Published : 27 Oct 2019 11:14 AM
Last Updated : 27 Oct 2019 11:14 AM

முகங்கள்: பார்ப்பவரெல்லாம் சமைக்கலாம்

என்.கௌரி

சமையல் என்பது கலை. அந்தக் கலை கைவரப்பெறுவதற்குக் கடின உழைப்பு தேவைப்படும் காலம் ஒன்றிருந்தது. ஆனால், இப்போது அப்படியல்ல. சமையல் கலையை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்ற நிலையைப் பல யூடியூப் சேனல்கள் உருவாக்கியிருக்கின்றன. அப்படியொரு பிரபலமான யூடியூப் சேனல், ‘மெட்ராஸ் சமையல்’. அமெரிக்காவின் டல்லாஸ் நகரத்தில் வசித்துவரும் ஏஞ்சலா ஸ்டெஃபி இந்த சேனலை நிர்வகித்துவருகிறார். இவருக்குப் பூர்விகம் நாகர்கோவில்.

2015 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த யூடியூப் சேனலைத் தற்போது 21 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். தமிழ்நாட்டின் பாரம்பரியமான, எளிமையான உணவு வகைகளில் ஆரம்பித்து நவீன உணவுவரை 300-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை எப்படிச் சமைப்பது என்று கற்றுக்கொடுத்திருக்கிறார் ஸ்டெஃபி. எவ்வளவு கடினமான உணவையும் எளிமையாகவும் சுவையாகவும் சமைப்பது என்பதை மூன்றிலிருந்து ஆறு நிமிட வீடியோக்களில் அவர் விளக்கிவிடுகிறார்.

“சின்ன வயசுல இருந்தே எதையாவது புதுமையா சமைக்கணும் என்ற ஆர்வம் அதிகம். மேல்நிலைப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் ஹாஸ்டலில் தங்கிப் படித்ததால் வார இறுதியில் வீட்டுக்கு வரும்போது அம்மாவுடன் சமைப்பதுதான் எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. படித்து முடித்தபிறகு, மூன்று ஆண்டுகள் சென்னையில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றினேன். திருமணம் முடிந்து அமெரிக்கா சென்றபிறகு, எங்கள் நண்பர்களுக்கு ‘தேங்க்ஸ் கிவ்விங் டின்னர் பார்ட்டி’ கொடுத்தோம். நான் சமைத்த உணவைச் சாப்பிட்ட நண்பர்கள் அனைவரும் என் சமையலைப் புகழ்ந்ததுடன் செய்முறை விளக்கத்தை ஆர்வத்துடன் கேட்டார்கள். என் கணர் கிராஸ்லிதான் சமையலுக்கான யூடியூப் சேனலைத் தொடங்கும் ஆலோசனையைச் சொன்னார். அப்படித் தொடங்கியதுதான் ‘மெட்ராஸ் சமையல்’ சேனல்” என்று உற்சாகமாகச் சொல்கிறார் ஸ்டெஃபி.

