள்ளாத குறையாக வேலைக்கு அனுப்பிவிட்டுத் தானும் வேலைக்குப் போவாள். சற்று நேரத்திலேயே, “உன் புருசனுக்குக் காய்ச்சலாம். மந்தையில வந்து படுத்திருக்கான்”னு தாக்கல் வந்துவிடும். அதிலும் சும்மா வர மாட்டான். ஒரு முறை விறகு வெட்டுகிறேன் என கையில் வெட்டுக்காயத்துடன் வந்தான். அந்த வெட்டைப் பார்க்கையில் துளசிக்கு வேண்டுமென்று அவனே வெட்டிக்கொண்டது போலிருந்தது. இப்படிக் காயங்களுக்கு நல்ல மருந்து பொன்னாவரைதான். நீள நீளக் காய்களோடும் மஞ்சள் பூக்களோடும் கொஞ்சம் வளர்ந்த செடியாக எந்தத் தரிசு நிலத்திலும் ஓடைகளிலும் இது கிடைக்கும். அதன் இலைகளை ஒரு பிடி எடுத்துவந்து சின்ன வெங்காயத்தைத் தட்டி, தேங்காய் எண்ணெய் விட்டு வதக்கி, காயம்பட்ட இடத்தில் இரண்டு நாட்களுக்குக் கட்டிவிட்டால் போதும்; உடனே ஆறிவிடும். துளசியும் அந்த வைத்தியத்தைச் செய்து புருசனின் காயத்தை ஆற்றிவிட்டாள். ஆனாலும் என்ன செய்ய? செல்லச்சாமியின் சோம்பேறித்தனம் போகவில்லை.

இதற்குள் நான்கு குழந்தைகள் ஆகிவிட்டன. துளசிதான் இரவும் பகலுமாகப் பாடுபட்டுப் பிள்ளைகளை மட்டுமல்லாமல் புருசனையும் காப்பாற்றினாள். பிள்ளைகளுக்குச் சாதாரணமான பயறு, பனங்காய்களைக்கூட அவளால் தின்பண்டமாகக் கொடுக்கமுடியவில்லை. அவளுடைய பிள்ளைகள் மந்தையில் பழுத்து, கீழே விழுந்து கிடக்கும் அத்திப்பழம், ஆலம்பழம், புளியம்பழம் போன்றவற்றை மட்டுமே தின்று, தின்று ருசியான தின்பண்டத்துக்காகக் காத்துக் கிடந்தார்கள். அதனால், துளசி இன்னைக்குப் பொழுது வேலைக்குத் தானியம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. பிள்ளைகள் செழிக்க நிலக்கடலையத் திங்கட்டும் என்று கூட்டிவந்தாள்.

தாலி தொலைந்தால் என்னவாகும்?

முந்தைய காலத்தில் பெண்கள் அணிந்திருக்கும் தாலிக் கயிற்றைத் தொலைத்துவிட்டால் அவர்களின் சேலையில் ஒரு முடிச்சுப் போட்டு அங்கே இருக்கும் மர நிழலில் தனியாக உட்கார வைத்துவிடுவார்கள். தொலைந்துபோன தாலி திரும்பக் கிடைக்கும்வரை அவள் ஒரு சொட்டுத் தண்ணீர்கூடக் குடிக்கக் கூடாது. அப்படித் தாலி கிடைக்காவிட்டால் பக்கத்து ஊரில் இருக்கும் ஆசாரியிடம் புதுத் தாலி செய்துகொண்டு வந்து கழுத்தில் கட்டும்வரை பட்டினியாகவே இருக்க வேண்டும். காட்டில் இருக்கும் மரத்தடியில் தனியாக உட்கார்ந்து இருப்பவளை இருட்டியபின் கூட்டிவந்து ஊருக்குள் இருக்கும் மரத்தடியில் உட்காரவைத்துவிடுவார்கள். பிறகு அவள் கழுத்தில் புதுத் தாலியைப் புதுக் கயிற்றில் கோத்துக் கட்டிய பின்தான் அவளுக்குச் சாப்பாடு போடுவார்கள்.

கல்யாணமான புதிதில் ஆறு மாதம் ஒரு வருசம் வரை தாலிக் கயிற்றுக்கு மஞ்சள் மெருகேற்றிச் சேலைக்குள் கயிற்றைப் பத்திரப்படுத்துகிற பெண்கள், பின்பு கழுத்தில் கயிறு கிடப்பதையே மறந்துபோவார்கள். இத்தனைக்கும் அப்போது பெண்கள் ரவிக்கை அணிய மாட்டார்கள். அப்படியிருந்தாலும் அவர்களுக்குக் கயிறு நினைவு வராது. எங்கேயாவது ஊரு, தேசம் போவதென்றால் மட்டும் கொஞ்சம் நிதானமாக முகத்துக்கு மஞ்சள் பூசி, தாலிக் கயிற்றுக்கும் மஞ்சள் பூசுவார்கள். நெற்றியில் பொட்டு வைக்கும்போது தாலிக்கும் வைத்து, மரச் சீப்பால் தலைவாரி பெரிய கொண்டையாகப் போட்டுக்கொண்டு புறப்படுவார்கள். அப்போதுதான் அவர்கள் உடம்பில் தையல் விழாத சேலை இருக்கும்.

கிழிசலைத் தைக்கும் பெரிய மனுசிகள்

ஒருவருக்கு இரண்டு, மூன்று சேலைகளே இருக்கும். பகல் முழுக்கக் காட்டிலேயே வேலை செய்வதாலும், வீட்டுக்கு வந்து தானியங்களைக் குத்திப் புடைப்பதாலும் ஆட்டுச் சாணி, மாட்டுச் சாணியை அள்ளுவதாலும் சேலையில் அழுக்கு அடை அடையாய் ஒட்டிக்கொண்டிருக்கும். மாதத்துக்கு மூன்று வெளுப்புதான் என்று வண்ணார்கள் அழுக்கெடுக்கக் கொண்டுபோய் வெள்ளாவியில் வைத்து அவித்து, கல்லில் அழுக்குப் போக ஓங்கி அடித்துத் துவைத்தால் சேலைகள் சீக்கிரத்தில் கிழிந்துவிடும்.

காட்டில் வேலைக்கென்று வர முடியாத பெரிய மனுசிகள் போயிலையை வாய்க்குள் ஒதுக்கியவாறு நிழல் கண்ட இடத்தில் அமர்ந்து பழங்கதை பேசிக்கொண்டிருப்பார்கள். கிழிந்த சேலைகளை அவர்களிடம் கொடுத்துத் தைத்துக் கொடுக்கும்படி கொடுத்துவிட்டு வருவார்கள். அவர்களுக்குச் சத்தியமாக நூல் கோக்கத் தெரியாது. பார்வை மங்கிப்போய் ஒரு பொருள் இரட்டையாகவும் மூன்றாகவும் தெரியும். அதனால், அங்கே ஓடித் திரியும் வெடப்பிள்ளைகளைக் கூப்பிட்டு ஊசியில் நூலைக் கோத்துக் கொடுக்கச் சொல்வார்கள். இப்படித்தான் சேலைகளில் தையல்கள் நாலாபுறமும் பூக்களின் டிசைன்களாக மாறியிருக்கும்.

(நிலா உதிக்கும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x