திட்டமிடல் அவசியம்

ஒரு வாரத்துக்கு இரண்டு பதார்த்தங்கள் என ஒரு மாதத்தில் எட்டு வீடியோக்களைத் தவறாமல் பதிவேற்றிவிடுகிறார் ஸ்டெஃபி. “முழுக்க முழுக்க தீவிரமான திட்டமிடலுடன்தான் தொடர்ந்து என்னால் இயங்க முடிகிறது. ஒரு பதார்த்தத்தைப் பதிவிட வேண்டுமென்று திட்டமிட்டுவிட்டால், ஒரு மாதத்துக்கு முன்பே சரியான ருசி வரும்வரை அதைப் பல முறை செய்துபார்ப்பேன். என் கணவருக்கும் சமையலில் ஆர்வம் அதிகம். அவரும் நன்றாகச் சமைப்பார். சிலநேரம் இருவரும் சேர்ந்து சமைத்து, ருசித்த பிறகுதான் சேனலில் பதிவேற்றுவேன். சேனல் தொடங்கியபோது வீடியோ எடுப்பதில் என் கணவர் உதவினார். கொஞ்ச நாளில் நானே கேமராவை செல்ஃப் மோடில் வைத்துவிட்டு சமைக்கப் பழகிக்கொண்டேன். எடிட்டிங்கும் கற்றுக்கொண்டேன். என் குழந்தைக்கு இப்போது ஒரு வயது ஆகிறது. அவளை வைத்துகொண்டு சமைப்பதெல்லாம் நடக்காத காரியம். அதனால், அவள் தூங்கிபிறகு, இரவு 11 மணிக்குத்தான் வீடியோ எடுக்கிறேன். டெலிவரியின்போது இரண்டு மாதங்கள் சமைக்க முடியாது என்பதால், முன்பே திட்டமிட்டு சில வீடியோக்களை எடுத்துவைத்திருந்தேன். இப்போதும் அப்படித்தான். ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் முன்பே வீடியோக்களைத் தயாரித்து வைத்துக்கொள்வேன். என்னுடைய இந்த ஆர்வத்தை விடாமல் தொடரவே நினைக்கிறேன்” என்று சொல்கிறார் அவர்.

காத்திருந்தால் கிடைக்கும் வருமானம்

ஆரம்பித்த உடனே எந்த சேனலும் பிரபலமடைவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பார்வையாளர்கள் அதிகரிப்பார்கள். யூடியூபில் வெற்றிகரமாக இயங்குவதற்குத் தொடர் முயற்சி அவசியம் என்று சொல்லும் ஸ்டெஃபி, “யூடியூப்பில் சேனல் ஆரம்பித்தவுடனே அதிக வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. சமையல் மட்டுமல்லாமல் எந்தத் துறை சார்ந்து யூடியூப் சேனல் ஆரம்பிப்பதாக இருந்தாலும் ஆர்வம் இருந்தால் மட்டுமே அது வெற்றியடையும். ஏனென்றால், சேனல் ஆரம்பித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வருமானம் கிடைக்காது. போகப்போகத்தான் வருமானம் கிடைக்கும். அதுவரைக்கும் பொறுமையும் ஆர்வமும் இருந்தால் மட்டுமே சேனலைத் தொடர முடியும். ‘மெட்ராஸ் சமையல்’ சேனல் எனக்குத் தேடித் தந்திருக்கும் அடையாளத்தை முக்கியமானதாகப் பார்க்கிறேன். என்னுடன் கமென்ட்ஸில் உரையாடுபவர்கள், பாசமாக அக்கா என்று அழைக்கிறார்கள். இந்த சேனலை என் குடும்பம்போலத்தான் உணர்கிறேன்” என்கிறார்.

சமையல் செய்ய வேண்டுமென்று நினைப்பவர்கள் ஒருமுறை முயன்றுவிட்டு, சரியாக வரவில்லையென்றால் மனம்தளரக் கூடாது என்று சொல்லும் இவர், “சித்திரமும் கைப்பழக்கம் என்பதுபோல சமையலும் பழகப் பழகத்தான் வரும். என்னைப் பொறுத்தவரை, சமையலைக் கலையாகத்தான் பார்க்கிறேன். ஒரு குடும்பத்தை இணைக்கும் வலிமை அதற்கு இருக்கிறது. வீட்டுச் சமையல் என்பது உணர்வுரீதியான இணைப்பு. பெண்கள் மட்டுமே சமைக்க வேண்டுமென்ற சிந்தனை தற்போது மாறிவருகிறது. என் சேனலைப் பார்த்து சமையல் கற்றுக்கொண்ட ஆண்கள் பலர் எனக்கு நன்றி சொல்கிறார்கள். அதேமாதிரி, தங்கள் மனைவிக்குப் பிடித்த உணவைச் சமைக்க என் வீடியோக்கள் உதவியதாகப் பலர் என்னிடம் சொல்கிறார்கள். இது ஒரு நல்ல மாற்றம்” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x